June 22, 2020

சஜித் தரப்பு சிறிகொத்தாவிற்கு உரிமை கோர முடியாது - ஐ.தே.க திட்டவட்டமாக அறிவிப்பு

(நா.தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்தியமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்திருப்பதன் ஊடாக எமது தீர்மானத்தை நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.

எனவே இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இருவேறு கட்சிகளாகும்.

அதன் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமைக்கோ அல்லது கட்சித்தலைமையகமான சிறிகொத்தாவிற்கோ உரிமைகோருவார்களாயின், அதற்கெதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எமக்கிருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்தார்.

கட்சித்தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பிற்கு முரணாக வேறொரு கட்சியில் இணைந்துகொண்ட 102 பேரின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குக் கட்சியின் செயற்குழு தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

எனினும் அத்தீர்மானத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியினால் மேன்முறையீடு செய்யப்பட்ட போதிலும், தற்போது நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருக்கின்றது.

எனவே இனி அவர்கள் சிறிகொத்தாவைக் கைப்பற்றும் நோக்கில் செயற்படத் தேவையில்லை.

அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று நீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்டது. எனவே இனி ஐக்கிய தேசியக் கட்சி வேறு, ஐக்கிய மக்கள் சக்தி வேறு என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

தற்போது கட்சியின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்ட அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கு விரும்பியிருந்தால், அதற்கான போராட்டத்தைக் கட்சிக்குள் காணப்படும் வழிமுறைகளின் பிரகாரம் மேற்கொண்டிருக்க முடியும்.

ஆனால் அதனைவிடுத்து அவர்கள் பிரிந்து சென்றதோடு மாத்திரமல்லாமல், கட்சியின் யாப்பிற்கு முரணாக தனியாகக் கட்சியொன்றையும் ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வாறு கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி நேரடியாக நன்மையடையும் என்று அறிந்திருந்தும் அவர்கள் இதனைச் செய்ததன் ஊடாக, யார் உள்ளக டீல்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது.

அடுத்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதானி கருணா அம்மான் வெளியிட்டிருக்கும் கருத்து மிகவும் பாரதூரமானதாகும்.

பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரைக் கொன்றதாக அவர் வெளிப்படையாகவே கூறுகின்றார். எனவே இதுகுறித்து முறையான விசாரணை முன்னெடுக்கப்படுவது மாத்திரம் போதுமானதல்ல. மாறாக அவர் குறித்தவொரு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அது இடைநிறுத்தப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எம்மை 'புலிகள்' என்றார்கள். ஆனால் நாம் எந்தவொரு சட்டவிரோத அமைப்பிற்கும் துணைபோகும் விதமாக செயற்படவில்லை.

நாட்டின் அனைத்து இன, மத மற்றும் மொழிக் குழுமங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் விதமாகவே செயற்பட்டோம். அதேபோன்று தற்போது பாரிய வீழ்ச்சியினை எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீள நிமிர்த்தும் ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே சாத்தியமாக்கப்படக்கூடிய விடயமாகும். ஆகவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

பொதுத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தனித்து அரசாங்கம் அமைப்பதே எமது எதிர்பார்ப்பாகும். அரசாங்கம் அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைவதற்கான எந்தவொரு எதிர்பார்ப்பும் எமக்கில்லை.

அதேபோன்று தற்போதைய அரசாங்கம் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வோம் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் உண்மையில் 113 உறுப்பினர்களைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியே தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்கும். 

0 கருத்துரைகள்:

Post a comment