Header Ads



இம்முறை நோன்புப் பெருநாளை, முஸ்லிம்கள் அர்ப்பணிப்பார்களா..?

- MFM.HAJITH -

கொரோனா வைரஸ் எனப்படக் கூடிய,  ஆரம்பத்தில் சீனாவில் தோன்றிய,
ஒரு வைரஸினால் முழு உலகமும் இன்று கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது.

தான் பிறந்த சீனாவையும் ஆட்டிப் பார்த்து விட்டு தற்போது ஓராம்சம் இல்லாமல் அனைத்து உலக நாடுகளையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது இவ் கொடிய வைரஸ்.

பல இலட்சக் கணக்கான பெறுமதியான உயிர்களை காவு கொண்டு விட்டு இன்னும் இந்தக் கொடிய வைரஸ் சுற்றிக் கொண்டிருக்கின்றது.

அனுவாயுதப் பலமும் அரிய ஆயுதங்களும் என்னிடம் இருக்கின்றது அதனால் நீயெல்லாம் எனக்கு அடிமை என மற்ற நாடுகளைப் பார்த்து நச்சரித்து எச்சரிக்கை செய்த சில வல்லரசு நாடுகளுக்கெல்லாம், அணுவாயுதமே எனக்கு அடிமை என்பதனை பாடமாய்ப் புகட்டி இருக்கின்றது இந்தக் கொடிய கொரோனா.

ஆயுதத்தால் மோதுவதாக இருந்தால் இந்தக் கொரோனாவை ஆறாயிரம் கிலோ மீட்டார் தள்ளி உதைத்திருப்பேன் என மனதால் எண்ணக் கூடிய வல்லரசு நாடுகளும் இதன் பலத்திற்கு முன்னால் எம் பலம் செல்லுபடியாகாது என்பதனை மனதால் உணர்ந்து வாய் மூடிக் கிடக்கின்றன.

செலவுகளைக் குறைத்து சேமிப்பினை கடைப்பிடிக்கவும், பெருமையினைத் தள்ளி பெருந்தன்மைக்கு முன்னுரிமை கொடுக்கவும், கஞ்சத் தனத்தினை களைந்து மற்றவர்களுக்கு கை நீட்டிக் கொடுக்கவும், பசியெடுத்தால் பணத்தின் பாதியைக் கூட உண்ண முடியாதென்பதனையும் மூளைக்கும் மனதுக்கும் கற்பிக்கவும் இது தவறவில்லை.

மருத்துவத் துறையில் கொடி கட்டி பறக்கும் பல நாடுகளுக்கும் இதற்கு மருந்து கண்டு பிடிப்பது எப்படி? என்பது விடை தெரியாப் புதிராகவே உள்ளது.

இதனுடைய அட்டூழியங்களுக்கெல்லாம் மிக விரைவில் முற்றுப்புள்ளி ஏற்பட்டு  உலக நாடுகளும் எமது இலங்கைத் தாயும் மிக விரைவில் பழைய நிலையை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்தவனாக இந்தக் கட்டுரையை எழுத எத்தனிக்கின்றேன்.

இந்த கொரோனாவின் மூலமாக முழு உலகமும் எமது இலங்கைத் தாய் நாடும் பல விடயங்களை இழந்து கொண்டிருக்கிறது.

கூலித் தொழில் செய்து குறைந்த வருமானத்தில் வயிற்றினை கழுவிக் கொள்ளும் பல கூலித் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது.

திருடர்களினால் திட்டம் போட்டு திருடிச் செல்ல முடியாத அழியாச் செல்வமான கல்விச் செல்வத்தினை பெற்றுக் கொள்ள பாடசாலைக்குச் செல்ல முடியாமல் மாணவச் செல்வங்கள் ஒரு புறம் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டினுடைய அனைத்து முக்கிய இடங்களும் மூடப்பட்டு நாட்டினுடைய பொருளாதாரம் மறு புறம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது.

இதனுடைய தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள இவ்வாறான பல விளைவுகளை நாம் சரித்துக் கொண்ட போகலாம்.

தொடர்ந்து வாசிப்பதில் உங்களுக்கு சங்கடம் ஏற்பட்டு நான் முக்கியமாக சொல்ல வந்த விடயத்தினை நீங்கள் வாசிக்காமல் இந்த ஆக்கத்தினை கடந்து செல்லலாம் என்பதனால் இதனுடைய ஒரு சில விளைவுகளை மட்டுமே நான் இவ்விடத்தில் எடுத்துரைத்துள்ளேன்.

