Header Ads



அகவை 99 இல் முன்னாள் சபாநாயகர் மர்ஹும் MH முஹம்மத்

(என்.எம்.அமீன்)    

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.முஹம்மட் அகவை 99இல் பிரவேசித்துள்ளார். இலங்கை அரசியலில் 7 தசாப்தங்களுக்கு மேலாக அரும் பங்களிப்புச் செய்த சகல இன மக்களாலும் கௌரவிக்கப்படும் ஒரு தலைவராக ஹனீபா முஹம்மதைக் குறிப்பிடலாம்.

இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைவர்களில் மர்ஹும் எம்.எச். முஹம்மதுக்கு ஒரு தனி இடமுண்டு. 1921ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15ஆம் திகதி சட்டத்தரணி என்.எம்.எம். ஹனீபா தம்பதிகளின் மகனாக கொழும்பில் பிறந்த எம்.எச். முஹம்மதின் தாயாரது பெயர் உம்மு ஹபீராவாகும்.

மர்ஹும் முஹம்மத் தனது கல்வியை பொரளையில் உள்ள புகழ்பூத்த கிருஸ்தவப் பாடசாலையான உவெஸ்லி கல்லூரியிலே பெற்றுக் கொண்டார். உவெஸ்லி கல்லூரியில் சேர். முஹம்மட் மாகான் மாகார் முதல் முஸ்லிம் சபாநாயகர் ஏ.எச்.எஸ். இஸ்மாயில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கேற் முதலியார் எம்.எஸ்.காரியப்பர், பழீல் ஏ. கபூர், ஹலீம் ஏ. இஷாக் போன்றவர்களும் கல்வி கற்றவர்கள். திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு உதவிய மர்ஹும் எம்.எச். முஹம்மதின் தந்தை என்.எம். ஹனீபா, கொழும்பு மாநகர உறுப்பினராகப் பணிபுரிந்தார்.

தந்தையின் அரசியல் நடவடிக்கையால் கவரப்பட்ட இவர், இடதுசாரி இயக்கம் மூலம் அரசியலுக்குப் பிரவேசித்தார்.

அப்போதைய கம்யூனிஸ்ட் தலைவர்களான டாக்டர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க, பீட்டர் கெனமன், சட்டத்தரணி ஆர். துரைசிங்கம், உடகந்தேவால சரணங்கர தேரர் ஆகியோரின் உரைகளால் கவரப்பட்ட இளம் முஹம்மத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபியாக இருந்தாரே ஒழிய அங்கத்தவராக இருக்கவில்லை.

பொரளை கொட்டா வீதியில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்து அங்கு நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பிரித்தானிய ஆட்சியாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி நாட்டுக்கு சுதந்திரம் வேண்டி எம்.எச்.முஹம்மத் குரல் கொடுத்தார். எம்.எச். முஹம்மதின் குடும்பம் இலங்கை அரசியலில் பெயர் பெற்ற குடும்பம் ஆகும். இலங்கையின் சட்டசபையில் முதலாவது முஸ்லிம் உறுப்பினரான எம். சீ. அப்துர் ரஹ்மான் 1876இல் மாநகர சபை உறுப்பினரானார். முஹம்மதின் மாமனாரான இஷாக், தந்தை என்.எம். ஹனீபா ஆகியோரின் வழியில் மாநகரசபை அரசியலில் பிரவேசித்து மாளிகாவத்தை வட்டாரத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தெரிவானார்.

1947ஆம் ஆண்டு மாநகரசபைக்குத் தெரிவான இவர், 1965வரை தொடர்ந்து மாளிகாவத்தை வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். கொழும்பு மாநகரின் மேயராகவும் பணிபுரிந்தார். 1960இல் கொழும்பு மாநகரசபையின் 52ஆவது மேயராகத் தெரிவானார். கொழும்பு மாநகரசபையின் முதலாவது முஸ்லிம் மேயரும் இவரே.

