Header Ads



முஸ்லிம்களைக் கொன்றொழித்த மங்கோலியர்களின், மனங்களை மாற்றிய இறைவன் - யார் இந்த பெர்கேகான்?

பெர்கே கான்

- M S Abdul Hameed -

மங்கோலிய ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர். மங்கோலியர்கள் அழிச்சாட்டியம் புரிந்து அகில உலகையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த நேரம்.

பெர்கே கானும் நிறைய படையெடுப்புகளை நடத்தினார். நிறைய அழிச்சாட்டியங்களை அரங்கேற்றினார். ஆனால் அல்லாஹ் மங்கோலியர்களிடையே இஸ்லாமியத் தென்றலை இதமாக வீசச் செய்தான்.

புகாராவிலிருந்து வந்த ஒரு வியாபாரக் கூட்டத்தை பெர்கே கான் சரய்ஜுக்கில் சந்திக்க நேர்ந்தது. அவர்களின் இறைநம்பிக்கைகளைப் பற்றி விசாரித்தார் பெர்கே கான்.

அவர்கள் அழகிய முறையில் இஸ்லாமை பெர்கே கானுக்கு எடுத்து வைத்தனர். அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் இஸ்லாம் எஃகுப் பாறை மனங்களிலும் கூட ஊடுருவிச் செல்லும் அன்றோ! இஸ்லாமிய விழுமியங்களை இமை கொட்டாமல் கேட்டார் பெர்கே கான். இஸ்லாம் கற்றுத் தந்த அற்புதப் பாடங்களைக் கேட்கக் கேட்க பாலைவன மண்ணில் நீர் சுரப்பது போல் அவரது பாலை மனத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இஸ்லாமின் ஒவ்வொரு விடயமும் பெர்கே கானைக் கவர்ந்திழுக்க அங்கேயே ஆரத் தழுவினார் இஸ்லாமை! யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற்றிடவேண்டும் என்று விரும்பிய பெர்கே கான், முதலில் தன் சகோதரர் துக் தைமூருக்கு இஸ்லாமை அழகுற எடுத்து வைத்தார். துக் தைமூரும் இஸ்லாமைத் தழுவினார்.

இப்படித்தான் இலட்சக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்த கூட்டமான மங்கோலியர்களின் மனங்களில் மங்காப் புகழ் மார்க்கம் மடைதிறந்த வெள்ளமாய்ப் பாய்ந்தது.

பெர்கே கான்தான் மங்கோலியப் பேரரசில் இஸ்லாமை நிறுவிய முதல் மன்னர். நாளுக்கு நாள் அவருக்கு இஸ்லாமின் மேலுள்ள அன்பும் ஆர்வமும் அதிகரித்தது. செங்கிஸ் கானின் பேரன் ஹுலகு கான் தலைமையில் மங்கோலியர்கள் அப்பாவி முஸ்லிம்களைக் கொல்வதையும் பெண்களைப் பாலியல் பலாத்காரங்கள் செய்வதையும் கேள்விப்பட்ட பெர்கே கான், அவர்களுக்கெதிராகப் புரட்சி செய்ய ஆரம்பித்தார். எகிப்திலுள்ள மம்லூக்குகளுடன் கூட்டணியை ஏற்படுத்தினார்.

இப்படி மங்கோலியர்களுக்கிடையே உட்சண்டைகள் நடக்க ஆரம்பித்தன. இது கிபி 1262ல் வெளிவந்தது. கிபி 1263ல் ஹுலகு கான் படையை பெர்கே கான் கைப்பற்றி, கடுமையான தோல்வியை ஏற்படுத்தினார். மாவீரராகத் திகழ்ந்த பெர்கே கான், மங்கோலியர்களின் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தானையும் இன்னும் பல பகுதிகளையும் விடுவித்தார்.

இப்படி இஸ்லாமின் இரும்புத் தூணாக மாறிய பெர்கே கான், கிபி 1266ல் ஹுலகு கானின் மகன் அபாகா கானை எதிர்கொள்வதற்காக குரா ஆற்றைக் கடக்கும்பொழுது சுகவீனமுற்று மரணமெய்தினார். மங்கோலியாவிலுள்ள புர்ஹான் ஃகுல்தூன் என்ற இடத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

3 comments:

  1. Lecha kanakkana muslimgalai kollum podhu allahwin udhawi warawillaya.lechakanakana muslimgalai kondru olithawanukku hidhayath nandru aware unmayana peyer genghiskhan

    ReplyDelete
  2. அவரது பெயர் பரகா கான். ஜெங்கிஸ் கானின் பெறப் பிள்ளை ....

    ReplyDelete
  3. அவரது பெயர் பரகா கான். ஜெங்கிஸ் கானின் பேரப் பிள்ளை ....

    ReplyDelete

Powered by Blogger.