Header Ads



இன்று வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினம் - பலஸ்தீன துயர் துடைக்கப்பட அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்


குத்ஸ் என்பது ஜெரூசலமின் அரபுப் பெயர். #சர்வதேச_குத்ஸ்_தினம் என்று முழுமையாக இந்தத் தினம் அழைக்கப்படுகிறது.

1979ம் ஆண்டில் இத்தினம் ஈரானால் துவங்கப்பட்டது. ஒவ்வொரு ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமையை குத்ஸ் தினமாக அனுசரிக்க ஈரான் உலக முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தது. ஃபலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் ஸியோனிசத்தையும் இஸ்ரேலையும் எதிர்க்கும் முகமாகவும் #குத்ஸ்_தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அரபு நாடுகளிலும் இன்னபிற முஸ்லிம் உலகிலும் கிழக்கு ஜெரூசலமை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிராக இந்தத் தினத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். முஸ்லிம்களும் முஸ்லிமல்லாத சமூகங்களுமாக இலட்சக்கணக்கான மக்கள் ஃபலஸ்தீனர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும் ஸியோனிச ஆட்சியின் அட்டூழியங்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும் உலகெங்கிலுமுள்ள நகரங்களில் பேரணிகளை நடத்துவார்கள்.

இன் ஷா அல்லாஹ் வருகிற #மே_22_வெள்ளிக்கிழமை இந்த வருட #குத்ஸ்_தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால் கெரோனா தொற்றுநோயின் விளைவாக வரலாற்றில் முதல் முறையாக, இவ்வருடம் இங்கிலாந்தில் குத்ஸ் தினம் இணையதள வழியாக நடைபெறுகிறது. இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஃபலஸ்தீனுக்கு நீதியை விரும்பும் சமூகத் தலைவர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களின் கருத்துகள் இணையதளம் வழியாக ஒளிபரப்பப்படுகின்றன. இந்நிகழ்வில் ஃபலஸ்தீனியர்களின் அவல நிலையை நினைவுபடுத்தும் விளக்கக்காட்சிகளும் இடம்பெறும்.

இன்றும் கொரோனாவைக் காரணம் காட்டி ஃபலஸ்தீனுக்குள் மிகவும் தேவையான மருத்துவ உபகரணங்களை அனுமதிக்க இஸ்ரேல் மறுக்கிறது. உடல்நலம் குறித்த சோதனைகள் செய்வதற்கு ஃபலஸ்தீனர்கள் வெளியில் செல்வதையும் இஸ்ரேல் தடுக்கிறது. இதனால் ஃபலஸ்தீனர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

1948ல் இஸ்ரேல் என்னும் கள்ள நாடு உருவானதிலிருந்து இதுவரை 51 இலட்சம் ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. 1948லிருந்து 2019 வரை 92 சதவீத ஃபலஸ்தீன மண்ணை இஸ்ரேல் ஆக்கிரமித்துவிட்டது. (படம்)

இன்று இஸ்ரேல் அமெரிக்காவின் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து ஃபலஸ்தீனப் பகுதிகளையும் தன்னோடு இணைக்கும் கொடும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. இந்த இணைப்பு எதிர்வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதற்கு மிகவும் உறுதுணையாக நிற்கிறார்.

IUMS என்றழைக்கப்படும் ‘முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேசிய ஒன்றியம்’ (International Union for Muslim Scholars) இந்த இணைப்புக்கெதிராக முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஃபலஸ்தீன மக்களுடன் நிற்கவும் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கவும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அக்கிரமக்கார இஸ்ரேலிடமிருந்து விடுவிக்கவும் அனைத்து நாடுகளுக்கும் IUMS அழைப்பு விடுத்துள்ளது.

ஃபலஸ்தீனர்களின் துன்பங்கள் தொடர்கின்றன. ஆனால், அவர்களிடமுள்ள வீரமும் தீரமும் கிஞ்சிற்றும் குறையவில்லை. இஸ்ரேல் இராணுவத்தின் இயந்திரத் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் வெறும் கற்களைக்கொண்டு எதிர்க்கிறார்கள். அக்கற்கள் ஈமான் என்னும் இறைநம்பிக்கையில் தோய்க்கப்பட்ட கற்கள். அபாபீல் பறவைகளின் அலகுகளிலிருந்து புறப்பட்ட கற்கள் ஆப்ராவின் யானைப் படையை வீழ்த்தியதைப் போல் தங்கள் கற்களும் யூதப் படையை ஒரு நாள் வீழ்த்தும் என்ற நம்பிக்கையுடன் அக்கற்களை எறிகின்றனர்.

இன்றைய ஃபலஸ்தீனுக்கு நாமே சாட்சி! இஸ்ரேலின் யூத ஆக்கிரமிப்புகளும் அன்றாடம் அரங்கேற்றப்படும் அக்கிரமங்களும் அகற்றப்பட்டு ஃபலஸ்தீன் விடுதலை பெறவேண்டும் என்பதே உலக முஸ்லிம்களின் இலட்சியம்.

அந்த இலட்சியம் அல்லாஹ்வின் பேரருளால் நிறைவேற்றப்பட்டே தீரும். அதுவரை ஃபலஸ்தீனர்களின் துன்பங்களை நம் துன்பங்களாக எண்ணி அவர்களை நம் உள்ளங்களில் ஊன்றி வைப்போம்.

குத்ஸ் தினத்தில் (2020 மே 22, வெள்ளிக்கிழமை) ஃபலஸ்தீன விடுதலைக்காகவும் அந்த மக்களின் துயர் துடைக்கப்படுவதற்காவும் மனமுருகி மறையோனாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

M S Abdul Hameed

1 comment:

  1. உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனித வணக்க ஸ்தலமாகிய பைத்துல் முகத்திஸ் மற்றும் அது அடங்கி இருக்கும் குத்ஸ் எனும் பலஸ்தீனம், முஸ்லிம்கள் உலக ஆசை பிடித்து,  இறைவனது கடமைகளை விட்டும் தூரமானபோது  இழந்திருக்கிறார்கள்.

    மீண்டும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இதனைக் கொண்டுவருவது, ஈமானியப் பலத்தால் மாத்திரமே சாத்தியமான ஓர் அலுவலாகும்.

    எல்லாவற்றுக்கும் ஓர் முயற்சி தேவைப்படுவது போன்று ஈமானிய பலத்திற்கும் ஓர் தொடர்ச்சியான முயற்சி தேவைப்படுகின்றது.

    உலகளாவிய ரீதியில் செயற்படும் இறை நம்பிக்கைக்கான - ஈமானுக்கான உழைப்பு, என்று சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி போன்றவர்கள் கொண்ட கொதி மன நிலையில் இருக்குமோ, அன்றே அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இவ்வெற்றியை மீண்டும் தரத் தயாராகவே இருக்கின்றான்.

    அல்லாஹ், ரசூலின் போதனைகளை அதிகமதிகம் பேசுவதும், கேட்பதும் அவற்றை அனைத்து விதங்களிலும் கற்று நம் வாழ்வில் கொண்டு வருவதோடு, அனைவருக்கும் பரப்பி ஈமானிய பலம் பெறுவதே இவ்விலக்கை அடைந்து அனுபவிப்பதற்கான வழிகளாகும்.

    ReplyDelete

Powered by Blogger.