Header Ads



இஸ்லாமிய வங்கியை உலகில் முதன்முதலாக, உருவாக்கிய சிற்பி ஹாஜி சயீத் காலமானார்

Zaman Abdul Rahim

உலகளாவிய வங்கிப் பரிவர்த்தனையில் எவரும் செய்திராத ஓர் இமாலய சாதனையாக வட்டியில்லா வங்கியை உருவாக்கி, ஷரீஅத்தின் உயரிய பெருமிதத்தை நிலைநாட்டிய ஹாஜி சயீத் பின் அஹ்மது அல் லூத்தாஹ் எனும் மாமேதை நேற்று 28/06/2020 அன்று துபாயில் காலமானார் என்ற செய்தி நம்மை மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கி விட்டது.

1975 இல் இஸ்லாமிய வங்கியை உருவாக்கி, ஷரீஅத் ரீதியிலான வங்கி முறையை செயல் வடிவத்தில் சாதனையாக்கி நிரூபனம் செய்த மாமனிதர். உலக அரங்கில் இஸ்லாமிய வங்கிப் பரிவர்த்தனையை புனித திருக்குர்ஆனின் சத்திய முழக்கத்தை முன்னிறுத்தி மிகத் துணிச்சலோடு பாடம் நடத்திக் காட்டியவர். உலகப் பொருளாதாரம் மிகப்பெரிய தேக்கத்தில் இருந்த போது மற்ற வங்கிகளைக் காட்டிலும் இஸ்லாமிய வங்கிகளே மிகச் சிறப்பாக இயங்க முடியும் என சாதித்துக் காட்டிய அற்புத சாதனையாளர். அனைத்து சமூக மக்களோடும் அன்பொழுகப் பழகிய மனிதநேய மாண்பாளர்.

இந்தியாவின் வங்கி வணிகத்தை மேம்படுத்த 2008 ஆம் ஆண்டு முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. ரகுராம் ராஜன் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆய்வுக் குழு மத்திய அரசுக்கு மிகச்சிறந்த பல பரிந்துரைகளை வழங்கியது. அவைகளுள் மிக முக்கியமான ஒன்றாக " இந்தியாவின் வங்கி மேம்பாட்டு வளர்ச்சிக்கும், பொருளாதார சுரண்டலைத் தடுப்பதற்கும் ஏற்ற ஒரே வழி இஸ்லாமிய வங்கிக் கொள்கையே" என மிக அழுத்தமாகக் குறிப்பிட்டதை மறந்திட முடியாது.

துபாய் இஸ்லாமிய வங்கியில் ஏறத்தாழ 24 ஆண்டுகள் பணியாற்றிய மனநிறைவு என் வாழ்நாளில் வல்ல இறைவன் எனக்கு வழங்கிய மிகப்பெரிய பேறு. "எங்கள் சேர்மன் ஹாஜி சயீத்" என்று பெருமிதத்தோடு அடிக்கடி அழைத்து அளவளாவிய பல நிகழ்வுகள் கண் முன்னே நிழலாடுகின்றன. பல வணிக நிறுவனங்களின் அதிபராக உயர்ந்து அமீரகத்தின் மிகச் சிறந்த தொழிலதிபர் என போற்றப்பட்டவர்; பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆதரவற்றோரின் பிள்ளைகளை அழைத்து வந்து தன் இல்லத்தின் ஒரு பகுதியிலேயே தங்க வைத்து அவர்களைத் தன் பிள்ளைகளாகவே வளர்த்து இன்புற்றவர்; பல தர்ம காரியங்களில் தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொண்டு வெளிச்சம் காட்டிக் கொள்ளாதவர்; கல்விப் பணிகளில் தலைசிறந்து விளங்கியதோடு 1986 இல் முதன் முதலாக பெண்கள் மருத்துவக் கல்லூரியை நிறுவியவர்; இன்ஷூரன்ஸ் தொழிலையும் இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படையில் நிகழ்த்த முடியும் என 1979 இல் முதன்முதலாக இஸ்லாமிய இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியவர். இத்தகைய பேராளுமையாகத் திகழ்ந்து விளங்கிய ஹாஜி சயீத் அவர்களின் மறைவுச் செய்தி இன்றைய அரபுலகத்தில் மிகப் பெரும் சோகத்தை உருவாக்கியிருக்கிறது.

இறைவா! உனது பேரருளை சுமந்து, தூய முஃமினாக வளர்ந்து, எல்லா நிலையிலும் உன் மீது அச்சம் கொண்டவராக வாழ்ந்து மறைந்திருக்கிற ஹாஜி சயீத் அவர்களின் பாவங்களை மன்னித்து, உனது ஏற்றமிகு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் அழகிய சன்மானத்தை வழங்குவாயாக! ஆமீன்.

M. அப்துல் ரஹ்மான் 
முன்னாள் கணினித் துறைத் தலைவர் 
துபாய் இஸ்லாமிய வங்கி

2 comments:

  1. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர்ராஜிஹூன் - கட்டுரையாளர் எம். அப்துல் ரகுமான் , இந்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என நம்புகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.