Header Ads



ரமழான் தர்மங்களில் பள்ளிவாசல்களின், ஊழியர்களை சேர்த்துக் கொள்வோம்

- எம்.எல்.பைசால் காஷிபி -

ரமழான்   மாதத்தின் இறுதிப் பகுதியை அண்மித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் எல்லோரும் இபாதத்களில்  ஈடுபட்டு , அல்லாஹ்வுடன்  தொடர்பை அதிகரித்துக் கொண்டு பிரார்த்தனையிலும்,தௌபா கேட்பதிலும் ,நீண்ட இரவு வணக்கங்களில்  ஈடுபடுபவர்களாகவும் எமது  செயற்பாடுகளை  வீடுகளில் இருந்தவாறே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ரமழானின் காலப் பகுதியில் செயற்படுத்தக்கூடிய அவசியமான செயற்பாடுகளில் ஒன்றுதான்  ஸதகா  தர்மங்கள் புரிவதாகும்.ரமழானில்  கொடுக்கப்படும் தர்மங்கள் ஏனைய காலங்களை விட அதிகமான நன்மைகளைப்  பெற்றுத் தரக்கூடியதாகும். 

ரமழானில் ஸதகா செய்வதன் சிறப்பு

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் 
நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். (புஹாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: (அதில் ஒருவர்) தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (புஹாரி)

ரமழானில் மேற்கொள்ளப்படும் தர்மங்கள் ஏனைய  காலங்களில் முன்னெடுக்கப்படும் தர்மங்களை  விட  இரட்டிப்பான நன்மைகளுக்குரியதாக மாறிவிடுகின்றன.

அக்காலத்திலேதான் கடமையான நோண்பு, நோன்புடன்  தொடர்பான  இப்தார் ,ஸஹர் போன்றனவும் மற்றும்   அல்லாஹ்வுடனான தொடர்புகளும்  அதிகரித்துக் காணப்படுவதனால்   நோன்புடன் தொடர்பான தேவைகள்  அவசியமானவையாக காணப்படுகின்றன.கிடைக்கப்பெறும்  தர்மங்கள் மேற்படி விடயங்களை முன்னெடுப்பதற்கு பயன்படுத்தப்படுவதனால்  சில போது ரமழானில் மேற்கொள்ளப்படும் தர்மத்தினை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துள்ளார்கள் எனக்  கொள்ளமுடிகின்றது அல்லாஹ் அறிந்தவன். 

 இந்நிலையில் எமது தர்மங்களை தேவையுடைய மக்களுக்கு சென்றடையவைக்கும் விடயத்தில் முனைப்பாக ரமழானின் காலப்பகுதியில் ஈடுபடவேண்டிய பொறுப்பும் எமக்கு இருக்கிறது.

கொரனா  வைரஸ்  தாக்கத்தின் பிடியினால் இம்முறை நாம் சந்தித்துள்ள  ரமழான் எமக்கு அண்மித்துள்ள வரலாற்றுக்  காலங்களில் நாம் அறியாத ஒரு அனுபவத்தினை தந்துள்ளது. எமது  நாட்டில்  மட்டுமல்லாது  உலகின் பெரும்பாலான நாடுகள் இவ்வைரஸ் தாக்கத்தினால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி பலவகையிலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பெரும் பெரும் வல்லரசுகள் கூட இதன் அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை.

 நிறுவன உரிமையாளர்கள்,  பாமரர்கள், அன்றாட கூலித்தொழிலாளர்கள்.  அரச உத்தியோகத்தர்கள் போன்ற  பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

பாதிக்கப்பட்டவர்களில் எமது பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள்,முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களும் அடங்குகின்றனர்.

ரமழானில் தேவைகள் அதிகரித்து இருப்பதனால் ரமழான்  காலப்பகுதியில்  பள்ளிவாசல்கள் இயங்கும் நிலையில் பல அன்பளிப்புகளை பெற்றுவந்த இவர்கள் இவ்விடர் காலத்தில்  தங்களது     வாழ்க்கையினை ஓட்டுவதில் மிகுந்த சங்கடங்களை எதிர்நோக்குகின்றனர்.

மேலும் பள்ளிவாசல் நிருவாகிகள் ஊழியர்களுக்கு சம்பளங்களை  கொடுக்கும் விடயங்களை முன்னெடுத்தாலும் அவர்களும்   மிகுந்த சிரமங்களை  சந்திக்கின்றனர். நாளாந்த வருமானங்கள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள காலப்பகுதியில் இதே  நிலை  தொடர்ந்தால் எவ்வாறு  மேற்கொண்டு விடயங்களை  முன்னெடுப்பது என்ற  கேள்விக்குறியான நிலையிலேயே   நிருவாகிகள் இருக்கின்றனர். போதியளவு நிதியினைக் கொண்டுள்ள குறிப்பிட்ட   சில பள்ளிவாசல்களைத்  தவிர ஜமாஅத்தினரின் பங்களிப்பினைப்  பெற்று இயங்கும் பெரும்பாலான பள்ளிவாசல் நிருவாகங்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்க வேண்டிய சூழல் இருக்கிறது .

இது பற்றி நலன் விரும்பிகள் மற்றும் பரோபகாரிகள் சிந்தித்து  தத்தம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை வகுத்தல் சிறப்புக்குரியது.

மேலும் இது விடயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு சம்பளங்களை கொடுக்குமாறு அறிவுறுத்தல் கொடுப்பதுடன் நின்று விடாது நிருவாகங்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்களை கவனத்திற்கொண்டு பொருத்தமான ஏற்பாடுகளை அரச உதவி மூலமாவது  பெற்றுக்  கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மிகவும் சிறப்புக்குரியதாக அமையும் .

எது எவ்வாறு  இருந்த பொழுதிலும் நன்மைகள் இரட்டிப்பாக கிடைக்கப்பெறவுள்ள இக்காலத்தில் மத்தியதர வர்க்கத்தினராக இருக்கும் பள்ளிவாசல்களில் கடமையிலுள்ள ஊழியர்களையும்    ரமழான் தர்மங்களில் சேர்த்துக்கொள்வது  மிகவும் பிரயோசனமுள்ளதாக அமையும்.

'ஓர் அடியான் இன்னொரு அடியானுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி செய்து கொண்டே இருப்பான்' என  நபி  (ஸல்) அவர்கள்  கூறினார்கள். (முஸ்லிம்)

எனவே  மேற்படி ஆலோசனைகளை   கவனத்திற்கொண்டு செயற்பட்டு  இரட்டிப்பான நன்மைகளைப்  பெற அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.    

No comments

Powered by Blogger.