Header Ads



கொரனா அசாதாரண சூழ்நிலையில், பள்ளிவாசல்களுக்கு உதவுவோம்

- எம்.எல்.பைசால் காஷிபி -

"மஸ்ஜித்"  என்ற  அரபுப்  பதம் "சுஜூத்"  என்ற  வினை  அடியில்  இருந்து உருவானது . இதன்    பொருள்  அல்லாஹ்வினை  சிரம் பணியும்  இடம்  ஆகும். இதனை   நாம் பள்ளிவாசல் என்று அழைக்கின்றோம்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வை துதி செய்யும் இடமாக இருந்த பொழுதிலும்   இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களின்  அனைத்து  விவகாரங்களையும்  ஒன்றிணைத்து  முன்னெடுத்துச்  செல்லக்கூடிய   கலங்கரை விளக்காகத்  திகழ்ந்துவந்துள்ளன.

பிற்பட்ட  காலங்களில்  இஸ்லாமிய சாம்ராச்சியத்தின் விரிவு   காரணமாக பள்ளிவாசல்களை தனியான நிருவாக பிரிவுக்குள் உட்படுத்தி பல சேவைகளை பள்ளிவாசல் மூலமாக முன்னெடுக்கப்பட்டன.

இஸ்லாமிய அல்லது அரபு நாடுகளில் "அவ்ஃகாப்"  அமைச்சு பள்ளிவாசல்களின் சேவைகளை  மக்களுக்கு   பரந்த  அடிப்படையில்  வழங்கிக் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்கள்  சிறுபான்மையாக வாழும் இலங்கை, மற்றும்   இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு  பள்ளிவாசல்களின்  பங்களிப்புக்களை அந்நாடுகளின் வாழும் முஸ்லிம் தலைவர்கள் சட்டரீதியாக பெற்றுக் கொடுத்து இஸ்லாமிய நாடுகளைப்  போன்று சிறப்பு சலுகைகைகள் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட அம்சங்களை  வரையறுத்து பொது ஒழுங்கின் கீழ் பயணிக்க சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எமது  நாட்டில் முஸ்லிம் கலாசார திணைக்களம்   மற்றும்  "வக்பு" சபை பள்ளிவாசல்களுக்கான சில சரத்துக்களை வரையறைசெய்து கொடுத்துள்ளது. இருப்பினும் பள்ளிவாசல்கள்  அமையபெற்ற கிராமங்களின் தேவை கருதி பொது அம்சங்களை உள்ளடக்கி தமக்குள் சில வரையறைகளை ஏற்படுத்திக் கொள்ள பள்ளி "ஜமாஅத்தி"னருக்கு  திணைக்களம் திறந்த அங்கீகாரத்தினையும்  கொடுத்துள்ளது.

இந்த வகையில் இலங்கையில் பள்ளிவாசல்களை நிருவகிப்பதற்காக குடிமுறைத்  தெரிவு மூலமான நிருவாக அமைப்பு   ,ரெஸ்டி முறை மூலமான நிருவாக அமைப்பு   , மற்றும் பொதுத்  தெரிவு மூலமான நிருவாக அமைப்பு, அமைப்புகளின் தலைமையில் இயங்கும் நிருவாக அமைப்பு    போன்ற நிருவாக முறைகளைக்  காணலாம்.

பள்ளிவாசல்களின்  நிருவாகக்  கட்டமைப்புக்கள் 
இரு வகையான அமைப்பில் நிருவாகக்  கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. 
முதலாவது வகை :
கிராமத்தின்  நிருவாகக்  கட்டமைப்பினைக்  கருதி அக்கிராமத்திலுள்ள பெரிய பள்ளிவாசலின் நிருவாகத்தினை பிரதானமாகக் கொண்டு சகல பள்ளிவாசல்களும் இணைந்த நிருவாகமாக செயற்படுதல். இவ்வாறான அமைப்பின்   போது  கிராமத்தின் பள்ளிவாசலுக்குரிய சொத்துக்கள் அனைத்தினதும் வருமானங்கள் மற்றும் ஜமாஅத்தினர் மூலமான  அன்பளிப்புகள் போன்றன   பெரிய பள்ளிவாசலின் பொறுப்பில் இருப்பதுடன்  சகல ஊழியர்களுக்குமான சம்பளம் மற்றும்   ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் போன்றன   பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் பொறுப்பில் இருக்கின்றன. அதேவேளை  ஏனைய செலவுகளை குறிப்பிட்ட பள்ளிவாசல்களுக்கான நிருவாகங்கள் மஹல்லா ஜமாஅத்தினரின் பங்களிப்புகளுடன் மேற்கொள்கின்றன. 

