Header Ads



மாளிகாவத்தை சம்பவம் - 7 பேர் பிணையில் இன்று விடுதலை


மாளிகாவத்தை நெரிசல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் 7 பேருக்கும் பிணை வழங்க நீதவான் காஞ்சன டீ சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார். 

இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்கள் 7 பேரும் 150000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

புலனாய்வு நடவடிக்கைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க வேண்டாமென பொலிஸார் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர். 

எனினும் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், ‘சம்பவம் நடந்த தினம் காலை 10.30 மணி முதல் பொலிஸார் இந்த ஒன்றுகூடல் குறித்து அறிந்து வைத்திருந்தனர். எனினும், ஒன்றுகூடலைத் தடுக்க பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நெரிசல் ஏற்பட்ட பின்னரே பொலிஸார் அவ்விடத்துக்குச் சென்றுள்ளனர். இவ்விடயமாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் உள்ளக விசாரணையொன்றும் நடைபெற்று வருகின்றது’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

இதற்கமையவே, குறித்த 7 சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. 

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், மாளிகாவத்தை தனியார் இடமொன்றில் பிரதேச மக்களுக்கு பணம் பங்கிடப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் மூன்று பெண்கள் உயிரிழந்ததோடு, 9 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.