Header Ads



குற்றவாளிகளின் விளையாட்டு, மைதானமாக சிறைச்சாலைகள் - சட்டமா அதிபர் கடும் ஆவேசம்

(எம்.மனோசித்ரா)

குற்றங்களைச் செய்வதற்கு பயிற்சியளிக்கும் இடமாக தற்போது சிறைச்சாலைகள் காணப்படுகின்றன. இதனால் குற்றவாளிகளின் விளையாட்டு மைதானமாக சிறைச்சாலைகள் உள்ளது என்று கடும் விசனம் தெரிவித்த சட்டமா அதிபர் தபுல டி லிவேரா, சிறைச்சாலைகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதால் நேர்மையான செயற்திறன் மிக்க அதிகாரிகளை தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு ரிமாட் சிறைச்சாலைக்கு இன்று -19- வெள்ளிக்கிழமை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போது சிறைச்சாலை அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றும் போதே சட்டமா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்,

எனக்கு இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். சிறைச்சாலைக்கு உத்தியோகபூர்வமாக வருகை தந்த முதலாவது சட்டமா அதிபர் நான் என்பதில் பெருமையடைகின்றேன். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிக முக்கியமான விடயத்தை வலியுறுத்துவதற்காகவே நான் இங்கு வருகை தந்தேன்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துஷார உப்புல்தெனிய பாரிய பொறுப்புக்கள் உள்ளன. அந்த பொறுப்புக்களை இலகுவாக நிறைவேற்றிவிட முடியாது. அவற்றை நிறைவேற்றுவதற்கு அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளினதும் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் அத்தியாவசியமானதாகும்.

நாம் தற்போது நேர்மையான செயற்திறன் மிக்க அதிகாரிகளையே எதிர்பார்க்கின்றோம். நேர்மையாக சட்ட ரீதியாக செயற்படுகின்ற அதிகாரிகள் நிச்சயம் தெரிவு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் சிறைச்சாலை அதிகாரிகளாகிய நீங்கள் நாட்டில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றவரலாவீர்கள்.

சிறைச்சாலைகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாம் நேரடியாகப் பேசுவோம். இங்கு எவ்வாறான நிலைமை காணப்படுகிறது என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். உங்களது உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னரே இங்கு வருகை தந்துள்ளேன். அத்தோடு அங்கிருந்து எனக்கு கிடைக்கப் பெறும் தகவல்களும் உள்ளன.

இங்கு சில ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் உள்ளனர். அந்த அதிகாரிகள் யார் என்று இனங்காண வேண்டும். தற்போது காணப்படும் நிலைவரத்துக்கு அமைய சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. குற்றச் செயல்களைச் செய்வதற்காக பயிற்சியளிக்கும் ஸ்தலமாகவே சிறைச்சாலைகள் காணப்படுகின்றன. இங்கு ஒழுக்கமின்மையே இதற்கான காரணமாகும்.

சிறைச்சாலைகளுக்குள்ளேயே குற்றங்கள் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.  பாதாள உலகக் குழுவினர் இதற்குள் உள்ளனர். அதனை நீங்கள் அறிவீர்கள். சிறைக்குள் ஒரு தொகுதியினரும் வெளியில் ஒரு தொகுதியினரும் உள்ளனர். இந்த இரு பிரிவினரும் இணைந்து நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களை முன்னெடுக்கின்றனர். கையடக்தொலைபேசி பாவனை மூலமே இவர்கள் செயற்படுகின்றனர்.

அவை நிறுத்தப்பட வேண்டம். ஆனால் இங்கு அதிகாரிகள் சேவையாளர்களாகியுள்ளனர். இவற்றை நிறுத்த முடியும் என்று உங்களை ஊக்கப்படுத்தவே நான் இங்கு வருகை தந்தேன். முதலில் நாம் யதார்த்தத்தை இணங்காண வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.