Header Ads



கொரோனாவின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பதால், டெங்குநோய் தாக்கத்தை மறந்துவிட்டோம்

(ஆர்.யசி )

சுகாதார அதிகாரிகள் அனைவரும் கொவிட் -19 வைரஸ் தொற்றுப் பரவலின் பின்னால் ஓடிக்கொண்டுள்ள காரணத்தினால் டெங்குநோய் தாக்கத்தை மறந்துவிட்டோம். ஆனால் நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்குநோய் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். 

டெங்கு - கொவிட் 19 ஆகிய  இரண்டு நோய்களுக்கும் காய்ச்சல் பிரதான அடையாளமாக காணப்படுகின்றது. எனவே எமக்கும் இதில் நோயாளர் எந்த நோயில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிய சிரமங்கள் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய சுகாதார சூழல், தொற்றுநோய் பரவல் குறித்த அச்சம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் இலங்கையர்கள் முழுமையாக தனிமைப்படுதல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டே தமது பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

அவ்வாறு வந்தவர்களின் ஒரு சிலர் கொவிட் -19 தொற்றாளர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அது குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை. யார் இலங்கைக்குள் வருகை தந்தாலும் அவர்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டே அனுப்பப்படுவார்கள். நோயாளர்களாக இருந்தாலும் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும் அவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுதல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

 இலங்கை பிரஜைகள் மாத்திரமே இப்போது வரையில் நாட்டிற்கு வரவழைக்கப்படுகின்றனர். அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதால் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் சமூகப்பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை.

எனினும் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் திறக்கப்படும் நேரங்களில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வரும் நிலையில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும். அவர்களை எவ்வாறு கண்காணிப்பது என்பதில் சிக்கல் உள்ளது. எனவே அது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். விமானநிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் நேரங்களில் எமது யோசனைகளுக்கு அமைய மாற்று வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

கொவிட் -19 நோயினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்களை விடவும் குணமடைந்து வீடுகளுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆகவே நோய் தாக்கங்களில் இருந்து நாம் விடுபடுகின்றோம் என்பதே இதில் தெரிகின்றது. தொடர்ந்தும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதுவரையில் 45 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டில் தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்களை மிகவும் சிரமங்களுக்கு உற்படுத்தி வருகின்றோம் என்றே நாம் கருதுகிறோம். ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்துமே மக்களை பாதுகாக்கவே தவிர வேறு எதற்காகவும் அல்ல என்பது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனைய நாடுகள் இன்று மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான உயிரிழப்புகளை சந்தித்து வருகின்ற நிலையிலும் நாம் எமது மக்களை பாதுகாத்துள்ளோம் என்றால்  அது எமது இந்த வேலைத்திட்டத்தினாலேயேயாகும். எனினும் இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்காது. படிப்படியாக நாடு முழுமையாக விடுவிக்கப்படும்.

கடந்த 16 நாட்களாக நாட்டில் எந்தவொரு நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை. தனிமைப்படுத்தல் முகாம்களில் மட்டுமே நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எனவே படிப்படியாக மக்கள் வழமைக்கு வர முடியும். ஆனால் மீண்டும் நோய் தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எம்மால் இவ்வாறான நோய்களில் இருந்து முழுமையாக விடுபட முடியாது. கொவிட் -19 நோய் எம்முடனே சமூகத்தில் வாழும்.

எனினும் மக்கள் மிகவும் கட்டுப்பாடுகளுடன் சமூக பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும். இப்போது வரையில் கடற்படையில் தொடர்ந்தும் நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இது மாத்திரமே இப்போது எமக்கு நெருக்கடியாக உள்ளது. தொடர்ச்சியாக நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதன் காரணத்தினால் மாற்று நடவடிக்கைகள் கையாள வேண்டியுள்ளது. எனவே கடற்படையினர் குறித்து மாற்று நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் கையாளப்படும்.

அதேபோல் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் குறித்த பரிசோதனைகளுக்கு பின்னால் நாம் சென்றுகொண்டுள்ள இந்த நிலையில் டெங்கு நோய் பரவல் குறித்த காரணிகளை நாம் மறந்துவிட்டோம். இப்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகளவில் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

இதில் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், டெங்கு - கொவிட் 19 இரண்டு நோய்களுக்கும் காய்ச்சல் பிரதான அடையாளமாக காணப்படுகின்றது. எனவே எமக்கும் இதில் நோயாளர் எந்த நோயில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிய சிரமங்கள் ஏற்படும். எனவே மக்கள் இது குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும். எவ்வாறான நோய் அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மக்கள் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.