June 22, 2020

தேர்தல் விஞ்ஞாபனத்தை, வெளியிட்ட நஸீர் அஹமட்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

சிறீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவர்  நஸீர் அஹமட்டின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு ஏறாவூரில் இடம்பெற்றது.

அவரது முன்னாள் முதலமைச்சர் பணிமனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சிப் பிரமுகர்கள், புதிதாக அவரது அணியில் இணைந்து கொண்டவர்கள், கட்சி ஆதரவாளர்கள், பிரமுகர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அவரது விஞ்ஞாபனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன மத பிரதேச வேறுபாடுகள் கடந்து செய்து முடிக்கப்பட வேண்டியப ல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் மகத்தான உங்கள் ஆதரவைப் பெற்று வெற்றியீட்டியது தொடக்கம் இரண்டரை வருட காலங்கள் விவசாய, கால்நடை, கைத்தொழில், மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சராகவும் மேலும் இரண்டரை வருடங்கள் முதலமைச்சராகவும் இருந்து பல சவால்களுக்கு மத்தியில் கிழக்கு மாகாண மக்களுக்கு  திருப்திகரமாக சேவையாற்றியதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் முதலமைச்சராக இருந்த மிகக்குறுகிய காலப்பகுதியில் அதற்குமுன் இவ் அதிகாரத்தைக் கொண்டு யாரும் செய்திராத அளவுக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தேன்.

இதில் பாடசாகைள், வைத்தியசாலைகள், விவசாய மீன்பிடி கால்நடை, சுற்றுலாத்துறை பாதைகள், சிறுகைத்தொழில் உட்பட  பல்வேறு வாழ்வாதார உதவிகளின் அபிவிருத்தி  எனக்கூறிக்கொண்டே போக முடியும்.

மேலும்  குறிப்பாக பாடசாலைகள், வைத்தியசாலைகள், உள்ளுராட்சிமன்றங்கள ; போன்ற அரச நிறுவனங்களிலும் பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியிருந்தேன்.

மேலும் நிரந்தரமற்றுக் காணப்பட்ட பல நூறு அரச ஊழியர்களை அவர்களது பதவியில் நிரந்தரமாக்கினேன். அது மாத்திரமல்லாது எமது இளைஞர் யுவதிகளுக்கான பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் வெளி மாகணங்களுக்கு வழங்கப்பட்டபோது மத்திய அரச அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் போராடி அந்நியமனங்கள் முழுவதையும் கிழக்கு மாகாணத்திற்கே கொண்டு வந்து சேர்த்தேன்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு வழங்கப்பட்ட நியமனங்களை எந்தவொரு அரசியல்வாதியாலும் மாகாணத்திற்குள் கொண்டுவர முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குறுகிய காலத்திற்குள் உங்களால் எனக்குப் பொறுப்பாக வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணிகளை பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும்.

இப்பணிகளின்போது நான் இன, மத, பிரதேச மொழி வேறுபாடுகளை ஒரு போதும் காட்டியதில்லை. அப்படிப்பட்ட பாகுபாடுகள் என் சிந்தனையிலும் செயலிலும் ஒருபோதும் வந்ததில்லை.

அதேவேளை, இவ் அபிவிருத்தி நிர்மாணப்பணிகளுக்காக கொமிஷன் பணம் பெற்றதாகவோ அல்லது நியமனங்களை விற்றதாகவோ யாரும் என்னை விரல் நீட்ட முடியாது உளத்தூய்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நான் என்னிடமுள்ள செல்வங்களை இன மத பேதம் கடந்து கொடுப்பதற்கு வழிதேடுபவனே தவிர பொதுச் செத்துக்களிலிருந்து சுரண்டி எடுப்பதற்கு முயற்சிப்பவனல்ல.

கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியின்போது இறுதிக் காலகட்டத்தில் என்னால் திட்டமிடப்பட்டு அனுமதி பெறப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் தொடங்கப்படாமலும் ஏற்கெனவே தொடங்கப்பட்ட சில அபிவிருத்திப் பணிகள் முடிக்கப்படாமலும் இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப் பட்ட பின்னரான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற  உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்தவர்களால் இத்திட்டங்கள் தொடரப்பட்டு முடிக்கப்படாமல் போனது துரதிஷ்டம் என்றே கருதுகின்றேன்.

இந்நிலையில, நடைபெறப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் எமக்கான அரசியல் அதிகாரத்தை மீண்டும் வழங்க இருக்கின்றது. இவ்அதிகாரத்தை துரநோக்கு,

சிறந்த திட்டமிடல், செயற்றிறன், நேர்மை, தெளிந்த அரசியல் சிந்தனைகளைக் கொண்ட ஆளுமையானவர்களுக்கு நீங்கள் வழங்கினால் இந்த மாவட்டம் இன மத பேதமின்றி அபிவிருத்தி காணும்.

அந்தவகையில் கடந்த மாகாண சபை ஆட்சியில் எனது பணிகளை சாட்சியமாக வைத்து உங்கள் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றேன்.

சிறுபான்மைச் சமூகங்கள் சட்ட ரீதியாகவே ஒடுக்கப்படும் அவலநிலையும் எமது நிலபுலப் பிரதேசங்கள் பறிக்கப்படும் நிலையும் அபிவிருத்திப்பணிகளில் எமது மாவட்டங்கள் புறக்கணிக்கப்படும் நிலையும் ஏற்படுத்தப்படலாம்.

இதற்கான  பேரினவாத சக்திகளின் நகர்வுகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன என்பதை அண்மையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்காக அமைக்கப்பட்ட சிங்கள பேரினவாதிகளை மாத்திரம் கொண்ட வரலாற்றுத் தொல்பொருள் மரபுரிமை செயலணி போன்ற அமைப்புக்கள் எமக்கு புடம்போட்டுக் காட்டுகின்றன.

எனவே இக்காலப்பகுதிக்கான எமது நாடாளுமன்றத் தெரிவுகள் எமது உரிமைகளை

விட்டுக் கொடுக்காத அதே நேரம் இன, மத, மொழி பேதமற்ற நல்லிணக்கத்துடன் கூடிய சாதுரியமான செயற்பாடுகளையும் கொண்ட ஆளுமைகளாக அமைய வேண்டும்.

இவ்வாறான ஆளுமைமிக்க நேர்மையான ஆட்சியையே கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியில் நாம் வழங்கியிருந்தோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

நான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திற்குச் சொந்தமான ஓர் அங்குல நிலத்தையோ, முதலமைச்சருக்குரிய அதிகாரத்தில் ஒரு துளியையோ வெளிச் சக்திகளுக்காக விட்டுக்கொடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

0 கருத்துரைகள்:

Post a comment