Header Ads



இலங்கையை தொடர்ந்தும் பாதுகாப்பான நாடாக உறுதிப்படுத்துவது அனைவரதும் பொறுப்பாகும் - அனில் ஜாசிங்க

(எம்.மனோசித்ரா)

மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் மற்றும் பொருளாதாரத்தைக் கருத்திற் கொண்டு நாடு முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டாலும் அதன் மூலம் மீண்டுமொரு அவதான நிலையை நோக்கியே நாம் செல்கின்றோம். 

எனவே இலங்கையை தொடர்ந்தும் பாதுகாப்பான நாடாக உறுதிப்படுத்துவது அனைவரதும் பொறுப்பாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வியாழக்கிழமை இனங்காணப்பட்ட 27 வைரஸ் தொற்றாளர்களில் 25 பேர் கடற்படை வீரர்களாவர். எஞ்சிய இருவரில் ஒருவர் கடற்படை வீரரின் உறவினரும் மற்றைய நபர் வியாழனன்று டுபாயிலிருந்து விசேட விமானம் மூலம் நாடு திரும்பியவராவார்.

இவர் விமான நிலையத்தில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் அவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புபவர்கள் அனைவரும் நிச்சயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் தெளிவாகிறது. பி.சி.ஆர் பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டாலும் சில சந்தர்ப்பங்களில் விடுபடக் கூடும். எனவே தனிமைப்படுத்துவதே சிறந்த வழிமுறையாகும்.

மேலும் எதிர்வரும் தினங்களில் நாடு வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் மீண்டுமொரு அவதான நிலைக்கே நாம் செல்கின்றோம். இந்த சந்தர்ப்பங்களில் வைரஸ் பரவல் அதிகரிக்கக் கூடும். எனினும் பொருளாதாரம் மக்களின் வாழ்வாதாரம் என்பவற்றை கருத்திக் கொள்ளும் போது தொடர்ந்தும் நாட்டை முடக்க முடியாது.

தனியார் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் எம்மால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இலங்கை பாதுகாப்பான நாடு என்பதை உறுதிப்படுத்தியதைப் போன்று தொடர்ந்தும் அந்த பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இது அனைவரதும் பொறுப்பாகும் என்றார்.

1 comment:

  1. We muslim do not feel safe as you do not even allow us to burry our dead bodies...

    We feel not safe while living due to racists and we feel not safe after death due to your dicsion of burning our dead bodies.

    You claim is opposit...

    ReplyDelete

Powered by Blogger.