Header Ads



தேர்தல் ஆணையாளர் பக்கச்சார்பாக செயற்படுகிறார், முடியாவிட்டால் பதவி துறக்கவேண்டும் - அசாத் சாலி

(நா.தனுஜா)

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  அரசாங்கத்திற்குப் பக்கச்சார்பாக செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் அஸாத் சாலி, தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதுமுடியாவிட்டால் பதவி துறக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அஸாத் சாலி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பாரியதொரு தேர்தல் சட்டமீறலை உங்களது கவனத்திற்குக் கொண்டுவரும் விதமாகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

எனது இம்முறைப்பாடு அரச வாகனத்தைப் பயன்படுத்துதல் மற்றும் அதற்கான எரிபொருள் கொடுப்பனவு குறித்த அமைச்சரவைத் தீர்மானமொன்று குறித்து சிங்களத் தொலைக்காட்சி மற்றும் ஆங்கிலப் பத்திரிகை ஆகியவற்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அமைச்சர்களுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர்களும் தேர்தல் காலத்தில் அரச வாகனத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான அச்செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது அமைச்சரவை அமைச்சர்களே உரிய தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதற்கு அனுமதியளிப்பதாகும். இவ்வாறு அமைச்சர்கள் அரசாங்க உடைமைகளைப் பயன்படுத்துவதற்குத் தேர்தல்ச்சட்டம் ஒருபோதும் அனுமதியளிக்கவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டங்களுக்கு விலக்காக செயற்பட அனுமதியளிப்பதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த மார்ச் 18 ஆம் திகதியிலிருந்து இவ்வளவு நாட்களும், அதாவது சுமார் இரண்டுமாத காலமாக நீங்கள் அரசாங்கத்திற்குப் பக்கச்சார்பாக செயற்பட்டிருக்கிறீர்கள்.

நீங்கள் ஏன் மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை? தற்போது இந்த அமைச்சரவை விவகாரம் குறித்து உங்களுக்குத் தெரியாது என்று உறுதியாகக் கூறமுடியுமா?

தேர்தல்களின் போது செலவிடுதற்கு அமைச்சர்களுக்கு மேலதிக அரசநிதி வழங்கப்பட முடியாது. பாராளுமன்றத்தைக் கலைக்க முன்னரை விடவும் கலைத்த பின்னர் அவர்களுக்கு அதிகளவான கடமைகளும், போக்குவரத்துக்கான தேவையும் இருக்கிறது என்பதை நம்புவது கடினமாக உள்ளது.

எனவே தயவுசெய்து பக்கச்சார்பின்றி செயற்படுமாறு மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். வெளிப்படையாக தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உண்மையில் தேர்தல்ச்சட்டங்களை அமுல்படுத்துவோராக இருங்கள், அல்லது பதவி பதவி விலகுங்கள்.

No comments

Powered by Blogger.