May 08, 2020

முஸ்லிம் பெண்ணின் மரணம் தொடர்பில் நான் பதிலளித்தால், உணர்வுபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும் - ரவி குமுதேஷ்

(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில்,  அந்த தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். எனும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள்  தவறாக வழங்கப்பட்டுள்ளமை குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில்  பூரண விசாரணைகளை நடாத்துமாறு சுகாதார அமைச்சின் செயலர் பத்ரானி ஜயதிலகவிடம் கோரப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞானக் கல்லூரி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது. இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞானக் கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷின் கையொப்பத்துடன் இந்த முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பட்டுள்ளதுடன், இந்த தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் குறித்த இரகசிய அறிக்கை ஒன்றும் ஜனாதிபதிக்கு  தம்மால் அனுப்பட்டதாகவும்,  அதற்கான எந்த  எதிர் நடவடிக்கைகளையும்  காண முடியவில்லை எனவும் மருத்துவ ஆய்வக விஞ்ஞானக் கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷ் கேசரியிடம் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆய்வு கூடங்களில் போதிய வசதிகள் இருந்தும், தமது பொறுப்பில் இல்லாத ஆய்வு கூடங்களுக்கு பி.சி.ஆர்.  நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதியளித்தன் விளைவே இது என அவர் சுட்டிக்காட்டினார்.

' கடந்த 5 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டது.   தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறையின் தாதி,  கொலன்னாவை - சாலமுல்ல மற்றும் ராஜகிரிய பண்டாரநாயக்கபுர,  மோதரை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முஸ்லிம் பெண் ஒருவர்  ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பதாக  மருத்துவ அறிக்கைகள்  வழங்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் அந்த அறிக்கைகள் குறித்து நாம், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பரிசோதனை மையங்களில்  ஆய்வு செய்த போது, கொரோனா உள்ளதாக கூறி கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தவறானவை என கண்டறியப்பட்டது.

ஏற்கனவே எமது கண்கானிப்புக்கு உட்பட்ட விடயம் தான், ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வு கூடம் ஊடாக 8 தவறான அறிக்கைகள் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக ஆய்வு கூடத்தினால் வழங்கப்பட்ட அந்த 4 அறிக்கைகள் கூட தவறானது என உறுதியாகியுள்ளது. 

அதேபோல் கொத்தலாவை பாதுகாப்பு பல்கலையினால் வழங்கப்பட்ட ஒரு அறிக்கை கூட தவறானது என்பது உறுதியாகியது.   அதன்படி 13 தவறான மருத்துவ அறிக்கைகள் மக்களின் கைகளுக்கு சென்றுள்ளன. இதனால் மக்களுக்கு மருத்துவ ஆய்வு அறிக்கைகள், மருத்துவ பரிசோதனையாளர்கள் தொடர்பிலான நம்பிக்கையில் கேள்வி எழுந்துள்ளது.' என்றார்.

இதன்போது முகத்துவாரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்ட கொரோனாவால் உயிரிழந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பெண் தொடர்பில் கேசரி ரவி குமுதேஷிடம் வினவியது, கொழும்பு பல்கலைக்கழகத்தால் வழங்க்கப்பட்ட 4 அறிக்கைகள் தவறு என கூறுகின்றீர்கள்.

சுகதார சேவைகள் பணிப்பாளர், மறுநாள் அதனை மையப்படுத்தி பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த மூவரின் பெயரை நீக்கியதாக அறிவித்தார். எனினும் மரணமடைந்த பெண்ணின் பெயர் அப்பட்டியலில் இருந்து நீக்கவில்லை. அப்படியானால் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா? அல்லது ஏன் அவரது பெயர் நீக்கபப்டவில்லை? என கேசரி அவரிடம் வினவியது.

