Header Ads



அடுத்த ஒருவருட காலத்திற்கு, வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் - Dr ஹரித அழுத்கே

(ஆர்.யசி)

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே மக்கள் அனாவசிய செயற்பாடுகள் அனைத்தையும் தவிர்த்துக்கொண்டு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடுத்த ஒருவருட காலத்திற்கு கொவிட் -19 வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் எனவும் தெரிவிக்கின்றது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்து ஏனைய சகல பகுதிகளிலும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றமை மற்றும் மேல்மாகாணத்தில் தொழில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே கூறுகையில்,

கடந்த இரண்டு மாதகாலமாக நாட்டினை ஊரடங்கு சட்ட கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நிலையில் இப்போது நாட்டினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார மற்றும்  மக்களின்  வாழ்வாதார தேவைகளை கருத்தில் கொண்டு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக நாட்டினை கட்டுப்பாட்டிற்கும் வைத்திருக்க முடியாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும். 

ஆரம்பத்தில் இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்று பரவல் ஆரம்பித்த நேரத்தில் இருந்த அச்சுறுத்தல் நிலைமைகள் இப்போது இல்லை என்பது உண்மையே. ஆனால் வைரஸ் தொற்றுநோய் மீண்டும் பரவலாம் என்ற  அச்சுறுத்தல் உள்ளது.

ஆகவே மக்கள் நிலைமைகளை விளங்கிக்கொண்டு செயற்பட்டனர். அதேபோல் நாளைய தினம் ஊரடங்கு தளர்த்தப்படுவதன் மூலமாக நாடு அச்சுறுத்தல் கட்டத்தில்  இருந்து மீண்டுவிட்டதாக எவரும் நினைக்கக்கூடாது.  எனவே மக்கள் மிகவும் கவனமாக அடுத்து வரும் ஒரு சில வாரங்களில் செயற்பட வேண்டும்.

முகக்கவசங்களை அணிவது, சமூகஇடைவெளியை பின்பற்றுவது, மற்றும் நோய் அறிகுறிகள் தென்படின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பின்பற்றுவது என்பது கட்டாயமானதாகும்.

அடுத்த ஆறுமாத காலம் இப்போது முன்னெடுக்கும் சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். எவ்வாறு இருப்பினும் இன்னும் ஒருவருடகாலம் நாடு கட்டுப்பாடுகளுடன் இயங்க வேண்டும்.

மார்ச் மாதத்திற்கு முன்னர் இருந்த சூழல் இப்போது உருவாகாது. கொவிட் -19 தொற்றுநோய்க்கு உரிய மருந்து கிடைக்கும் வரையில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வைரசுடன் போராடிக்கொண்டே  அடுத்தக்கட்ட  நடவடிக்கைகளை கையாள வேண்டிவரும். எனவே நிலைமைகளை சரியாக கருத்தில் கொண்டு மக்கள் அனாவசியமாக நெருக்கடிகளை ஏற்படுத்தாது சமூக இடைவெளிகளை பின்பற்றுங்கள் என்பதியே எம்மால் கூற முடியும் என்றார். 

No comments

Powered by Blogger.