Header Ads



"முஸ்லிம் மக்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது"

நாட்டில் கொரோனா தொற்று ஒருபுறம் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மறுபுறம் வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சுக்களும் தாராளமாக இடம்பெற்று வருகின்றன 

அதுவும் சிறுபான்மை முஸ்லிம்களை சீண்டும் வகையில் இத்தகைய பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் இலங்கையில் பல அதிகாரிகள் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம்களே கொரோனா தொற்று ஏற்படக் காரணம் என்றும், அவர்கள் வேண்டுமென்றே அதனை பரப்பினார்கள் என்ற கருத்துக்களும், முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளை புறக்கணிக்க வேண்டும் என்ற வேண்டுகோள்களும், அதிகம் முன்வைக்கப்படுவது குறித்து தாம் அறிந்து வைத்துள்ளதாக மனித உரிமை காப்பகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி, உயிர் இழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பிலும், முஸ்லிம் மக்கள்  அதிருப்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 சர்வதேச விதிமுறைகளையும் தாண்டி வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதாக முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

 இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலைவெளியிட்டுள்ளதுடன் முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பது இஸ்லாமிய நடைமுறைக்கு மாறானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

 இந்த விடயம் சம்பந்தமாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதுடன் இது குறித்து இலங்கை முஸ்லிம்களுக்கும் அரசுக்கும் இடையில் பேச்சு நடத்தி சுமுகமான தீர்வு ஒன்றை காண வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இலங்கையில் மாத்திரம் அல்லாமல் கொரோனா தாக்கம் உலகையே உலுக்கி வருகிறது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களே காரணம் என்று கூற முயல்வது மிகவும் அபத்தமானதாகும்.

இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்றது.

அனைத்துக்கும் மேலாக முஸ்லிம் மக்கள் புனித நோன்புப்பெருநாளை கொண்டாடத் தயாராகி வருகின்ற இந்நிலையில், அவர்களின் மனதைப் புண்படுத்துவது போன்ற காரியங்கள் தொடர்வது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

1 comment:

  1. தற்கால பத்திரிகைகளின் வரலாற்றில் சமூகநீதியினை நிலைநாட்டுவதற்கு வீரகேசரி போன்ற பத்திரிகைகள் எடுத்துவரும் முயற்சி மிகவும் பாராட்டப்படவேண்டியதாகும். முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை நடுநிலையோடு வெளியிடுவதற்கு பத்திரிகைகள் இல்லையே என்று கவலைப்ப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய இக்கால கட்டத்தில் வீரகேசரிப் பத்திரிகை நாட்டின் உண்மை நடப்புகளை மிகுந்த கவலையுடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது மிகவும் மகிழ்வுக்கும் பாராட்டுக்கும் உரிய விடயமாகும். அதுமாத்திரமன்றி சிறுபான்மை மக்களின் விடிவு சிறுபான்மை மக்கள் ஒன்றுபடுவதிலேயே தங்கியுள்ளது என்ற சித்தாந்தத்தை பொதுபபடையாக தமிழ்ப்பேசும் மக்களிடையே கொண்டு செல்வதிலும் அவரகள் எதிர்காலத்தில் பெரும் பணி ஆற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.