Header Ads



மக்கள் தவறிழைத்தால் மீண்டும், கொரோனா யுகத்திற்கு தள்ளப்படுவோம் - எச்சரிக்கிறார் Dr அனில்

 (ஆர்.யசி )

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டே நாட்டில் ஊரடங்கு தளர்க்கப்படுகின்றது. இது ஒரு பரீட்சார்த்த முயற்சி மட்டுமே. ஆகவே இந்த சூழலை தவறாக பயன்படுத்தினால் மக்கள் மீண்டும் கொரோனா யுகத்திற்கு தள்ளப்படுவர் என எச்சரிக்கும்  சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வைரஸ் சமூக பரவலை ஏற்படுத்தும் என்ற அச்சுறுத்தலுக்கும் மத்தியில் நாட்டினை தளர்வுபடுத்துவதால் வயதானவர்கள், நோயாளர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்கிறார்.

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியிலும் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டில் ஊரடங்கு தளர்க்கப்படுகின்ற நிலையில் இது குறித்து விசேட அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ள போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

மக்களின் வாழ்க்கை முறைமையை வழமைக்கு திருப்ப வேண்டும் என்ற வேண்டுகோள் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் வழமை போன்று முழுமையாக மக்களை நடமாட இடமளிக்க முடியாது என்ற காரணத்தினால் அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் முதல் கட்டமாக சில தரவுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

மிகவும் அச்சுறுத்தல் என கருதிய மேல்மாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்க்கப்பட்ட நேரங்களில் இதுவரை மக்கள் எவ்வாறு கடந்த இரு வாரங்களாக செயற்பட்டனரோ அதேபோன்று தொடர்ந்தும் செயற்பட வேண்டும்.

அதேபோல் மேல்மாகாணத்தில் அதிக நிறுவனங்கள் இயங்கவேண்டிய கட்டாயம் இருப்பதால் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் இன்று காலையில் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வர்த்தமானி அறிவித்தல் விடுவிக்கும் போது உள்வாங்கப்பட வேண்டிய விடயங்களை அறிவுறுத்தியுள்ளோம்.

உடனடியாக வர்த்தமானி அறிவித்தலை விட தீர்மானம் எடுக்கப்படும். இதில் முற்றுமுழுதாக வியாபார, வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க மட்டுமே இடமளிக்கப்பட வேண்டும்.

மக்களை அனாவசியமாக நடமாட இடமளிக்க முடியாது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் வெகு விரைவில் முழுமையாக கைவிடப்படும். ஆனால் நீண்டகாலத்திற்கு நாம் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தூய்மை, சமூக இடைவெளி என அனைத்தையும் நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டினை விடுவிக்கும் நிலையில் மீண்டும் கொவிட் -19 பரவும் வாய்ப்பு உள்ளது. இது நகர்புறங்களில் அதிகம் தாக்கும். ஆகவே மக்கள் இதனை நன்கு உணர்ந்துகொண்டு நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கொழும்பு நகர்புறங்கள் பாதிக்கப்படும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே கொழும்பு வாழ் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். ஒரு சிலர் விடும் தவறுகள் காரணமாக மீண்டும் நாடே முடக்கப்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம் என்ற அச்சுறுத்தலை விடுத்துக்கொண்டே நாட்டில் ஊரடங்கை தளர்க்கவும் நடவடிக்கை எடுக்கின்றோம்.

ஊரடங்கு தளர்க்கப்பட்டு நாட்கள் கடக்கும் சந்தர்ப்பங்களில் மீண்டும் வைரஸ் தாக்கம் குறித்த அச்சுறுத்தல் அதிகரிக்கும். இது எமக்கு மட்டும் அல்ல உலகில் அனைத்து நாடுகளுக்கும் இந்த நெருக்கடி ஏற்படுகின்றது.எனவே வயதானவர்கள், நோயாளர்கள் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும். சமூக பரவலில் மீண்டும் தாக்கப்பட்டால் வயதானவர்கள் இறக்க நேரிடலாம்.

இத்தாலி, அமெரிக்க மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் மரண வீதம் அதிகரிக்க இதுவே காரணமாகும். எனவே எமது சுகாதார அதிகாரிகள் சமூக பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கின்றனர். நெருக்கடியிலும் எமது வாழ்க்கையை கொண்டு நடத்தவே இந்த சவாலை முன்னெடுக்கின்றோம் என்றார்.  

No comments

Powered by Blogger.