Header Ads



பொலிஸ் சீருடை அணிந்த கொள்ளைக்கும்பல் சிக்கியது - இலட்சக்கணக்கில் மீட்கப்பட்டது பணம்

பொலிஸ் சீருடை அணிந்து தங்களை பேலியகொடை குற்றத்தடுப்பு பொலிஸார் என்று தெரிவித்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பல் ஒன்றை நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த போது நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொங்கொடமுல்ல பகுதியில் வீடொன்றுக்கு காரொன்றில் பொலிஸ் சீருடையில் சென்ற நால்வர் தங்களை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் என்று அடையாளப்படுத்தி கொரோனா நோய்த்தொற்று சந்தேக நபர்களை இந்த வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பாக குறித்த வீட்டை முழுமையாக சோதனை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சீருடையில் வருகை தந்ததன் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் வீட்டை சோதனை செய்ய அனுமதித்துள்ளனர். இதன்போது வீட்டில் இருந்தவர்களை அறையொன்றில் பூட்டிவைத்துவிட்டு வீட்டிலிருந்த சுமார் ஏழு இலட்சத்து 80ஆயிரம் ரூபாய் பணம் ஒரு இலட்சம் பெறுமதியான நகைகள், நான்கு கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதன் போது வீட்டில் இருந்தவர்கள் 119 என்ற அவசர பொலிஸ் சேவை இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவித்து கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த கொச்சிக்கடை குற்றத்தடுப்பு பொலிஸார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை பரிசீலித்து அவர்கள் வருகைதந்த வாகனத்தின் இலக்கங்களை கொண்டு சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கந்தானை மற்றும் பன்விலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர் அவர்களிடம் இருந்து வாகனங்களை வாடகைக்கு வழங்குபர்களிடமிருந்து வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட ஹைபிரிட் கார்கள் மூன்றும் ஜீப் ரக வாகனம் ஒன்றும், கையடக்க தொலைபேசிகள் மூன்று, உள்நாட்டு கைக்குண்டு ஒன்று, பொலிஸ் சீருடைகள் இரண்டு, இராணுவ சீருடைகள் இரண்டு, ஏழு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்தகாலங்களில் கொஸ்கொட சந்தி, கிறியுள்ள பகுதிகளில் இதேபோன்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே வேறொரு ஹெரோயின் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளதாகவும் மேலும் இருவரை தேடிவருவதாகவும் கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை (15) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

இவ் விசாரணைகள் அனைத்தும் மேல் மாகாண பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வழிகாட்டலுக்கு அமைய நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சாமான் ,கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி .ஸ்ரீநாத் ஜெயக்கொடி ஆலோசனைக்கு அமைய கொச்சிக்கடை குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஷிரான் பெரேரா குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

No comments

Powered by Blogger.