Header Ads



50 பேருடன் ஜும்ஆ தொழுகையை நடாத்துவதில் சிக்கல்கள் - உலமா சபை, வக்பு சபை இன்று கூடி ஆராய்வு

ஏ.ஆர்.ஏ. பரீல்

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொழுகைக்காக பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை நடாத்துவது தொடர்பில் நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐவேளை ஜமாஅத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகைகளை நடாத்த வக்பு சபை அனுமதி வழங்கியுள்ள போதிலும், இவற்றில் ஒரே நேரத்தில் 50 பேர் வரை மாத்திரமே பங்கேற்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே தற்போது பள்ளிவாசல்களில் ஐவேளைத் தொழுகைகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும் ஜும்ஆ தொழுகையின்போது ஆயிரக் கணக்கானோர் ஒன்றுகூடும் வாய்ப்புள்ளதால், 50 பேருடன் மட்டுப்படுத்தி ஜும்ஆ தொழுகையை நடாத்துவது நடைமுறைச்சாத்தியமற்றது என நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகங்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் வக்பு சபைக்கும் அறிவித்துள்ளன.

இந் நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் பொதுத் தீர்மானம் ஒன்றை எட்டும்பொருட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, வக்பு சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகள் இன்றைய தினம் சந்திப்பொன்றினை நடாத்தவுள்ளதாக உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

இதேவேளை ஜும்ஆப் பள்ளிவாசல்களில் மாத்திரமன்றி தமது பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் ஜும்ஆ தொழுகையை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

இதற்கிடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை நடாத்துவதா இல்லையா என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினதும் வக்பு சபையினதும் இன்றைய தீர்மானத்திற்காக காத்திருப்பதாக கண்டி மற்றும் கொழும்பு பள்ளிவாசல் சம்மேளனங்கள் தெரிவித்தன.

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் இலங்கையில் சகல பள்ளிவாசல்களும் மூடப்பட்டு கூட்டுத் தொழுகைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜுன் 12 ஆம் திகதி முதல் அத்தடை தளர்த்தப்பட்டு ஒரே நேரத்தில் 50 பேர் ஒன்றுகூடி, சமூக இடைவெளி பேணி தொழுகைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

1 comment:

  1. Issue 50 Tokens after Friday Fajr Prayers allowing them to attend Jumma Salath. Let others pray as they wish

    ReplyDelete

Powered by Blogger.