Header Ads



ஞானசார தேரரின் ரீட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது நிராகரிப்பு

பொதுத் தேர்தலுக்காக நான்கு மாவட்டங்களில் போட்டியிட கலகொட அத்தே ஞானசார தேரர் பிரதிநிதித்துவப்படுத்தும் ´அபே ஜன பலய´ கட்சி சார்பில் வேட்பு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் குறித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் நீதிபதி ஏ.எச்.எம்.டீ.நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

´அபே ஜன பலய´ கட்சி சார்பில் குருணாகல், கொழும்பு, களுத்துறை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்காக வேட்பு மனுக்கள் -தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களே நிராகரிக்ப்பட்டமைக்கு எதிராகவே குறித்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

´அபே ஜன பலய´ கட்சி சார்பில் போட்டியிடும் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரத்தன தேரர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

´அபே ஜன பலய´ கட்சி சார்பில் தாக்கல் செய்யபட்ட வேட்பு மனுவில் சமாதான நீதவானின் கையொப்பம் இல்லாமையால் அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் குறித்த வேட்பு மனுக்களை நிராகரித்திருந்தனர்.

இந்த நிலையில் வேட்பு மனுக்களை நிராகரிக்க தேர்தல் சட்டங்களுக்கு அமைய மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என அவர்கள் தமது மனுக்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

ஆனப்படியால் தம்மால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறும் அந்த தீர்மானத்தை அதிகாரமற்றதாக்குமாறும் தெரிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு அவர்கள் கேட்டிருந்தனர்.


அதேபோல் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறும் ´அபே ஜன பலய´ கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.