Header Ads



தமிழர்களின் வாக்குகளை பெறவே, கருணா அப்படிக் கூறினார் - லால்காந்த

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வடக்கில் சிங்கள மக்களுக்கு எதிராகவும் தெற்கில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் ஓர் அங்கமாகவே கருணா அம்மானின் பேச்சும் இடம்பெற்றிருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பனர் லால்காந்த தெரிவித்தார்.

ஆனையிறவு முகாமில் இராணுவத்தினரை கொலை செய்ய கட்டளையிட்டதாக கருணா அம்மான் தெரிவித்திருக்கும் சர்ச்சைக்குரிய கூற்று தொடர்பாக  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆனையிறவு முகாமை விடுதலைப்புலிகள் தாக்கும்போது அங்கிருந்த இரண்டாயிரம் இராணுவ வீரர்களை கொலை செய்யுமாறு கட்டளையிட்டதாக கருணா அம்மான் திகாமடுள்ள பிரதேசத்தில் தெரிவித்ததை  நானும் கேட்டேன். அத்துடன் அவரை தேசிய பட்டியலில் வருமாறு மஹிந்த ராஜபக்ஷ் கேட்டுக்கொண்டதாகவும் அதனை மறுத்து மக்களின் ஆணையுடன் வெற்றிபெற்று, அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதனால் கருணா அம்மான் எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றார். தற்போது அவர் கிழக்கு மாகாணத்தில் வீரர் போல் செயற்பட்டு வருகின்றார். தமிழ் மக்களுக்காவே தான் இவ்வாறு செயற்பட்டதாகவும் யுத்தத்தின்போது தமிழ் மக்களின் விடுதலைக்காகவே இராணுவத்தினரை கொலை செய்ய கட்டளையிட்டதாகவும் தற்போது தெரிவிக்கின்றார். அவர் பாதுகாப்பு படையினருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு செயற்டுகின்றார்.

அத்துடன் அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே  வடக்கில் சிங்கள மக்களுக்கு எதிரான கருத்துக்களையும் தெற்கில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களையும் தெரிவிக்கின்றனர். சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற அடிப்படையிலான அரசியல் முறையை மாற்றியமைக்கவேண்டும். தேர்தல் காலம் வந்ததும் இவ்வாறான இனவாத கருத்துக்களை தெரிவித்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை  அதிகரிக்கின்றனர். இதன் மூலம்  நாட்டுக்குள் இனவாதம் தூண்டப்படுகின்றது. இதனை நிறுத்தவேண்டும். 

அதனால் கருணா அம்மான் தெரிவித்த  கருத்து பாரதூரமானவைதான். என்றாலும் தற்போது அவர் இராணுவத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதே அவரின் நோக்கமாக இருக்கவேண்டும் என்றார்.

1 comment:

  1. காட்டிக்கொடுத்தார் என்று சரத் வீரசேகர கூறியது தமிழர்கள் வாக்கினைத்தடுத்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.