May 01, 2020

பயன்படுத்திய டயப்பர் (பெம்பர்ஸ்) ஐ, முறையாக வெளியேற்றம் செய்வோம்

✍🏻Muneera Ghani

"அடிச்ச பலத்த மழைக்கு மேல் வீட்டுத் தண்ணி அப்படியே எங்க வீட்டுக் குசினிக்குள்ளடா தம்பி, நாசமாப் போனவண்ட பெம்பர்ஸ் மூடயெல்லாம் எங்கட வீட்டு வாசக்கடையிலடாப்பா"

"டேலி இந்த பெம்பர்ஸ் அ கொண்டு வந்து வேலி ஓரமா பத்த வெச்சிட்டுப் போறானுவல்,  புகை எல்லாம் எங்கட வீட்டுக்குள்ள, மூச்சு அடச்சுது. இதாலயே பெரிய சுவாச நோய்கள் வந்துடும்"

   செவிகளில் வீழ்ந்த இவ்வார்த்தைகள், சில விடயங்களை சிந்திக்கத் தூண்டியது.

 இன்றைய நவீன உலகில், நமது நாளாந்த வேலைகளை சுலபமாக்க எத்தனை எத்தனையோ கண்டு பிடிப்புக்கள் உருவாக்கப் பட்டுவிட்டன. அந்த வகையில் குழந்தைகளுக்காக நாம் பயன்படுத்தும் பெம்பர்ஸ், இன்றைய குழந்தை வளர்ப்பில் அதி முக்கியம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றது. பெம்பர்ஸ் இல்லாவிட்டால் குழந்தையைப் பராமரிக்கவே தெரியாது எனும் அளவுக்கு அனைத்தும் மாறிவிட்டன. இந்த டயப்பர்ஸ்(பெம்பர்ஸ்) பாவனையும், அதன் மூலம் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளும் ஒரு புறம் இருக்க, பயன்படுத்திய டயப்பர்களை வெளியேற்றம் செய்வதிலுள்ள சிக்கல்கள் ஏறாளம். 

நமது வேலைகளை சுலபமாக்கிக் கொள்ளும் நோக்கில் நாம் பயன்படுத்தும் டயப்பர்களைக் கொண்டு அடுத்தவர்களை சிரமங்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறோம். பயன்படுத்தப்பட்ட டயப்பர்களை பிழையான முறையில் வெளியேற்றம் செய்வதன் மூலம், நாம் மட்டுமன்றி பலரும் இதன் மூலம் அல்லலுறுகின்றனர் என்பதை சிந்திக்க மறந்து போகிறோம். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலரது ஏச்சுக்களுக்கும், சாபங்களுக்கும் உள்ளாக நேரிடுகிறோம் என்பதை சிந்தித்துப் பார்த்தோமா?. கண்ட கண்ட இடங்களில் எறிந்தும், எரித்தும் விடுவதிலுள்ள பக்கவிளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியது நமது கடமையாகும்.

 ஆம். பயன்படுத்திய டயப்பர்களை வெறுமனே நமது சூழலில் அல்லது அடுத்தவர்களின் வளவுக்குள் எறிந்து விடுகிறோம். உக்கலடையாத பதார்த்தங்களைக் கொண்டு ஆக்கப்பட்ட இவை வருடக் கணக்கில் அப்படியே இருக்கும். இது மண் வளத்தை அழிப்பதுடன், மண் சரிவுக்கும் காரணமாக அமையும். நீர் நிலைகள், ஓடைகள், ஆறுகளில் கொட்டப்படும் இத்தகைய கழிவுகள், மிதந்து வரும் டயப்பர்கள் உக்கலடையாது அப்படியே இருக்கும், சேற்றுக் களியுடன் சிற்சில இடங்களில் தேங்குவதால், இயற்கை நீர் வளம் மாசடைவதுடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகவும் அமையும். இயற்கையான நீர் நிலைகளில் உள்ள நீரை மக்கள் குளிப்பதற்கு மட்டுமன்றி குடிப்பதற்கும் பயன்படுத்துவதால், நீர்  நிலைகளில் இத்தகைய குப்பை கூளங்களை எறிவது பெரும் அநியாயமாகும். நம்மவர்கள் கையாளும் மற்றுமொரு வழிமுறை டயப்பர் மூட்டைகளை ஒன்றாகச் சேர்த்து எரிப்பதாகும். ஈரப்பதனுள்ள இந்த டயப்பர்கள் ஈரம் கசிந்து கசிந்து எரிவதால், பல மணி நேரம் புகைந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட வாயுக்களால் வளி மாசடைவதுடன், சுவாசிக்கக் கூடியவர்களுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும். நகர்ப்புறப் பகுதிகளில் அனேகர் குப்பைகளைச் சேகரித்து வரும் குப்பை லொறிகளில், பொலித்தீன்களுக்கு இடையில் வைத்து இத்தகைய கழிவுகளை வெளியேற்றுகின்றனர். சேகரிப்பாளர் மறுக்கும் பட்சத்தில், அவரது கைக்குள் சந்தோசமாக சில தொகைப் பணத்தை அமுக்கி விட்டு இச்செயலைச் செய்ய முனைகின்றனர். பயணம் செல்லக் கூடிய பலர், பொது இடங்களில் முக்கியமாக மதஸ்தலங்களிலுள்ள கழிவறைகளில் அப்படியே பல வண்ணத்தில், பலகோலத்திலும் போட்டு விட்டு வருகின்றனர். இதைச் சுத்தம் செய்ய வேண்டியதும் ஒரு மனிதன் தான், அதிலும் அனேகமாக ஒரு ஆண் என்பதை ஏன் உணர மறக்கிறோம்.

