Header Ads



மோதரை பெண்ணுக்கு எப்படி கொரோனா, ஏற்பட்டதென ஆராய்ந்து கண்டறிவோம் - இராணுவத் தளபதி


கொழும்பு 15, மோதரை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லையெனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல்  சவேந்திர சில்வா அது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்த பெண்ணுக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது , யாரால் தொற்றுக்குள்ளானது என்பது பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை. எப்படியாயினும் அதனை ஆராய்ந்து கண்டறிவோம் என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றையதினம் கொரானா தொற்றுக்குள்ளான 20 பேரில் 15 பேர் இலங்கை கடற்படை வீரர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் 771 பேரில் 348 பேர் கடற்படை வீரர்கள் ஆவர்.

இதேவேளை,  கொழும்பு 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவின்  மெத்சந்த செவன தொடர் மாடி குடியிருப்பைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று உயிரிழந்தார்.

முகத்துவாரம் -  மெத்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 5 பிள்ளைகளின் தாயொருவர், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கு அவருக்கு பி.சி.ஆர். எனும் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, அவருக்கு கொரோனா இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்போதும் குறித்த பெண்ணின் நிலை தீவிரமாக இருந்துள்ள நிலையில், உடனடியாகவே தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நேற்றுக் காலை குறித்த பெண் சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.