Header Ads



அம்பாறையில் 7 Mp க்களை தெரிவுசெய்ய 540 வேட்பாளர்கள் களத்தில் - முன்னாள் அரசியல்வாதிகள் போட்டி

திகாமடுல்ல மாவட்டத்தில் பொதுத் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்கள் தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொவிட் 19 அறிவுறுத்தல்கள்,ஆலோசனைகள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளியைப் பேணியவாறு பொதுமக்கள் சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், சமூக வலைத்தளங்களினூடான கலந்துரையாடல்கள், பிரசார உரைகள், நேர்காணல்கள், உள்ளூர் ஊடகவியலாளர் சந்திப்புகள் என்பன பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று வேட்பாளர்களின் விருப்பிலக்கம் பொறித்த விளம்பரங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. வேட்பாளர்கள் திகாமடுல்ல மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் நேரடியாகச் சென்று தங்களது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர். விருப்பு வாக்குப் பெறும் முயற்சியில் அவர்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் மொத்தம் 07 பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஒரு வேட்பு மனுவில் 10 பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 540 பேர் இம்முறை திகாமடுல்ல மாவட்ட தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்றப் பிரதிநிதிகளுடன் பல புதிய முகங்களும் இம்முறை வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டுள்னர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் மகாசபை, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறிலங்கா சமாஜவாதிக் கட்சி, ஈ.பி.டி.பி, ஜே.வி.பி, லிபரல் கட்சி, தேசிய ஜனநாயக முன்னணி, ஜனசெத பெரமுன, நவ சிகல உறுமய உள்ளிட்ட 20 பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சிகளும், 34 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 54 வேட்புமனுக்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திகாமடுல்ல மாவட்டத்தில் அதிகமான சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள போதிலும், பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவலில்லை.கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 1,51,013 வாக்குகளைப் பெற்று நான்கு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 89,334 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 45,421 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது.

இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தயாகமகே, பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரும், ஐ.ம.சு.கூ. சார்பில் விமலவீர திசாநாயக்க, சிறியாணி விஜேவிக்கிரம ஆகியோரும், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கவீந்திரன் கோடிஸ்வரனும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். இம்மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 2019ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் மொத்தம் 05 இலட்சத்து 13 ஆயிரத்து 979 வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை தேர்தல் தொகுதியிலிருந்து 177,144 பேரும், பொத்துவில் தொகுதியிலிருந்து 168,793 பேரும், சம்மாந்துறை தொகுதியிலிருந்து 90,405 பேரும், கல்முனை தொகுதியிலிருந்து 77,637 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலக தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த 2019 நவம்பர் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை விடவும் இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 10,189 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் மொத்தம் 503,790 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாவட்டத்தில் இம்முறை பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியற் கட்சிகளின் அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் என அரசியல்துறை சார்ந்தவர்கள் போட்டியிடும் தேர்தல் களமாக திகாமடுல்ல தேர்தல் களம் திகழ்கின்றது.

No comments

Powered by Blogger.