இப்படி சூழலுக்கும், சக மக்களுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய வழிமுறைகளைத் தவிர்த்து முறையான தீர்வுகளைத் தேடியறிவது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில் நவீன சூழலைப் பொறுத்து சூழல் மாசடைவதால் டயப்பர் பாவனையை முற்றிலும் ஒழிப்போம் எனக் கோசமிடுவதில் துளியும் பலன் கிடைக்கப் போவதில்லை. எனில் என்னதான் வழி?. 

கழுவிச் சுத்தம் செய்து பயன்படுத்தக் கூடிய சூழல் நேசமிகு(eco friendly) டயப்பர்களை பயன்படுத்துவதானது இப்பிரச்சினைக்கான தீர்வுகளில் ஒன்றாக அமையும். அடுத்து, மற்றுமொரு முறையாக, சாதாரணமாக நாம் பயன்படுத்தக் கூடிய டயப்பர்களைப் பொருத்தமட்டில், அவற்றின் உட்புறமாக மெல்லிய ஓர் டிஸ்ஸூ போன்றதொரு மென்படலம் காணப்படும். அதை உரித்தோ அல்லது வெட்டியோ நடுப்பகுதியில் காணப்படுகின்ற பஞ்சு போன்ற பகுதியை முழுமையாக வெளியில் எடுத்து விட, மெல்லிய பொலித்தீன் தாள் போன்ற பகுதியே எஞ்சும்.  இப்பகுதியை சற்று வெயிலில் உலர்த்தி, எரிக்கும் போது சாதாரணமாக காகிதத் தாள்கள் எரிவதைப் போன்று வெகு சீக்கிரத்தில் எரிந்து சாம்பலாகி விடும். வெளியே எடுக்கப்பட்ட பஞ்சு போன்ற பகுதியையும் வெளிச்சூழலில் கண்ட கண்ட இடங்களில் கொட்ட வேண்டிய அவசியமில்லை. அவற்றை பழைய வாளியொன்றில் கொட்டி, நீருடன் சிறிதளவு உப்பு (சோடியம் குளோரைட்) சேர்த்துக் கலக்கி விட்டு சிறிது நேரத்தின் பின் பார்த்தால், வாளியிலிருந்த பஞ்சின் பெரும்பகுதி குறைந்து காணப்படும். வாளியில் எஞ்சியுள்ள பஞ்சுக்கு மீண்டும் உப்பு சேர்த்து கலக்கி விட அப் பஞ்சு இருந்த இடம் தெரியாமல் வாளி காலியாகி இருக்கும். இம்முறையைக் கையாள்வதன் மூலம் நமக்கும் சூழலுக்கும் நாம் இழைக்கும் தீங்குகளைக் குறைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.

நிலம், நீர்,வளி மாசடைவதை எம்மால் முடியுமானளவில் குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்படவிருக்கின்ற பல்வேறு அனர்த்தங்கள், ஆபத்துக்களிலிருந்தும் எம்மையும் எம் சூழலையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

0 கருத்துரைகள்:

Post a comment