Header Ads



சீனாவில் கொரோனா 2-ம் அலையா..? ஒரேநாளில் 36 பேருக்கு தொற்று - முடக்கப்பட்ட பல பகுதிகள்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுகிறது என்ற அச்சத்துக்கு இடையே, கடந்த இரண்டு நாட்களில் தலா 36 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொற்று வெளியூரில் இருந்து பரவவில்லை. உள்ளூரில் இருந்தே பரவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

50 நாட்களுக்கு மேலாக பெய்ஜிங்கில் புதிய கொரோனா நோயாளிகள் யாரும் கண்டறியப்படாமல் இருந்த நிலையில் இப்போது புதிய தொற்றுகள் கண்டறியப்படுகின்றன.

இந்த பரவல் அந்த நகரின் மிகப் பெரிய மொத்த விற்பனை சந்தையான ஷின்ஃபடி சந்தையுடன் தொடர்புடையது என க்ளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. 79 பேருக்கு இங்கிருந்துதான் தொற்று பரவியது என க்ளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

லியோனிங், ஹெபெய் மற்றும் சிசுன் ஆகிய மூன்று மாகாணங்களில் தொற்று கண்டறியப்பட்ட, தொற்று இருக்குமோ என சந்தேகிக்கப்படும் நேர்வுகள் அனைத்தும் பெய்ஜிங்குடன் தொடர்புடையவையே.

உள்ளூர் செய்திப்படி, இறக்குமதி செய்யப்பட்ட சால்மோன் மீன்களை வெட்டுவதற்கு மீன் கடையில் வைத்திருந்த கட்டையில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெரிய சந்தையிலிருந்துதான் பெய்ஜிங்கில் இருக்கும் முக்கிய சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு மீன் சென்றடைகிறது.

சீனாவின் துணை பிரதமர் சுன் ச்சுலன், பரவல் மேலும் அதிகரிக்காமல் தடுக்க சில தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

36 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் தற்போது ஷின்ஃபடி சந்தை முடக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள 11 பகுதிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று மேலும் 10 இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என அரசு ஊடகமான சிஜிடிஎன் கூறுகிறது. அந்த பகுதியில் வசிப்பவர்களைத் தவிர யாருக்கும் உள்ளே வந்து செல்ல அனுமதி இல்லை. அதேபோல் எந்த பொருளும் அங்கிருந்து வெளியே செல்ல அனுமதி கிடையாது.

சந்தைக்கு அருகில் இருக்கும் பள்ளிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தையில் வேலை செய்யும் 10,000 பேருக்கு சோதனை செய்யப்படும். BBC

No comments

Powered by Blogger.