Header Ads



மலேசியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள், நாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை

தொழில்களுக்காக மலேசியாவுக்கு சென்றிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக என்ன செய்வது என்பதை அறியாது தவிக்கும் தம்மை இலங்கை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் மலேசியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்களுக்காக சென்றுள்ள 200க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் ஆங்காங்கே சிக்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சில நகரங்களை மூட மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. கடந்த மார்ச் மாதம் நகரங்கள் மூடப்பட்டதன் காரணமாக அதுவரை தாம் செய்து வந்த தொழில்களை இழந்துள்ளதாக மலேசியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு உட்பட வேறு தேவைகளுக்காக இவர்கள் கையிருப்பில் இருந்த பணமும் செலவாகியுள்ளதால், தற்போது பொருளாதார சிக்கலும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தாம் தங்கி இருக்கும் இடங்களில் போதுமான சுகாதார வசதிகளும் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வருமானம் இல்லாத காரணத்தினால், பலர் உணவு தொடர்பான பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

தொழில் நிமித்தம் மலேசியாவுக்கு சென்றிருந்த ஏனைய நாடுகளை சேர்ந்தவர்கள் அவர்களின் தாய் நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். இலங்கையர்கள் மாத்திரமே நாடு திரும்ப முடியாமல் இருக்கின்றனர்.

மலேசிய விமானத்தில் தம்மால் நாடு திரும்ப முடியும் என்ற போதிலும் வெளிநாட்டு விமானங்கள் இலங்கையில் தரையிறங்க முடியாது என தெரிவித்துள்ளதாகவும் ,அந்த தடையை நீக்கி தமக்கு உதவி செய்யுமாறும் மலேசியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.