May 12, 2020

எனது தாயின் உடலை தகனம் செய்தனர், என தெரிந்ததும் தந்தை கதறினார்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் துயரத்தில் சிக்குண்டுள்ள, சுபைர் பாத்திமா ரினோசாவின் குடும்பத்தினர் நீதியையும் விளக்கத்தையும் கோருகின்றனர். 44 வயது முஸ்லீம் பெண்மணியான அவர் கொரோனா வைரசினாலேயே உயிரிழந்தார் என தெரிவித்து அதிகாரிகள் அவரது உடலை தகனம் செய்தனர். அதற்கு இரண்டு நாட்களிற்கு பின்னர் அவர் கொரோனா வைரசினால் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகியது.

பாரம்பரிய இஸ்லாமிய இறுதிசடங்கு நடைமுறைகளிற்கு மாறானதாக காணப்படும்,கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் அனைவரையும் தகனம் செய்யவேணடும் என்ற அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய கட்டாய கொள்கையின் அடிப்படையில், மே ஐந்தாம் திகதி தனது தாயின் உடல் தகனம் செய்யப்பட்டது என ரினோசாவின் நான்கு மகன்களில் ஒருவரான முகமட் சாஜிட் தெரிவித்தார்.

அதிகாரிகளின் அழுத்தங்கள் காரணமாகவே தனது சகோதரர் அனுமதி ஆவணத்தில் கையெழுத்திட்டார் என அவர் தெரிவித்தார்.

எனினும் இரண்டு நாட்களின் பின்னர் ரினோசாவின் சோதனை முடிவுகள் அவர் கொரோனாவைரசினால் உயிரிழக்கவில்லை என்பதை வெளிப்படுத்தின.

மே 7ம் திகதி நாங்கள் ஊடகங்கள் மூலம் ,எங்கள் தாயின் மீது இடம்பெற்ற சோதனை முடிவுகள் பிழையானவை என்பதை அறிந்தோம், அவர் கொரோனா வைரசினால் உயிரிழக்கவில்லை என சாஜித் தெரிவித்தார்.

எனது தாயின் உடலை தவறுதலாக தகனம் செய்தனர் என தெரியவந்ததும் எனது தந்தை துயரத்தில் கதறினார் என சாஜித் தெரிவித்தார்.

எனது தந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தார்,அவர் இறந்துவிட்டார் என்பதை ஏதோ ஒரு நாளில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும் ஆனால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என தந்தை தெரிவித்தார் என சாஜித் தெரிவித்தார்.

அடிப்படை மத உரிமைகளிற்கு எதிரானது

கொரோனா வைரசினால் உயிரிழந்த ஒன்பது பேரில் 4  முஸ்லீம்கள்.அவர்கள் மூவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டன,இது உடல்களை புதைக்கும் இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு முரணானது.

பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னாசிய நாடு முதலில் உடல்களை புதைப்பதற்கு இணங்கியது.எனினும் ஏப்பிரல் 11 ம் திகதி அறிவுறுத்தல்களில் மாற்றங்களை மேற்கொண்டது, வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கியது. முஸ்லீம்கள் இந்த நடவடிக்கையை தங்களின் அடிப்படை மத உரிமைகளை பறிக்கும் செயல் என தெரிவிக்கின்றனர்.

அந்த குடும்பம் துயரத்தில் சிக்குண்டுள்ளது,அவர்கள் அவரை இழந்துள்ளதுடன் மாத்திரமல்லாமல்,அவரின் உடலை புதைப்பதற்கான அடிப்படை உரிமையையும் பறிகொடுத்துள்ளனர் என தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா.

மனிதர்களை இழிவுபடுத்தாத விதத்தில் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

நாட்டின் முக்கியமான உலமா அமைப்பு உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களிற்கு ,180 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், உடல்களை புதைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்பதே இந்த விடயத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடாக காணப்படுகின்றது என அகில இலங்கை ஜமயத்துல் உலமா அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அது இறந்தவர்கள் தொடர்பில் எங்கள் சமூகத்திற்கு உள்ள நம்பிக்கை மற்றும் மதரீதியான கடப்பாடு என அந்த அறிக்கையில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உடல்களை புதைப்பதற்கான தடையை, கொரோனா வைரசிற்கு மத்தியில் முஸ்லீம்களிற்கு எதிராக அதிகரித்து கருத்தாடல்களின் ஒரு பகுதியாக கருதும் நன்கறியப்பட்ட முஸ்லீம் செயற்பாட்டாளர்களும், பிரமுகர்களும் இது குறித்த தங்கள் கரிசனையை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரசினை தகனம் செய்வதற்கான அரசாங்கத்தின் உத்தரவு உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களிற்கு எதிரானது என எமக்கு தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி.

தீர்மானங்களை எடுப்பவர்கள் அனைத்து விடயங்களையும் கருத்திலெடுத்து,விஞ்ஞான,தர்க்கரீதியான, மருத்துவ ,அடிப்படையில் முடிவொன்றை எடுத்திருப்பார்கள் என்றால் எனக்கு எந்தபிரச்சினையும் இல்லை என தெரிவித்த அவர் மக்கள் அதற்கு உடன்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இன மற்றும் மத பக்கசார்புகள்

இலங்கையின் சனத்தொகையில் பத்து வீதமானவர்களாக காணப்படும் முஸ்லீம்களை கொரோனா வைரசிற்கு காரணமானவர்கள் என ஊடகங்களின் ஒரு பகுதியினரும் பௌத்த தேசிய வாதிகளும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தருணமும் இனவாதம் தலைதூக்குவது துரதிஸ்டவசமானது என தெரிவிக்கின்றார் சப்ரி .துரதிஸ்டவசமாக கடந்த சில வாரங்களாக முஸ்லீம்களிற்கு எதிரான பல பேச்சுக்களை காணமுடிகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

தீவிரவாத பௌத்த சக்திகள் அரசாங்கத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கினை பயன்படுத்தி முஸ்லீம் சமூகத்தினை தண்டிக்கின்றன என தெரிவித்தார் இலங்கை முஸ்லீம் கவுன்சிலின் துணை தலைவர் ஹில்மி முகமட். 

இது இனவெறி நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என குறிப்பிட்ட அவர் நாங்கள் முஸ்லீம்களிற்கு பாடம் புகட்டுவோம் என அவர்கள் நாட்டின் ஏனைய பகுதியினரிற்கு தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்திற்கு முஸ்லீம்கள் வாக்களிக்கவில்லை என்ற பரந்துபட்ட நம்பிக்கை காணப்படுகின்றது ஆகவே தற்போது நடப்பது பழிவாங்கலே என அவர் குறிப்பிட்டார்.

Rajeevan Arasaratnam
அல்ஜசீரா


1 கருத்துரைகள்:

It is a very sad situation for the affected family.If this happens in UK, the government apologise and pay compensation for the victims. But in Sri Lanka hidden hand behind this and using their power against wishes of the Muslims and WHO guidelines.We have to ask dua from Allaah in every Thajjath prayer and before Ifthar to punish these culprits.

Post a comment