Header Ads



இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை


இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட்டில் நேற்றைய -12- தினம் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர்கள் கடந்த இரண்டு மாத காலமாக எவ்வித பயிற்சிகளிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூன் மாதத்தில் பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் கவனம் செலுத்தி வருகின்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டி மெல், பிரதம பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்த்தர், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் அண்டி ப்ளவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன மற்றும் ரி20 தலைவர் லசித் மாலிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

தேசிய அணி வீரர்கள் தங்கியிருந்து பயிற்சிகளில் ஈடுபடும் திட்டமொன்றை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தங்கியிருந்து பயிற்சிகளில் ஈடுபடும் வீரர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.

எவ்வாறெனினும் பயிற்சிகளை ஆரம்பிப்பது குறித்து இன்னும் பத்து நாட்களில் மீளவும் கூட்டம் ஒன்றை நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.