May 04, 2020

ரணில் அழைக்கும் போதெல்லாம் போன முஸ்லிம் கட்சிகள், மகிந்த அழைத்த போது அலரி மாளிகைக்கு போகாதது ஏன்..?

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுவரும்  மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் அலரிமாளிகை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரதான எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ள வேண்டும் என அரசாங்கம் கூறிவந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சிகள் எவையும் கலந்துகொள்ளப்போவதில்லை என அவர்கள் அறிவித்திருந்தனர். மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்திலேயே இந்த அழைப்பை நிராகரித்த நிலையில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தேசிய மக்கள் சக்தி கட்சியும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்ற காரணத்தை கூறியிருந்தனர். ஐக்கிய தேசிய கட்சி பிரதமரின் அழைப்பை ஏற்பதாக கூறியிருந்த நிலையிலும் இறுதி நேரத்தில் அவர்களின் முடிவினை மாற்றிக்கொண்டனர்.

இந்நிலையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டதுடன் தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரசினைகள் குறித்து பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பிடம் காரணிகளை கூறியிருந்தனர். தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் அவர்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினைகள், வாழ்வாதாரமின்றி மக்கள் படும்துன்பங்கள் என்பவற்றை அவர்கள் பிரதமரிடம் எடுத்துக்கூறியதுடன்  தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்கி அதில் சகல மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில் கூறியதானது,

கடந்த ஐந்து ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அழைக்கும் போதெல்லாம் அலரிமாளிகையில் கூடிப் பேசிய மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் அரசியல் கட்சிகள்  மற்றும் சஜித் தரப்பினர் நாட்டில் மிகமுக்கியமான பிரச்சினை குறித்து ஆராயும் வேளைகளில் அதனை புறக்கணிப்பதன் மூலமாக அவர்களின் அரசியல் கொள்கை என்ன என்பது தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கான உதவிகளை வழங்க அரசாங்கம் சகல தரப்பின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்கும் இந்த வேளையிலும் இவர்கள் அனைவரும் மக்கள் குறித்து சிறிதும் கருத்தில் கொள்ளாது தமது பழிவாங்கும் அரசியலை முன்னெடுப்பது வேதனைக்குரிய விடயமாகவே நாம் கருதுகின்றோம்.

அதுமட்டும் அல்லாது இவர்கள் அலரிமாளிகை கலந்துரையாடலை புறக்கணித்துள்ளதன் மூலமாக இவர்களின் ஒரே நோக்கம் பாராளுமன்றத்தை கூட்டுவதும் அதன் மூலமாக நாட்டில் அரசியல் குழப்பம் ஒன்றினை ஏற்படுத்துவது என்பதும் தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. மக்கள் பிரச்சினையை பேசி அனைவரும் இணைந்து தீர்மானம் ஒன்றினை எடுப்போம் என்பதுவும், நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படும் என்றால் அதனை பேசி ஒதுக்கீடுகளை செய்துகொள்ள முடியும் என்பதனை கருத்தில் கொண்டே அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். ஆனால் எதிர்க்கட்சியினர் அதற்கு இணக்கம் தெரிவிக்காது, பாராளுமன்றத்தை கூட்டுங்கள் என்ற காரணியை மட்டுமே கூறி வருகின்றனர். என்றால் உண்மையில் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க இவர்கள் நினைக்கவில்லை என்பதே உண்மையென வெளிப்பட்டுவிட்டது.  எனினும் தமிழ் தேசிய கூட்டமைபின் சகல உறுப்பினர்களும் நிலைமையை உணர்ந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அலரிமாளிகை கலந்துரையாடலில் கலந்துகொண்டமைக்கான விசேட நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

4 கருத்துரைகள்:

முஸ்லீம் கட்சிகள் ஏன் போகவேண்டும்?இன்னும் எதை கேட்க வேண்டி உள்ளது உங்களிடம்!எதையும் கேட்கத் தேவையில்லை நீங்கள் செவிசாய்க்க மாட்டீர்கள் என்பதை கொரோனா ஜனாஸா விடயத்தில் புரிந்து கொண்டோம்.மத நம்பிக்கையையும் அதன் கட்டாய கடமைகளையும் நிறைவேற்ற வாய்பிருந்தும் அது மறுக்கப்படுமானால் அதைவிட இந்த சமுதாயத்திற்கு வேறு என்ன வேண்டும்?

பாராளுமன்றத்தை கூட்டுவதனால் நாட்டில் குழப்பநிலை உருவாகும் என்று இருந்தால் பிறகு பாராளுமன்றத் தேர்தல் எதட்கு?
மக்களின் பிரட்சிணைகளுக்கு தீர்வு கானவும் நிதி ஒதுக்கீடு செய்து கொள்ளவுமே பாராளுமன்றமும் அமைச்சர்களும் முக்கியமாகின்றது.. ஆனால் இங்கே அங்கீகரிக்கப்பட்ட அமைச்சர்களும் இல்லாமல் பாராளமன்ற எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படாமலும். நாட்டின் அரசியல் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலும் எவ்வாறு நீங்கள் நினைத்து நடந்து கொள்வதை எல்லாம் சட்டமாக்க முடியும். ஆகவே நாட்டு மக்களையும் உலகத்தையும் ஏமாற்றுபவர்கள் நீங்கள்தான்...

as a responsible leader of the muslim, you should participated in that meeting sir. as your opinions, you select opposition party. but in current situation I think you and mr rishard both was make mistake.

முதலில் இவ்வாறான "தலைப்பிடுதலைத்" தவிர்க்க வேண்டும், மற்றது சர்வாதிகாரத்துக்கு சரணாகதி எனும் மரபு நிராகரிக்கப்படவும் வேண்டும்???

Post a Comment