Header Ads



கொரோனாவைக் காரணம் கூறி தேர்தலை ஒத்திவைக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை: ஜனாதிபதி சார்பில் வாதம்

கொரோனா என்று கூறி தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என ஜனாதிபதியின் செயலாளர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா, உயர்நீதிமன்றில் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று -21- 4ஆவது நாளாகப் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போதே அவர் இந்த வாதத்தை முன்வைத்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூர்ய தலைமையில் நீதியரசர்கள் புவனேகே அலுவிஹார, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வே இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துள்ளது.

மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா இன்று சமர்ப்பணத்தை முன்வைத்தார். இந்த மனுக்களுக்கு சட்டபூர்வமான அடிப்படை இல்லை என்றும், விசாரிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப் படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் ஆணையக்குழு தொடர்ந்து தேர்தலை ஒத்திவைக்க முடியாது.கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணைக்குழு ஒரு சுகாதாரப் பாதுகாப்பு முறையை வகுத்து தேர்தல்களை நடத்த கவனம் செலுத்தவேண்டும். அரசமைப்பின் படி, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்த பின்னர் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. தேர்தல் திகதி மாற்றப்பட்ட பின்னரே கலைப்பு உத்தரவு செல்லாது. மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றக் கலைப்பு அரசமைப்பின் பிரிவு 32 (2) இன் கீழ் மேற்கொள்ளப்பட்டது” என்று ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா தனது சமர்ப்பணத்தில் சுட்டிக்காட்டினார்.

விசாரணைகள் நாளை காலை 10.00 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகி நடைபெறும்.

No comments

Powered by Blogger.