May 17, 2020

அடுத்த வருடம், உயிரோடு இருப்போமா...?


ரமழான்_பேசுகிறேன்
உன்னிடம் நான் வந்து
சில நாட்களாகிவிட்டன.
உன்னை விட்டு இன்னும் சில நாட்களில்
விடைபெற்றுப் போய்விடுவேன்.
என் தவணை முடிய 
இன்னும் சில தினங்களே இருக்க,
உன்னிடம் கொஞ்சம் பேசுவதற்காக உன் பக்கம் வந்திருக்கிறேன்.

எல்லாரையும் போல
என்னை வரவேற்க நீயும் வீட்டை சுத்தம் செய்து வைத்தாயே...
ஆனால் உள்ளத்தின் அழுக்குகளை, அதில் காலம்காலமாய் 
மண்டிக் கிடக்கும் கழிவுகளை இன்னும்
சுத்தம் செய்யவில்லையே..!
என் தெருக்கள் வழியாக
ஷைத்தான் நுழையாது போனாலும், ஏனைய நாட்களில் அவன் புழக்கம் அதிகமிருந்ததால் 
உன் இதய அறைகள் இப்போதும் கறைபடிந்தே கிடக்கிறது...!
கண்ணயமிக்க என் இரவுகளில் நீ
கண்ணீர் சிந்தவில்லை.
தொலைக் காட்சிக்குள்ளேயே இன்னும்
தொலைந்துபோய் கிடக்கிறாய்..!

திக்ரு செய்யவேண்டிய உன் விரல்களோ 
ரிமோர்ட் பட்டன்களைத் தட்டியபடியே உள்ளது.
உன் வீட்டில் ஆளுக்கொரு 
மொபைல் உண்டு, உன் ஆறாம் விரலாக.
ஆனால்...
பாதி அட்டைக் கழன்ற அந்தப் பழையக் குர்ஆன் ஒன்றைத் தவிர, ஆளுக்கொரு குர்ஆன்
உன் வீட்டில் உண்டா..?
ஸஹருக்கு தயிர், இஃப்தாருக்கு பலூடா என வயிற்றுப் பள்ளத்தை நிறைக்க 
பட்டியல் போடும் உனக்கு,
ஆன்மாவின் வெற்றிடம் நிரப்ப, அது படைத்தவனிடம் நெருங்கவென 
அமல்கள் எத்தனைப் 
பட்டியல் போட்டிருக்கிறாய்..?

உன் வாய் இன்னும்
அழுக்காகவே இருக்கிறது..!
பல் இடுக்குகளில் சுத்தம் 
செய்யும்போது இஃப்தாரில் சாப்பிட்ட
சமூசாவின் இறைச்சி வந்ததே,
ஆனால்...
நேற்றிரவு புறம்பேசி நீ சாப்பிட்ட உன் சகோதரனின் இறைச்சி 
அப்படியே இருக்கிறதே..?
"யார் ரமளானை அடைந்தும் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ, அவனுக்குக் கேடு உண்டாகட்டும்"* என்றுக் கருணை நபிகளார் சபித்தார்களே..!
அந்தப் பாவிகளின் கூட்டத்தில் 
நீயுமா சேரப்போகிறாய்..?

ஓ..! 
இதுவெல்லாம் நான் அறியவில்லையே..?
எனக்குப் பெற்றோரும், உற்றாரும் சொல்லித் தரவில்லையே.. 
என்ற உன்
முணுமுணுப்பு கேட்கிறது.
எதையெல்லாமோ google இல் தேடும் 
உனக்கு, என்னைப் பற்றித் தேடமட்டும் நேரமில்லையோ..!
#அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதக் கண்களை, நரகம் ஒருபோதும் #தீண்டுவதில்லை..!
செய்த பாவங்களை நினைத்து..!
என்ன அச்சம் கொள்கிறாயா..? வெட்கப்படுகிறாயா..? 1000 மாதங்களை விட மகத்துவமிக்க இரவான ஒற்றைப்படை இரவுகளில் இபாதத்துக்களை கொண்டு 
தஹஜ்ஜத்தில் தொழுது அல்லாஹுவிடம் மன்றாடி ஸஜ்தாவில் 
ஒரு துளிக் கண்ணீராவது சிந்தவில்லையா??? இன்னும் மூன்று இரவுகள் மீதம் உள்ளது தாமதிக்காமல் பயன்படுத்திக்கொள்
ஒன்றைத் தெரிந்துகொள்.
உன் வாய் முத்திரையிடப் பட்டு, ஏனைய எல்லா உறுப்புக்களும் 
உனக்கெதிராய் சாட்சி சொல்லும் 
அந்நாளில், நானும் என் நண்பன் குர்ஆனும் வருவோம் உனக்கெதிராய் வாதாட..!
நீ பூமியின் அளவு 
பாவம் சுமந்து வந்தாலும், 
அதை மன்னிக்கக் 
காத்து இந்த நோன்பிற்க்கு நானே கூலி தருகிறேன் என்று சொன்ன அந்த ரஹ்மானிடம் 
சரணடைந்து விடுகின்ற அத்துனை வாய்ப்புக்களையும் தவறவிட்டுவிடாதே??

சென்றமுறை நான் வந்தபோது, உன்னோடு இருந்தவர்களில் பலர் 
இப்போது இல்லை.
இதோ இப்போது உன்னை விட்டு சில தினங்களில் பிரிந்து செல்ல இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்,
மீண்டும் வருவேன் வருடம் தோறும் வருவேன்.
ஆனால்..என்னை அடைய நீ உயிரோடு இருப்பாயா..!??? உயிரோடு இருப்பாயா??
இப்படிக்கு உன்னைப் பற்றியக் கவலையோடு
#ரமழான்
😥

0 கருத்துரைகள்:

Post a comment