எம்.எச். முஹம்மதின் பாராளுமன்றப் பிரவேசம் 1965இல் ஆரம்பித்தது. இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த பொரளையில் போட்டியிடுமாறு ஐ.தே.க.வின் அப்போதைய தலைமைத்துவம் எம்.எச்.க்கு அழைப்பு விடுத்தது. அக்காலத்தில அப்போது இத்தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் அக்காலத்தில் இரும்புப் பெண்மணியாக அறிமுகப்படுத்தப்பட்ட வீ.வீ.என். குணவர்தன ஆவார். முஹம்மத் கொழும்பு மத்தியில் போட்டியிடுவதிலே அக்கறை காட்டினார். அப்போதைய தலைவர்களான டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோரின் வற்புறுத்தலை ஏற்று, 80 வீதமாக சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொரளையில் போட்டியிட்டார். பொரளையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தோல்வி அடைந்தால் செனட் சபையில் இடமளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. மினி யுத்தம் போன்று நடைபெற்ற தேர்தலில் முஹம்மத் 1692 பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்று பொரளைத் தொகுதி எம்.பி. ஆனார். டட்லி சேனாநாயக்க அரசில் தொழில் வீடமைப்பு வேலைவாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாராளுமன்றத்துக்குத் தெரிவான முதற் கட்டத்திலே அமைச்சராகும் பாக்கியம் பெற்ற இவர், அங்கு அமைச்சரவையில் இருந்து இளம் அமைச்சராகவும் இருந்தார். தனது அமைச்சின் ஊடாக பல மாற்றங்களை எற்படுத்தியவர். அரச சேவையில் முஸ்லிம் பெண்களுக்கு 40 நாள் இத்தா விடுமுறையை அறிமுகப்படுத்தினார். 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் 592 வாக்குகளால் தோல்வியுற்ற இவர், 1997ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று போக்குவரத்து அமைச்சராகத் தெரிவானார். நாட்டின் போக்குவரத்துத் துறையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். தனியார் பஸ் சவை இலங்கையில் இவரது காலத்திலே அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைகளின் வாகனமாகக் கருதப்படுகின்ற முச்சக்கரவண்டிகளும் இவரது காலத்திலே அறிமுகப்படுத்தப்பட்டது. மர்ஹும் முஹம்மத் இலங்கையின் முதலாவது முஸ்லிம் விவகார அமைச்சராக 1981ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் உருவாக்கப்பட்டு அதன் பொறுப்பான அமைச்சராக முஹம்மத் நியமிக்கப்பட்டார்.

1989ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ அரசின் பாராளுமன்ற சபாநாயகராக எம்.எச். முஹம்மத் நியமிக்கப்பட்டு, நாட்டின் மூன்றாவது முஸ்லிம் சபாநாயகரானார். இதற்கு முன்பு இந்த உயரிய பதவியில் மர்ஹும் எச்.எஸ். இஸ்மாயீல், மர்ஹும் எம்.ஏ. பாகீர் மாகார் ஆகியோர் வகித்தனர். 9 ஆவது பாராளுமன்ற சபாநாயகராக முஹம்மத் தனது பதவிக் காலத்தில் பெரும் சவாலை எதிர்நோக்கினார். அப்போதைய ஜனாதிபதிக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிகு குற்றவியல் பிரேரணையை எதிர்நோக்க வேண்டிய நிலைமை எம்.எச். முஹம்மதுக்கு ஏற்பட்டது. 42 நாட்களாக இலங்கையின் அரசியலில் பெரும் நெருக்கடியை உருவாக்கிய இந்தக் குற்றவியல் பிரேரணையை 1991 ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி சபாநாயகர் முஹம்மத் நிராகரித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 2010 வரை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஹம்மத், 2002 ரணில் அரசில் நகர அபிவிருத்தி அமைச்சராகப் பணி புரிந்தார். 2008ஆம் ஆண்டு கருஜெயசூரியவுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு ஆதரவு வழங்கினார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேசக்கரம் நீட்டிய 11 பேரில் எம்.எச். முஹம்மதும் ஒருவர். இவர் பாராளுமன்ற விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2010 பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியில் தேசியப்பட்டியலில் இவர் பெயர் இருந்த போதும் இவர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படாததனால், 2010 இவரது அரசியல் வாழ்வு முற்றுப்பெற்றது.

