Header Ads



இலங்கையில் 125 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு - ரகசிய கடிதம் தொடர்பிலும் தகவல்

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புப் பிரிவு  கடந்த 2019 ஏப்ரல் 21 வரை அறிந்திருக்கவில்லை என  ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில்  பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர்  எஸ்.ஜி.சதரசிங்க நேற்று சாட்சியமளித்தார். 

அத்துடன் இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இருப்பதாக அரச உளவுச் சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லலித் நாண்யக்கார, கடந்த 2019.02.03 அன்று இடம்பெற்ற ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு குழு கூட்டத்தில் தெரிவித்ததாகவும் அவர்  இதன்போது நினைவு கூர்ந்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்    குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷ அஜினசேனவின் நெறிப்படுத்தலில் சாட்சியமளிக்கும் போதே ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில்  பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர்  எஸ்.ஜி.சதரசிங்க  மேர்படி விடயங்களை வெளிப்படுத்தினார்.

இதன்போது அவர் வழங்கிய சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு:

' ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதானி, அரச உளவுச் சேவையின் அதிகாரிகள் உள்ளிடோருடன் மாதாந்த சந்திப்புகளை நடத்திய பின்னர் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்படும். வழக்கமாக ஜனாதிபதியின் நிகழ்கால பாதுகாப்பு குறித்த அறிக்கையைப் பெறும், அதன் பின்னர் ஜனாதிபதி விஷேடமாக கலந்துகொள்ள உள்ள கூட்டங்கள், நிகழ்வுகள் குறித்து அவதானம் செலுத்தி பாதுகாப்பு மதிப்பீட்டை முன்னெடுப்போம். ' என தெரிவித்தார்.

இதன்போது  2019 ஏபரல் 12 ஆம் திகதி,  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்  நடைபெற்ற கூட்டத்துக்கு முன்னர், ஜனாதிபதியின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டதா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷ அஜினசேன கேள்வி எழுப்பினார்.

இதன்போது 2019 ஏப்ரல் 12 ஆம் திகதி மட்டக்களப்பு  வெபர்  மைதானத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டதாகவும், இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 5000 பேர் பங்கேற்றதாகவும் ஆணைக் குழுவின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.

இந் நிலையில், வெபர் மைதானத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை மதிப்பீடு செய்வது தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர்  மற்றும் அரச உளவுச் சேவை  அதிகாரிகள் சிறப்புக் கூட்டம் நடத்தினாரா என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  சாட்சியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு  பதிலளித்த சாட்சியாளரான உதவி பொலிஸ் அத்தியட்சர் சதரசிங்க, முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு பாதுகாப்பு மதிப்பீட்டு கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்று கூறினார்.

"பாதுகாப்பு மதிப்பீட்டுக் கூட்டம் எதுவும் அது தொடர்பில் நடாத்தப்படவில்லை.  ஆனால் அப்போது அரச உளவுச் சேவை பணிப்பாளராக இருந்த  நிலந்த ஜயவர்தன, 2019 ஏப்ரல் 10,  அன்று மட்டக்களப்பு பகுதியில் பாதுகாப்பு மதிப்பீட்டைக் கூறி ஒரு ரகசிய கடிதத்தை  அனுப்பியிருந்தார்," என்று  சாட்சியாளர் குறிப்பிட்டார்.

அந்த ரகசிய கடிதத்தில் இதுவரை ஜனாதிபதிக்கு தெளிவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக சாட்சியாளரான உதவி பொலிஸ் அத்தியட்சர்  ஆணைக் குழுவுக்கு  தெரிவித்தார், எனினும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு வேறு சில விடயங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த அவசியமானது என சாட்சியாளர் சுட்டிக்காட்டினார்.

"ஐ.எஸ்.ஐ.எஸ். பின்பற்றுபவர்கள் அந்த பகுதிக்குள் இருப்பதால் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த இரகசிய கடிதத்தில் அரச உளவுச் சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன கூறியிருந்தார். 

அதனால்  தீவிரவாத  நடவடிக்கைகளை முன்னெடுக்க இப்பகுதியில் வாய்ப்புக்கள் உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த அவர் ஆலோசனை வழங்கியிருந்தார் ' என சாட்சியாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், 2019 ஏப்ரல் 09,  அன்று தேசிய உளவுத்துறை பிரதானி சிசிர மெண்டிஸ் தேசிய தெளஹீத்  ஜமாஅத்தின் (என்.டி.ஜே) சஹ்ரான்  ஹாஷிம் மற்றும் அவரது கூட்டாளிகள் நாட்டில் தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கி பொலிஸ்மா அதிபருக்கு இரகசிய ஆவணங்களை அனுப்பியிருந்தமை ஏற்கனவே ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில்  வெளிப்படுத்தப்பட்டிருந்தது.  இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் மேற்படி சாட்சியத்தை அளித்தார்.

இதன்போது  சுதந்திர தினத்திற்கு முன்னைய தினமான 2019  பெப்ரவரி 3 அன்று,   நடைபெற்ற பாதுகாப்பு மதிப்பீட்டுக் கூட்டம் தொடர்பில் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரால் அய்ஷ அஜினசேன கேள்வி எழுப்பினார்.

சுதந்திர தினத்திற்கு முந்தைய தினம் இடம்பெற்ற  மதிப்பீட்டுக் கூட்டத்திற்காக, அரச உளவுச் சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லலித் நாணயக்கார வந்திருந்ததாகவும், அதன்போது இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் 125 பேர் இணைந்திருப்பதாகவும், அவர்களில் இருவர் ஏற்கனவே வெல்லம்பிட்டி மற்றும் தெஹிவளை பகுதியில் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்ததாகவும், சாட்சியாளர் ஆணைக் குழுவிடம் தெரிவித்தார்.

"ஈராக் மற்றும் ஈரானில் ஐ.எஸ்.ஐ.எஸ் தோல்வியடைந்த பின்னர் அவர்கள் மற்ற நாடுகளைத் தாக்க திட்டமிட்டுள்ளனர் என லலித் நாணயக்காரா குறிப்பிட்டார்" என்று சாட்சியாளர் கூறினார்.

அத்துடன், 2019 மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக பாதுகாப்பு மதிப்பீட்டு குழு கூட்டங்களில், அடிப்படைவாத குழுக்கள், நபர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டதாகவும் சாட்சியாளர் சாட்சியமளிக்கும் போது சுட்டிக்கடடினார்.

இந்த கூட்டங்களில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரோஹண சில்வா மற்றும் அரச உளவுச் சேவை இணைப்பு அதிகாரியான பொலிஸ் அத்தியட்சர் ஜானக செனவிரத்ன ஆகியோரும் பங்கேற்றதாக சாட்சியார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Hot in Election campaign, Muslim areas should be alert during these difficult days, May Allah save us all and this country

    ReplyDelete

Powered by Blogger.