 அதற்கு பதிலளித்த ரவி குமுதேஷ்,

இந்த கேள்விக்கு பதிலளிக்க எனக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. உண்மையில்  5 ஆம் திகதி கொழும்பு பல்கலைக் கழகத்தால் வழங்க்கப்பட்ட 4 மருத்துவ அறிக்கைகளும் தவறானவை என்பது உறுதியாகியுள்ளது. எனினும் மரணித்த பெண் தொடர்பில்  என்னால் வெளிப்படையாக பதிலளிக்க முடியாது. அவ்வாறு நான் பதிலளித்தால் அது  தற்போதைய சூழலில்  உணர்வுபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும். என்றார்.

 இந்நிலையில் இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தனியார் தொலைக்காட்சி நிக்ழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு, ' இந்த பரிசோதனை அறிக்கைகளை தவறு என நான் கூற மாட்டேன். சில தொழில் நுட்பத் தவறுகள் ஏற்பட்டிருப்பின் அதனை சரி செய்துகொன்டு முன்னோக்கி செல்ல வேண்டும்.' என தெரிவித்திருந்தார்.

 இது குறித்து ரவி குமுதேஷிடம் கேசரி வினவிய போது,

 ' தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை மறைத்து ஜனாதிபதியை மக்களை  வேறு காரணிகளை கூறி ஏமாற்ற வேண்டாம்.  பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சின் கீழ் உள்ள  ஆய்வுகூடங்களால் முடியும். அவ்வாய்வு கூடங்களில் இதுவரை கொள்ளலவை தாண்டிய பரிசோதனைகள் இடம்பெறவில்லை. 

நாம் பரிசோதனைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம். அல்லது  சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இடம்பெறும் இவ்வாறான  பரிசோதனைகளை மேற்பார்வை செய்ய விஷேட ஆய்வுகூட நிபுணர்களைக் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். அதனைவிடுத்து  இடம்பெற்றுள்ள தவறுகளை மறைப்பது நல்லதல்ல.' என தெரிவித்தார்.

 சுகாதார அமைச்சின் கீழ் 10 மருத்துவ பரிசோதனை கூடங்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கவென தனியாக உள்ளன. அவற்றில் சேவையாற்ற எந்த சந்தர்ப்பத்திலும்  200 மருத்துவ பரிசோதகர்கள் தயாராக உள்ளார்கள்.

அவ்வாறான பின்னணியில், இவ்வாறான தொற்று பரவல் சூழலில், ஆய்வுகள் குறித்து சரியான நடவடிக்கைகள் தேவை. அந்த பொறுப்பை சரிவர செய்யாத,  இந்த தொற்றை கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள  நிபுணர்கள்,  பணிப்பாளர்கள் தொடர்பில் கடமையை சரிவர செய்யாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இலங்கை மருத்துவ ஆய்வக விஞ்ஞானக் கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷ் கூரினார்.

முன்னதாக  ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக் கழக ஆய்வு கூடம் வழங்கிய தவறான அரிக்கையில், பேலியகொட பகுதி மீன் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்தான அறிக்கையும் உள்ளடங்கும். அந்த அறிக்கை கரணமாக பேலியகொடை மீன் சந்தை மூடப்ப்ட்டு அங்குள்ள அனைத்து வர்த்தகர்களையும் பி.சி.ஆர். பரிசோதனைச் செய்ய வேண்டி ஏற்பட்டது. எனினும் அங்கு எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

6 கருத்துரைகள்:

உண்மையில் இது கவலையளிக்க கூடிய ஒரு விடயமாக கருதப்படுகின்றது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மனித உயிர்களில் திட்டமிட்டு விளையாடிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

The director of health services is a notorious criminal. Sue him.

இங்கு நடக்கும் கொடூரங்களை முஸ்லிம் நாட்டுத் தலைவர்கள் கண்டிக்கமாட்டார்களா? அவர்களுக்கு இந்த செய்திகளலெல்லாம் போய்ச் சேருவதில்லையா?

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

Need more attention on this matter and we need the justice

கொரோணா மாபியமாவை ஒழிக்க இவ்வாறான துணிச்சலான மனிதர்களுடன் இணைய வேண்டும்

Post a comment