Header Ads



பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தல் முகாமுக்கு சென்ற அனைவரும் வீடு திரும்பினர்


யாழ்ப்பாணம் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் இருந்து சிகிச்சை பெற்ற 160 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்த நிலையில் இன்று (10) அவர்களது வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து கடந்த மாதம் 22 ஆம் திகதி கொவிட் -19 தொற்றுதனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். 

இவ்வாறு அழைத்து வரப்பட்டு சுய தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட 160 பேரில் 78  முதியவர்களும்,  82 சிறுவர்களும் சிகிச்சை பெற்று இயக்கச்சி 55வது, படைப்பிரிவில் இருந்து  கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி ரூவான் வணிகசூரிய தலைமையில் இராணுவத்தினரால் அவர்களின் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்களுக்கு  மருத்துவ சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய ,  பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து வரப்பட்ட அனைவரும் இன்றுடன் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். 

பண்டாரநாயக்க மாவத்தையில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியை  சேர்ந்தவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தனிமைப்படுத்தலிற்காக அழைத்து வரப்பட்டு அவர்கள் கடந்த இரண்டு கிழமைகளுக்கு மேலாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இன்றைய தினம் அவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

எனினும் பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் எவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

-யாழ். நிருபர் பிரதீபன்-

No comments

Powered by Blogger.