இஸ்லாமிய தஃவாப்பணியில் முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச். முஹம்மதின் பங்களிப்பு அபரிமிதமானது. 1960இல் கொழும்பு மேயரானது முதல் இவர், இஸ்லாமிய தஃவாப் பணியில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார். 1962ஆம் ஆண்டு பாகிஸ்தான் கராச்சியில் தலைமையகத்துடன் இயங்கிய முஹத்தமுல் அல் - ஆலமுல் இஸ்லாமியின் இலங்கைப் பிரதிநிதியானார். அப்போது உலகப் புத்திஜீவியான கலாநிதி இனாமுல்லாஹ்வுடன் தொடர்பை ஏற்படுத்தி, அதன் கிளையையும் இலங்கையில் நிறுவினார். 1962இல் இலங்கையில் இஸ்லாமிய நிலையத்தை ஸ்தாபித்தார். இன்று முஸ்லிம்களது முக்கிய மையமாக மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையம் அவரது மகன் முன்னாள் மேயரும் சவூதி அரேபியாவின் தூதுவருமான ஹுஸைன் முஹம்மத் தலைமையில் இயங்கி வருகின்றது. உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய இயக்கங்களின் ஒன்றான ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமியின் ஸ்தாபக அங்கத்தவர்களுள் ஒருவராக மரணிக்கும் வரை செயற்பட்டார்.

மன்னர் பைஸலின் ஆசீர்வாதத்துடனே ராபிதா ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் இணைந்ததன் மூலம் முஹம்மதுக்கு உலக முஸ்லிம் தலைவர்களுடன் நெருங்கி செயற்படும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கைக்குப் பல முஸ்லிம் தலைவர்கள் இவரது அழைப்பின் பேரில் வருகை தந்தனர். பல முஸ்லிம் நிறுவனங்களுடன் தொடர்புகள் உருவாக்கப்பட்டன. இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி மூலம் உயர்கல்வி பெறும் முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் இவரது முயற்சியாலே அறிமுகப்படுத்தப்பட்டது. வறிய முஸ்லிம் மாணவர்களது கல்வி மேம்பாட்டுக்கு இந்த நிதியம் ஒரு வரப் பிரசாதகமாக அமைந்துள்ளது.

முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு அரச கௌரவம் திட்டம் இவர் முஸ்லிம் விவகார அமைச்சராக இருக்கும் போது  1987இல் ஆரம்பிக்கப்பட்டது. முதன்முறையாக 10 எழுத்தாளர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் உதவி வழங்கியதன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு முஸ்லிம் சமய விவகார அமைச்சராக நியமனம் பெற்ற மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர்; 'வாழ்வோரை வாழ்த்துவோம்' எனும் இத்திட்டத்தை ஆரம்பித்து வருடாந்தம்; அமுல்படுத்தும் திட்டமாக அறிமுகப்படுத்தினார்.

ஹஜ் பயணங்களை மேற்கொள்வோருக்கு இலங்கையில் விஸா வழங்கும் முறை எம்.எச்.சின் முயற்சியாலே ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்பு புதுடில்லி, ராவல்பிண்டிக்;குச் சென்று விஸா பெறவேண்டிய நிலை இருந்தது. புனித கஃபத்துல்லாஹ்வை கழுவும் இப்புனித பணியிலே எம்.எச். முஹம்மத் ஒவ்வொரு வருடமும் பங்கு கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார். 1960இல் மக்காவிலே ஹரம் ஷரீப் வியாபித்தல் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் எம்.எச் முஹம்மத்; பங்கு கொண்டார்.

இலங்கை அரசியல் வானில் பல சாதனைகளை நிலை நாட்டிய மர்ஹும் முஹம்மத், 2016 ஏப்ரல் 25ஆம் திகதி இறையெய்தினார்.

95 வருடங்கள் உயிர் வாழ்ந்த மர்ஹும் முஹம்மத்தினது பணிகள் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறப்படல் வேண்டும். இதில் அவரது பிள்ளைகளுக்கும் அவர் ஸ்தாபித்த மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்துக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.    

No comments

Powered by Blogger.