Header Ads



மஹிந்தவின் கூட்டத்தை ஐ.தே.க. இறுதி நேரத்தில் புறக்கணித்த காரணம் இது தான்

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலால் நாடு நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் தலைமைத்துவத்திற்கு தேசிய ஐக்கியம் தேவைப்படும் இந்த சந்தர்ப்பத்தில் கட்சி அரசியலிலேயே ராஜபக்ச அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, நாளை திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பங்குபற்றாமலிருப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமை நாளைய தினம் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தை உத்தியோகபூர்வமாக கூட்டுவதற்கு பதிலாக மாற்று வழியாக இந்த கூட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு அதிகரித்து வருகின்ற கொவிட் 19 பரவலில் அரசியலைப் புறந்தள்ளி செயற்பட வேண்டும் என்பதும் கட்சியின் ஸ்திரமான நிலைப்பாடாகும்.

மீண்டும் ஒரு முறை இதனைத் தெரியப்படுத்தவே பிரதமரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி கலந்து கொள்வதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த கூட்டத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு கலந்துரையாடல் அர்த்தமுடையதொன்றாக அமையாது என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும்.  இதில் ராஜபக்ச ஆட்சி அவதானம் செலுத்தியுள்ளதென்னவென்றால், தலைமைத்துவத்திற்கு தேசிய ஐக்கியம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் கட்சி அரசியல் செய்வதாகும். இதன் காரணமாக தற்போது ஐக்கிய தேசிய கட்சி இந்த கூட்டத்தில் பங்குபற்றாமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளது.

எனினும் கொவிட் 19 தொற்றினால் எமது நாடு ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ள இந்நிலையில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளது. எனினும் அவற்றை பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைய எடுக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்துகின்றது.

No comments

Powered by Blogger.