June 18, 2020

2011 உலகக்கிண்ணம் பணத்திற்காக தாரைவார்க்கப்பட்டது என்பதை


2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நியூஸ்ஃபெஸ்ட்டின் Newsline விசேட தொகுப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான இயலுமை இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்கான அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் விவாதத்தில் ஈடுபடவும் தாம் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பணத்திற்காக கிண்ணம் தாரைவார்க்கப்பட்டதில் வீரர்களை இணைத்துக்கொள்ளவில்லை எனவும் ஒருசில தரப்பினரால் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.

2011 ஏப்ரல் 2 ஆம் திகதி உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன், அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் உபாதைக்குள்ளானதால் சமிந்த வாஸூம், சுராஜ் ரந்திவும் குழாத்தில் இணைக்கப்பட்டனர்.

இறுதிப்போட்டியில் இலங்கை அணி 4 மாற்றங்களுடன் களமிறங்கியது.

அதுவரை போட்டிகளில் பங்கேற்றிருந்த சாமர சில்வா, ரங்கன ஹேரத், அஜந்த மென்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோருக்கு பதிலாக இறுதிப் போட்டியில் சாமர கப்புகெதர, திசர, பெரேரா, சுராஜ் ரந்திவ், நுவன் குலசேகர ஆகியோரை அப்போதைய தெரிவுக்குழு இணைத்தது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் அணித்தலைவரான அர்ஜூன ரணதுங்க கூறிய கருத்தை மேற்கோள்காட்டி 2017 ஜூலை மாதம் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வௌியிட்டிருந்தது.

இந்தப் போட்டி தொடர்பாக விசாரணை நடத்தும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் இருப்பதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிறி ஜயசேகர 2017 ஆம் ஆண்டு தெரிவித்தார்.

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகே செயற்பட்டார்.

அப்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக டீ.எஸ்.டி. சில்வாவும், செயலாளராக நிஷாந்த ரணதுங்கவும் செயற்பட்டனர்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கான பணிப்பாளராக சுராஜ் தந்தெனிய பொறுப்பு வகித்தார்.

இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக அரவிந்த டி சில்வாவும், அமல் சில்வா, ரஞ்சித் பெர்னாண்டோ, ஷபீர் அஸ்கர் அலி ஆகியோர் தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவும் இருந்தனர்.

இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து தொடர்பாக பதிலளித்துள்ள அப்போதைய அணித்தலைவரான குமார் சங்கக்கார, இது பாரதூரமானதொரு குற்றச்சாட்டு என கூறியுள்ளார்.

இது பாரதூரமானவொரு குற்றச்சாட்டாகும். அவர் தன்னிடமுள்ள சகல சாட்சிகளையும் ஆதாரங்களையும் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவுக்கும் வழங்க வேண்டும். அவ்வாறு நடந்தால் எவரும் வெவ்வேறு விடயங்களை சிந்திக்க வேண்டியிருக்காது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இதன் ஆழத்திற்கு சென்று செயற்பட முடியும். அதுதான் சிறந்த செயற்பாடு. எனது நினைவுக்குட்பட்ட வகையில் அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக அவரே இருந்தார்

என குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் உபதலைவராக செயற்பட்ட மஹேல ஜயவர்தன இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சர்கஸ் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளதைக் காண முடிகின்றது. பெயர்களையும், ஆதாரங்களையும் முன்வையுங்கள்.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் வினவிய போது, அது குறித்து பதிலளிக்க முடியாது என சர்வதேச கிரிக்கெட் பேரவையினர் குறிப்பிட்டனர்.

1 கருத்துரைகள்:

It is advisable that any such alligations, if any, could be addressed to the relevant authority in a proper way.

Post a comment