Header Ads



"மரத்திலிருந்து விழுந்தவனை, மாடு முட்டியதைப் போன்று"

(செ.தேன்மொழி)

நீர் மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்புள்ளது. கொரோனா தொற்றினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மரத்திலிருந்து விழுந்த மனிதனுக்கு மாடு முட்டியது போன்று செயற்படாமல், அவர்களுக்கு சலுகைளைப் பெற்றுக் கொடுப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

வைரஸ் பரவலின் காரணமாக உற்பத்தி நடவடிக்கைகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொவிட் - 19 வைரஸ் பரவலின் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் அரசாங்கம் அரச ஊழியர்களின் ஒரு மாத ஊதியத்தை அறவிடுவதன் ஊடாக 100 பில்லியன் நிதியை சேமித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களின் ஊதியத்தையும் அறவிட்டாலும் 50 பில்லியன் ரூபாய் மாத்திரமே அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறும்.

அரசாங்கத்திற்கு மாற்று வழிகளை பின்பற்றி தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்துக் கொள்வதற்கான வழிகள் இருக்கின்றன.  தற்போது மேலதிக கொடுப்பனவு, விசேட கொடுப்பனவு என எதுவும் அரசாங்கத்தினால் வழங்கப்படாத நிலையில் அரச ஊழியர்களுக்கான மாத சம்பளம் மாத்திரமே அரசாங்கத்தினால் ஒதுக்கப்படவேண்டியுள்ளது. இதனையும் அரசாங்கம் அறவிட முற்படுவது நியாயமற்ற செயலாகும்.

மாத மொன்றிற்கு தனிமனிதர் ஒருவருக்கு மாத்திரம் 5200 ரூபாய் செலவாகும் என்று குடிசனத்தொகை மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்நிலையில் ஒரு குடும்பத்திற்கே 5000 ரூபாவை வழங்குவதால் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. 75 இலட்ச குடும்பங்கள் இருக்கின்றன. அதில் 50 சதவீதமான குடும்பங்களில் துணைக்குடும்பங்கள் இருக்கின்றன. இவ்வாறான அனைத்து குடும்பங்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட்டதா? கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் தலைவர் பரிசில் ராஜபக்ஷ 78 இலட்ச குடும்பங்களுக்கு இவ்வாறு நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

75 இலட்ச குடும்பங்களில், அரச தொழிலில் ஈடுப்படுவர்களை கொண்ட 13 இலட்ச குடும்பங்கள் காணப்படுகின்றன. இதேவேளை ஸ்தீர தொழிலில் இருப்பவர்கள் என பல குடும்பங்கள் இருக்கின்றன. குறைந்த வருமானமுடையவர்களுக்கு மாத்திரமே இந்த நிவாரணம் வழங்கப்பட்டது என்றால், எவ்வாறு 78 இலட்ச குடும்பங்களுக்கு இது வழங்கப்பட்டிருக்கும். இது தொடர்பான உண்மை தரவுகளை அவர் தெரியப்படுத்த வேண்டும்.

வங்கி கடன் தொடர்பில் முறையான செயற்பாடு வேண்டும். வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தை கொண்டு வங்கிக் கடன்களை பெற்றுக் கொடுக்க முடியாது, நாட்டில் 20 வங்கிகள் இருக்கின்ற நிலையில், 50 பில்லியன் ரூபாவே அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைக்கொண்டு வங்கிக்கடனை  முழுமையாக வழங்க முடியாது.இதேவேளை மின்சாரக்கட்டணம் தொடர்பில் தற்போதுள்ள செயற்பாடுகளை விட நீர் மின் உற்பத்தியினூடாக மின்சாரத்தை விநியோகித்தால் மின் கண்டனங்களை குறைப்பதற்கான வாய்ப்புள்ளது.

வரட்சியான காலங்களை விடுத்து மழைவீழ்ச்சி அதிகமான காலப்பகுதிகளில், தற்போதும் கூட மழைவீழ்ச்சி அதிகமாகவே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நீர் மின் உற்பத்தியை முறையாக செயற்படுத்தினால் மின் கட்டணம் தொடர்பில் சலுகை பெற்றுக் கொடுக்க முடியும்.

வைரஸ் பரவலினால் வீட்டிலிருந்து தொழிலில் ஈடுப்படுமாறும், இணையத்தினூடாக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், வீட்டிலிருந்தே சுயதொழில்கள் செய்யுமாறும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக வழமைக்கு மாறாக அனைவரது மின் கட்டணங்களும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். இவ்வாறான நிலையில் இந்த மின் கட்டணத்தால் பாதிக்கப்பட்டுவரும் மத்தியத்தர வர்க்கத்தினர்.

இதாவது 720 ,1667,2852 ரூபாய்குள் மின்கட்டணம் செலுத்திவருபவர்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கவேண்டும். இவ்வாறான நிலையில் , எண்ணெய் விலை உலகச் சந்தையில் குறைந்துள்ள போதிலும் அதற்கான சலுகை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வில்லை.

இதனுடாக 200 பில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது. வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சலுகைகளை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. இந்த நிதியை எடுத்து அரசாங்கம் செலவிடலாமே.

இவ்வாறான முறையான திட்டங்கள் இருந்தும் மின்சார கூட்டுத்தாபனமோ, அரசாங்கமோ செயற்படாமல் இருந்தால் எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை.

ஒழுங்கான முகாமைத்துவம் தேவை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இவ்வாறு செய்ய முடியாவிட்டால். அந்த துறைச்சார்ந்தவர்கள் அதனை விட்டு விலக வேண்டும். இதுவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் தெரிவித்திருந்தார்.

எதிர்தரப்பினர் ஏதும் கருத்து தெரிவித்தால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுபவர்கள், ஜனாதிபதியே தற்போது இவ்வாறு கூறியுள்ளார். அதனால் முறையான முகாமைத்துவத்துடன் செயற்படுங்கள். வைரஸ் பரவலினால் அரசாங்கம் பாதிக்கப்பட்டுள்ளதை போன்றே மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்து பணத்தை அறவிடுவதைவிட அவர்களுக்கு சலுகையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.