Header Ads



ஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணத்தை தயாரித்தவர் கைது


(செ.தேன்மொழி)

ஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்து மோசடியில் ஈடுப்பட்டமை தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வங்கியின் தலைமை காரியாலயத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 கடந்த மே மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் இலங்கை வங்கியின் தலைவருக்கு கிடைக்கப் பெற்ற கடிதமொன்று தொடர்பிலே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் போது இலங்கை வங்கியிலிருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த நபரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் ஜனாதிபதியின் கையொப்பத்திற்கு சமமான கையொப்பம் இடப்பட்டிருந்துள்ளதுடன், அது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடித உரைக்கு சமமான உரையில் அடைக்கப்பட்டே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை இலங்கை வங்கியின் தலைவரை சந்திக்குமுகமாக வருகைத் தந்திருந்த நபர்களுள் ஒருவரான சந்தேக நபரை அழைத்து விபரங்களை கேட்டபோது, அவர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட கடிதத்தை போன்ற கடிதமொன்றை காண்பித்துள்ளார். இந்த கடிதம் தொடர்பில் சந்தேகம் எழுந்ததை அடுத்து வங்கி அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை மோசடி விசாரணை பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் தனது சொந்த மடிக்கணணி மூலமே குறித்த பத்திரங்களை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குருணாகலையிலுள்ள சந்தேக நபரின்  வீட்டை சோதனைக்குட்படுத்திய குற்றப் புலனாய்வு பிரிவினர், மடிக்கணணி மற்றும் பென்ரைவ் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளனர்.

குருணாகலை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.