இது இவ்வாறிருக்க நான் சொல்ல வந்த விடயத்தினை இவ்விடத்தில் நேரடியாக சொல்லி விட்டு கிளம்புகின்றேன்.

பல இலட்சக் கணக்கான பெறுமதியான உயிர்களை இந்த அரக்கன் சர்வசாதாரணமாக காவு கொண்டு இந்த உலகில் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் எமது பொருளாதாரத்தை இழந்தால் பரவாயில்லை என்று நாம் ஓரளவு எமது மனதினை தேற்றிக் கொண்டாலும் எமது பல இலட்சக் கணக்கான உறவுகளை இழந்து விட்டோம் என்பதனை நினைக்கும் போது கண்கள் கண்ணீரை சுரக்க எமது மனம் மணல் வீடுகளைப் போல் உடைந்து நொறுங்குகின்றது.

இந்தக் கொடூர நோயினால் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)  இன்னும் சில நாட்களினால் முஸ்லிம்களாகிய நாம் புனித நோன்புப் பெருநாளை அடைய இருக்கும் காரணத்தினால் நாம் இழந்த பாதிப்புக்களைப் பற்றி இவ்விடத்தில் குறிப்பிடுகின்றேன்.

நாம் இது வரை இழக்காத ஐவேளைத் தொழுகையை ஜமாத்தாக(கூட்டாகத்) தொழும் பாக்கியத்தினை இழந்திருக்கின்றோம். 

சில வேளை இந்தக் கட்டுரையினை மாற்றுமத சகோதரர்களும் வாசிக்கலாம் என்பதனால் இதில் உள்ள சில அறபுச் சொற்களின் கருத்தின் தமிழ் வடிவத்தினை அடைப்புக்குறியினுள் இட்டிருக்கின்றேன்.

தொழாதவர் கூட வாரமொரு முறை ஓடிச் சென்று தொழும் ஜூம்மாத் தொழுகையினைக் கூட நாம் இழந்திருக்கின்றோம்.

வாருடமொரு முறை கிடைக்கும் பாக்கியமான பெருநாள் தொழுகையையும் இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)  இம்முறை இழக்கப் போகின்றோம்.

இதை விட பெரிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு என்ன இருக்கின்றது?

இது இவ்வாறு இருக்கும் போது இந்த முறைப் பெருநாளை விமர்சையாக கொண்டாட நாம் முயற்சி செய்தால் இந்த உலகத்தில் எம்மை விட மிகப் பெரிய முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. 

உலகத்தின் நிலைமை இப்படியிருக்க பெருநாளை மையமாக வைத்துக் கொண்டு ஆடைக் கடைகளைத் தேடி அலைந்து திரிவதனையும் ஆயிரம் துணிக் கடைகளுக்குள் பெண்கள் ஏறி இறங்குவதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

அரசினுடைய அறிவுரைகளுக்கு முற்று முழுதாக செவிசாய்த்து அதன் படி நடக்க வேண்டும்.

கொரோனாவுக்கு மருந்து தேடுவதனை விட்டு விட்டு மதம் தேடும் செயற்பாடு முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

பெருநாள் என்ற ஒற்றைச் சொல்லினை சாட்டாக வைத்து தேவையில்லாமல் அள்ளிச் செலவு செய்வதனை முற்றாகத் தவிர்த்து விட்டு நாட்டுச் சட்டதிட்டங்களை மதித்து இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இன,மத பாகுபாடின்றி உதவ வேண்டும்.

எமக்காக தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து தனது உயிரினைக் கூட துச்சமாக நினைத்துப் போராடும் வைத்தியர்கள், தாதியர்கள், பாதுகாப்புப் பிரிவினர்களுக்கு நாம் கொடுக்கும் மிகப் பெரிய கெளரவம் அவர்களுடைய அறிவுரைகளுக்கு கட்டுப்படுவதே.

இதனை கடைப்பிடித்து கொரோனாவை முற்றாக ஒழிக்கும் அரசின் செயற்பாடுகளுக்கு எமது பூரண ஒத்துழைப்பினை நாட்டுப் பிரஜை என்ற வகையில் நாம் அனைவரும் வழங்குவோம்.

No comments

Powered by Blogger.