இரண்டாவது வகை 

 ஒரு கிராமத்திலுள்ள பெரிய பள்ளிவாசலின் தலைமையில் நிருவாக ரீதியான கட்டமைப்புடன்  சகல  பள்ளிவாசல்களினதும் நிருவாகங்கள்   இருந்தபொழுதிலும்  ஒவ்வொரு பள்ளிவாசலும் பிரத்தியேகமான நிருவாக அமைப்பினைக் கொண்டுள்ளதுடன்  , வாருமானங்களைத்  தேடுதல், ஊழியர்களுக்கான சம்பளத்தினை வழங்குதல், தனித்துவமான  தீர்மானங்களை  மேற்கொள்தல்  போன்ற செயற்பாடுகளைக்  கொண்டு இயங்குகின்றன .

பள்ளிவாசல்களின் பொருளாதார நிலை 
1.ட்ரஷ்ட் அமைப்பு   நிருவாக சபைகளை கொண்டுள்ள பள்ளிவாசல்களின் பொருளாதாரம்
2. நிலையான சொத்துக்களையும், ஜமாஅத்தினரின் பங்களிப்புக்களையும் கொண்டுள்ள வருமான நிலை
3. குறைந்தளவு நிலையான சொத்துக்களையும், ஜமாஅத் உறுப்பினர்களின் பங்களிப்புக்களையும்  கொண்டுள்ள வருமான நிலை  
4. நிரந்தர வருமானம் இன்றி ஜமாஅத் உறுப்பினர்களின் பங்களிப்புக்களில் மாத்திரம் தங்கியுள்ள பொருளாதார அமைப்பு.

கொரனா அசாதாரண  சூழ்நிலையினைத் தொடர்ந்து பள்ளிவாசல்களை நிருவகித்தல் ,மக்களை ஒன்றிணைத்தல் ,கூட்டுத்தொழுகை, மார்க்க வகுப்புகளை  நடாத்துதல் ,சமுக வழிகாட்டுதல்களை மேற்கொள்ளல் ,ஜமாஅத்தினரிடையே ஏற்படும் பிணக்குகளைத்  தீர்த்து வைத்தல்,கல்வி மேம்பாட்டிற்கு துணை நிற்றல் ,கலாசார விழுமியங்களை உயிர்பித்தல் ,ஜனாஸா நலன்புரி செயற்பாடுகளை  செய்தல் ,திருமண விவகாரங்களை முன்னெடுத்தல், ஸகாத் நிதியத்தினை  முகாமை செய்தல் போனற பல செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பள்ளிவாசல் நிருவாகங்கள் சமூகத்தில் மிகப்பிரதான பாத்திரத்தினை வகிக்கின்றன.

இருப்பினும் கொறணா அசாதாரண   காலகட்டத்தில் மக்களை  ஒன்றிணைத்து  செயற்படுத்துகின்ற எந்தவொரு செயற்பாட்டினையும் ஆரோக்கியமாக முன்னெடுக்க முடியாத சூழ்நிலையும்  ,சகோதரத்துவத்   தொடர்பாடலுக்கும் ஆன்மீக மேம்பாட்டிற்கும் துணைநின்ற பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ள நிலையும்  பள்ளிவாசல்கள் வகித்து வந்த முக்கியத்துவத்தினை சமூகத்தில்  உணர்த்தியுள்ளது. 

என்றாலும் பள்ளிவாசல் நிருவாங்களின் பொறுப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. பள்ளிவாசல்களைநிருவகித்தல்   என்ற தலைப்பில் அடங்குகின்ற அனைத்து விடயங்களும் நிருவாகங்களின் பொறுப்பில் இருந்து முன்னெடுக்கப்படுகின்றன.இதில் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குதல் மிகவும் முக்கியமான அம்சமாகும். 

போதிய நிதிவளங்களை உடைய பள்ளிவாசல்களில்  சிரமமின்றி சம்பளங்கள்  கொடுக்கப்படுகின்றன.   என்றாலும் குறைந்த வருமானமும் ,மற்றும் ஜமாஅத்தினரின்  அன்பளிப்புகளிலும்  ,உண்டியல்களின் மூலமான  வருவாய்களிலும் தங்கியுள்ள  பள்ளிவாசல்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்குகின்றன.

