June 19, 2020

சுதந்திரம் அடைந்த முஸ்லிம் சமுதாயம்

-நளீம் அப்துல் ரஸாக்-

ஆரம்பத்தில் ஒரு பயங்கர எதிரியாக மட்டுமே பார்க்கப்பட்ட கோரோணா நாளடைவில் மனித சமூகத்துக்கு அது பல நல்ல பாடங்களையும் விட்டுச் செல்வதை உலகம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. கொரோணா பல்வேறு வாழ்க்கைப் பாடங்களை எமக்கு கற்றுத் தந்திருந்தாலும் எனது பார்வையில் இரண்டு அம்சங்கள் பிரதானமானதாக குறிப்பிட விரும்புகிறேன்.

1. என்னுடைய முற்றத்தில் ஒரு இலையேனும் இருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று கூறும் அளவுக்கு மரங்களை வெறுத்த நம்மவர்களில் பலர் காய்கறி செடிகளும் கையுமாக பைகளில் மண்ணை நிறப்பிக் கொண்டு மரங்களும் செடிகளும் நடுவதில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட காட்சி மனதில் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதை கூறியே ஆக வேண்டும். பூச்செடிகள் மட்டுமே வளர்ப்பதில் அக்கறை காட்டிய இன்னும் சிலரோ காய்கறிச் செடிகள் மீதும் கவனத்தை குவித்தது ஆரோக்கியமான ஒரு மாற்றமே. இயற்கைக்கு எதிரான சிந்தனைப் போக்கை இனியேனும் முஸ்லிம் சமூகம் கை விட வேண்டும்.

2. இரண்டாவது பிரதானமான அம்சம், இஸ்லாமிய இயக்கங்கள் என தம்மை அழைத்துக் கொள்ளும் இயக்கங்களின் பிடி முஸ்லிம் சமூகத்தின் மீது சற்று தளர்வடைந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு இயக்கத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து பள்ளிவாசல்கள் சற்று விடுதலை பெற்றுள்ளன. நமது பள்ளிவாயில்களில் நூலகம் அமைக்கப் படுகிறதோ இல்லையோ கண்டிப்பாக மக்களின் பணத்தில் பள்ளிகளில் சமையல் அறை அமைக்க தவறுவது கிடையாது.பெரும்பாலும் நமது பள்ளிவாயில்கள் குறித்த ஒரு இயக்கத்துக்காகவே வடிவமைக்கப் படுகிறது, அந்த இயக்கத்தின் பூர்வீக சொத்தாகவே பள்ளிவாயில்கள் கருதப்படுகின்றன. 

கடந்து போன ரமலான்மாதம் அமைதியான ஒரு மாதமாக கழிந்தது. தராவீஹ் தொழுகை சம்பந்தமான விவாதங்களோ மோதல்களோ இருக்கவில்லை. பெருநாளானது ஆரவாரமற்ற, அமைதியான ஒரு பெருநாளாக அமைந்திருந்தது. பிறை குழப்பங்கள் இல்லை, சர்வதேசப் பிறை பிரச்சனை கிடையாது, எங்கு தொழுகை நடாத்துவது என்ற வாதப் பிரதி வாதங்கள் இல்லை. மிக முக்கியமாக அடுத்த முஸ்லிம்களை திட்டித்தீர்த்தும், காஃபிர் பத்வாக்கள் கொடுத்தும் வரும் பயான்கள் இல்லை. பத்வா தொழிற்ச்சாலைகள் மூடப்பட்டன (தொழிற்ச்சாலைகளை நடாத்தியவர்களுக்கு அவர்களது உயிர்களும் பசியுமே பிரதான பிரச்சினையாக மாறியிருக்க வேண்டும்). மொத்தத்தில், இயக்கங்களின் அடாவடித் தனத்துக்கு ஒட்டுமொத்த ஆப்பு வைப்பதாகவே இந்த கொரோணா அமைந்திருந்தது. 

உண்மையில், இஸ்லாமிய இயக்கங்கள் என அழைத்துக் கொள்ளும் இந்த இயக்கங்கள் முஸ்லிம் பொது மக்களின் கௌரவத்தை மதிப்பதே இல்லை. பொது மக்களை முனாஃபிக் எனவும், வழி கேடர்கள் எனவும் காஃபிர்கள் எனவும் பத்வாக்கள்  வழங்கிட சற்றேனும் தயங்குவதில்லை. ஒருவகை அடக்குமுறையையே இவர்கள் மக்கள் மீீது பிரயோகிக்கின்றனர். இந்த கொரோணா மூலம் இயக்கங்களின் அடாவடித்தனம் அற்ற வாழ்க்கை எவ்வளவு அமைதியானதும் நிம்மதியானதுமாக இருக்கின்றது என அல்லாஹ் முஸ்லிம் சமூகத்துக்கு உணர்த்தியதாகவே கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை நாசம் செய்து சமூகத்தை கூறு போட வரும் இயக்கங்கள், முஸ்லிம் பொது மக்கள் அரச, ராணுவ கெடு பிடிகளினால் அல்லல் பட்ட வேளையில் அவர்களை பாதுகாக்க வரவில்லை. இனக்கலவர காலங்களிலும் அவர்கள் ஓடி ஒழிந்து கொண்டனர். உண்மையில் அவர்கள் மக்களை பாதுகாக்கும் திராணி அற்றவர்கள் என்பதே நிஜம். எனவே முஸ்லிம் சமூகம் இந்த உண்மையை உணர்ந்து இஸ்லாமிய இயக்கங்கள் என தம்மை அழைத்துக் கொள்ளும் இயக்கங்களினால் ஏற்படப்போகும் பாரிய ஆபத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளுமா அல்லது மீண்டும் மீண்டும் இந்த இயக்கங்களின் சதி வலைகளுக்குள் சிக்குண்டு அழிந்து போகுமா என்பதே இங்குள்ள மிகப் பெரும் கேள்வியாகும். இயக்கங்களின் கோரப் பிடியில் இருந்து வெளிவரும் நாளே முஸ்லிம் சமூகத்தின் சுதந்திர நாளாகும்.0 கருத்துரைகள்:

Post a comment