Header Ads



இறைவனின் ஏவுகணை...


- யாழ் அஸீம் -

இது கண்டம் விட்டுக் கண்டம் பாயும்
உயிருள்ள ஏவுகணை..
இறைவனால் அனுப்பப்பட்ட
எச்சரிக்கை ஏவுகணை..
இந்த ஏவுகணை
கண்டம் விட்டு கண்டமும் பாயும்
கண்டம் கடந்து கண்டமும் பாயும்...
இந்த ஏவுகணை
இரும்புத்திரையைக் கிழித்துப் பாயும்
இராணுவக் கோட்டையை தகர்த்துப் பாயும்..
ரேடாரின் கண்ணில் மண்ணைத் தூவும்
பென்டகனுக்குள் தடையின்றிப் போகும்..
அணுவாயுத நாடுகளுக்கும்
அஞ்சாத இந்த ஏவுகணை
பக்கிங்ஹாம் அரண்மணைக்குள்
பயமின்றிப் போகும்
வெள்ளை மாளிகைக்குள்
விசாரணையின்றிப் போகும்
வல்லரசு நாடுகளுக்குள்
சொல்லாமல் போகும்!
குண்டு துளைக்காத கவசவாகனம்
வல்லமை பொருந்திய வான்படை
கை கட்டிப் பார்த்திருக்க
குரல்வளையும் தாண்டிச் செல்லும்!

நீ பெரியவனா?
நான் பெரியவனா?
ஆதிகார வெறி கொண்டு
ஆணவம் பிடித்தாடியவர்க்கு..
அல்லாஹ் பெரியவன் என
உணர்த்த வந்த சிறியவன்..
இந்தச் சிறியவன் 
கொசுவின் இறக்கைக்கும்
பெறுமதியில்லாதவன்தான்..
ஆனாலும்
பச்சிளம் பாலகரை
பதை பதைக்கக் கொன்ற
பாலியல் வெறியர்களை
ஓடி ஒளியச் செய்த சிறியவன்..
எண்ணெய்க்காய்
இரத்தம் உறுஞ்சிய 
இரத்தக் காட்டேறிகளை
அச்சத்தால் உறையச் செய்த
சின்னஞ் சிறியவன்..
பொருளாதாரத் தடைபோட்டு
அடிபணிய வைக்கும் 
வல்லரசு நாடுகளுக்கும்
பொருளாதாரத் தடைபோட்ட
பொல்லாத சிறியவன்..


எண்ணெய்வள நாடுகளின்
எலும்புகளை முறித்த
ஏகாதிபத்திய நாடுகளின்
இடுப்பை உடைக்க வந்த
சின்னஞ் சிறியவன்..

ஆயுத வியாபாரத்தால்
சாவுகளை விதைக்கும் சாத்தானியத் தலைவனை
உன் அழிவின் ஆரம்பமென
எச்சரிக்க வந்த சிறியவன்..

கலச வண்டிகளால்
கதிகலங்கச் செய்தவர்கள்
இந்தச் சிறியவனைக் கண்டு
முகக்கவசமிட்டுக் கொண்டனர்!
உளவுத் துறையால்
உலகைத் துவம்சம் செய்யும்
சிஐஏயும் மொசாட்டும்
இழவு வீடாகும் தம் நாடு கண்டு
இடிந்து போய் நிற்கின்றனர்.

அதிகார வெறிகொண்டு
பித்தம் பிடித்தாடியவரின்
சித்தம் கலங்கச் செய்த
இவன் சிறியவன் தான்..
கொசுவின் இறக்கைக்கும்
பெறுமதியில்லாதவன் தான்..
கால் தூசுக்கும்
பெறுமதியால்லாதவன் தான்..
ஆனாலும்
சிலந்தி வலையால்
ஹிராக் குகைக்கும் கவசமிட்ட..
அல்லாஹ் அனுப்பிய சின்னஞ் சிறியவன்
அபாபீலின் சிறுகற்கலால்
யானைப்படையை வைக்கோலாய் சிதைத்த
அல்லாஹ் அனுப்பிய சின்னஞ் சிறியவன்
கொடியவன் நம்றூதை
நொண்டிக் கொசுவால் கொன்ற
அல்லாஹ் அனுப்பிய சின்னஞ் சிறியவன்!
இறைவனின் எச்சரிக்கையாய் வந்த 
இந்தச் சிறியவன் பின்னே
ஆட்சி, அதிகாரம்
அகங்காரம், ஆணவம்
படைபலம், பணபலம்
வல்லரசு, வான்படை
எல்லாமே தூசுதான்

2 comments:

Powered by Blogger.