Header Ads



ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை 24 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்செய்ய உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை எதிர்வரும் 24 ஆம் திகதி கோட்டை நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர் செய்யுமாறு, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று உத்தரவிட்டார்.

நேற்றைய தினம்,  கிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலை குண்டுத்  தாக்குதல் விவகார வழக்கு நகர்த்தல் பத்திரம் ஊடாக சி.ஐ.டி.யினரால் விசாரணைக்கு எடுக்க கோரப்பட்டது.

அதன்போது முன் வைக்கப்பட்ட விஷேட கோரிக்கைக்கு அமையவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு மேலதிகமாக, எதிர்வரும் 24 ஆம் திகதி மன்றில் ஆஜராக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் தனியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அடையாள அணிவகுப்பின் சாட்சியாளர்களான 10  மாணவர்களுக்கும் நீதிமன்றம் மன்றில் ஆஜராக சி.ஐ.டி. ஊடாக அறிவித்தல் அனுப்பியது.

நேற்று மாலை,  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய செனவிரத்ன, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர விமலசிறி ஆகியோர்,  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் ஊடாக மன்றில் ஆஜராகினர். இதன்போது மன்றில் விஷேட கோரிக்கையை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்,

'ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமை வகித்ததாக கூறப்படும்  சேவ் த பேர்ள் அறக்கட்டளை ஊடாக, புத்தளம் அல் சுஹாரியா மத்ரஸாவுக்கு 24 மாணவர்கள் அனுப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களில் 18  மாணவர்களிடம் தற்போது வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானோர்  கொழும்பு வடக்கு, கொழும்பு கிழக்கை சேர்ந்தவர்கள். வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். அநாதரவான குடும்பங்களை சேர்ந்தவர்கள்.

 இவ்வாறு குறித்த மத்ரஸாவுக்கு அனுப்பப்பட்டுள்ள  இந்த மாணவர்களுக்கு மேலதிகமாக அங்கு வேறு மாணவர்களும் இருந்துள்ளனர். எனினும் இவர்கள் மட்டும் தனியாகவே ஒரு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அதில் அவர்களுக்கு அமெரிக்க, இஸ்ரேல் நாடுகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தும் போர் காட்சிகள்  வீடியோ வடிவில் காண்பிக்கப்பட்டுள்ளன.  இதன் ஊடாக அவர்களை  சண்டை மனநிலையின் பால் ஈர்க்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 அங்கு அவ்வாறான  நடவடிக்கைகளின் போது ஹிஜாஸ் வருகை தந்ததாகவும், வேறு உபதேச நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு தற்கொலை குண்டுதாரிகளான  சஹ்ரான், இன்சாப் போன்றோரும்  வருகை தந்துள்ளதாகவும்  சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 எனவே பெயரளவில் ஹிஜாச் என சாட்சியாளர்கள் கூறும் நிலையில், அவரை அடையாளம் காண வேண்டிய தேவை உள்ளது. எனவே அவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த  உத்தர்விடுமாறு கோருகின்றேன்.' என பிரதி சொலிச்ட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோரினார்.

 அந்த கோரிக்கை பிரகாரமே, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை எதிர்வரும் 24 ஆம் திகதி கோட்டை நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர் செய்யுமாறு  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 பொறுப்பதிகாரிக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

No comments

Powered by Blogger.