Header Ads



இராணுவ தளபதியின், முக்கிய அறிவுரை

(எம்.மனோசித்ரா)

பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு நாளை முதல் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சில வரையறைகளுடன் திறக்கப்படவுள்ளன. இதன் போது பாதுகாப்புத்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினரால் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகள் நிச்சயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரிலிருந்து 282 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று மலேசியாவிலிருந்தும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதே வேளை விசேடமாக நாளை திங்கட்கிழமை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சில வரையறைகளுடன் திறக்கப்படவுள்ளன. தொடர்ந்தும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் மாவட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு முன்னரே ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் திணைக்களங்களை எவ்வாறு நடத்திச் செல்வது என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட்டது. உதாரணமாக மூன்றில் ஒன்று என்ற ரீதியில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டமானால் அங்கு எவ்வாறு நிறுவனங்களை நடத்திச் செல்லல் பற்றியும் கடந்த இரு வாரங்களாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமையவே நிறுவனப் பிரதானிகள் தமது ஊழியர்களை சேவைக்கு அமர்த்துவர் என்று எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி விசேட ஆலோசனை சுற்றறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைப் பேணுவது பற்றியும் போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றியும் திட்டமிட்டு செயற்படுவர் என்றும் எதிர்பார்க்கின்றோம். எம்மால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமையவே இவர்கள் செயற்பட வேண்டும்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சமூக இடைவெளியைப் பேணும் நோக்கில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கமைய அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்ல முடியும். ஏனைய மாவட்டங்களில் வழமை போன்று அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இந்நிலையில் அரச மற்றும் தனியார் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் எம்மால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமையவே குறிப்பிடளவினரை மாத்திரமே உள்ளடக்கி முன்னெடுக்க வேண்டும். தமது தனிப்பட்ட தேவைக்காக யாராலும் போக்குவரத்தினை முன்னெடுக்க முடியாது.

எனவே நடத்து சென்று அருகிலுள்ள கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமின்றி வேறு தேவைகளுக்காக போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டு மக்கள் கடந்த காலங்களில் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனினும் நாளை  முதல் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அது அனைவரதும் கடமையும் பொறுப்புமாகும். அத்தோடு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.