Header Ads



இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர்ஜெனரல் சுரேஸ் சால்லே, ஜஸ்மின் சூக்காவிற்கு கடிதம் - சட்ட நடவடிக்கை குறித்தும் எச்சரிக்கை


இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே தனது சட்டத்தரணி மூலம் இது தொடர்பில் ஜஸ்மின் சூக்காவிற்கும் அவரது அமைப்பிற்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறிப்பிட்ட கடிதத்தில் ஜஸ்மின் சூக்காவும் அவரது அமைப்பும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரியின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜூன் முதலாம் திகதி மேஜர் ஜெனரல் சால்லேயிற்கு எதிராக பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார் என ஜஸ்மின் சூக்காவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவதூறு குற்றச்சாட்டுகள் காரணமாக உள்நோக்கம் கொண்ட சக்திகள் புலனாய்வு பிரிவின் அதிகாரிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை குறித்தும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பசன்வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கடிதத்தில் மேஜர் ஜெனரல் சாலேயின் குணாதிசயங்கள் மற்றும் அவரது திறமையான செயற்பாடுகளிற்காக அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இலங்கை குறித்த இணையத்தளம் மூலம் ஜஸ்மின் சூக்கா வெளியிட்ட அறிக்கையால் புலனாய்வு அதிகாரியின் குணாதியசத்திற்கும் கௌரவத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ஜஸ்மின் சூக்கா எதிர்காலத்தில் அவதூறு கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் தங்களின் வேண்டுகோள்கள் ஏற்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியிருக்கும் எனவும் தமது தரப்பின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.