ஜமாஅத்தினர்களிடம்   சென்று அன்பளிப்புகளைப்  பெற முடியாத நிலை ,ஜமாஅத்தினர்களின் வருவாய்கள் குறைந்த நிலை , உண்டியல்கள்  மூலமான வருவாய்கள் அற்ற நிலை,பள்ளிவாசல்களின் வாடகை கட்டடங்களில் வர்த்தக நடவடிக்கைகளில்  ஈடுபடுவோர்  போதிய வருமானம் இன்றி பணத்தினை செலுத்த முடியாத நிலை போன்ற காரணங்களால் வருமானம் குறைந்து சகல பொறுப்புகளும் பள்ளிவாசல்களின் நிருவாகங்களின் பொறுப்பில் உள்ளன.

இந்நிலையில் இருந்து விடுபடல் அவசியமாகும், சமூகத்தின் ஆரோக்கியம் பள்ளிவாசல்  நிருவாகங்களின் செயற்பாட்டில் தங்கியுள்ளதால் எல்லோரினதும்   பங்களிப்புகள் அவசியமாகின்றன.

இது போன்ற அசாதாரண சூழ்நிலையான  காலத்தில் பள்ளிவாசல் நிருவாகிகள்  முன்னின்று விடயங்களை முன்னெடுத்துச்செல்ல ஒவ்வொரு கிராமத்திலும்  பெரிய பள்ளிவாசல்களை மையமாகக்  கொண்ட பைத்துல்மால் உருவாக்கப்படல் வேண்டும் இது பள்ளிவாசல்களுக்கும்   தேவையுடைய மக்களுக்கும்  உதவக்கூடியதாக அமையும்.

கிராமங்களில் உள்ள வக்பு  சொத்துக்கள் ஒரு முகப்படுத்தப்பட்டு நிருவகிக்கப்படல் வேண்டும் அதேபோன்று   ஸகாத் பள்ளிவாசல்களை சார்ந்த அமைப்பில் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

மேலும் நலன் விரும்பிகள்,கொடை வள்ளல்கள் கிராமங்களில் நிறுவனமயமான செயற்பாடுகளுக்கு துணை நிற்றல் சிறப்புடையதாக அமையும். 

போதிய வருமானங்களைக்   கொண்ட கிராமங்களின் பள்ளிவாசல் நிருவாகங்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தேவையுடைய  கிராமங்களுக்கு உதவ முன்வரல் வேண்டும்.

மேலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இது போன்ற சந்தர்பங்களிலாவது பள்ளிவாசல்களில் கடமை புரியும் ஊழியருளுக்கு  விசேட ஊக்கிவிப்புக்களை கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்  சிறப்பாக இருக்கும். சம்பளத்தினைக்  கொடுக்குமாறு பணிப்புரை வழங்கும் திணைக்களம் பள்ளிவாசல்களின்  நிதி நிலைமையினை அறிந்து உதவுவதற்கு முன்வரல் வேண்டும் .

அதேபோல் சமூகத்தில் உள்ள பரோபகாரிகள் , நலன்விரும்பிகள் பள்ளிவாசல்களின் ஊழியர்களுக்கான கொடுப்பனவு விடயத்தில் அவர்களது ஸகாத் பங்கின் ஒரு பகுதியை பள்ளிவாசல்களின் ஊழியர்களுக்கு  கொடுக்க முன்வரல்  வேண்டும்.

மேலும் ரமழானுடைய காலத்தில்  நபி (ஸல்) அவர்கள் வீசுகின்ற காற்றை விட அதிகமாக தர்மங்கள் புரியக்கூடியவர்களளாக இருந்துள்ளார்கள் எனவே  இக்காலப் பகுதியில்  பள்ளிவாசல்கள் அதிகமான தேவையுடையதாக இருப்பதனால் ரமழான் கால அன்பளிப்புகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மிகவும் ஏற்புடையதாக அமையும். 

தபூக் யுத்தத்தின் போது வறுமை குடிகொண்டிருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நபித் தோழர்கள் தங்களது பங்களிப்புக்களை வழங்கியது போன்று கிராமங்களில் உள்ள இயலுமான நலன் விரும்பிகள் பள்ளிவாசல்களுக்கு பங்களிப்புக்களை வழங்கி நன்மைகளைப் பெற முயற்சித்தல் அவசியம்.

மேற்படி ஆலோசனைகளைக்  கவனத்திற்கொண்டு பள்ளிவாசல் நிருவாக்கங்கள் சிரமமின்றி விடயங்களை  முன்னெடுக்க துணைநிற்போமாக 

No comments

Powered by Blogger.