Header Ads



எந்தவித அடையாளமும் காட்டாது தமது உடலில் வைரஸை காவிக்கொண்டு திரியும் மக்கள் நாட்டில் உள்ளனர்.

கொவிட் -19 வைரஸ் தொற்றுப்பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் கூட எந்தவித அடையாளமும் காட்டாது தமது உடலில் வைரஸை காவிக்கொண்டு திரியும் மக்கள் நாட்டில் உள்ளனர் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர கூறினார்.

நாட்டில் ஏதோ ஒரு மூலையில் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்படுவார் என்ற சூழலே நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் குறித்த வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

உலகில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் முதற்கொண்டு இந்த காரணிகளை கூறி வருகின்றனர்.

நாட்டில் வைரஸ் தொற்றாளர்களை தடுப்பதில் பாதிக்கப்பட்ட நபர்களை தேடிப்போய் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் சமூக பரவலாக இது மாற்றமடைவது தடுக்கப்பட்டது.

ஆகவே சமூகத்தில் பரவலாக நோயாளர்களை கண்டறிய முடியாது. ஆனால் சமூக பரவல் இல்லை என்ற காரணத்தினால் மக்கள் சகஜமாக நடமாட முடியாது.

மக்களின் உடலில் இன்னமும் கொரோனா வைரஸ் காவப்பட்டுக்கொண்டே உள்ளது. எந்தவித அடையாளமும் காட்டாது தமது உடலில் வைரஸை காவிக்கொண்டு திரியும் மக்கள் நாட்டில் உள்ளனர்.

அவ்வாறான நிலையில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் செயற்பாடுகளில் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். மக்களிடம் இன்னமும் வைரஸ் உள்ளது என்பதை மனதில் வைத்துகொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து செயற்பட வேண்டும்.

கொழுப்பு கம்பஹா மாவட்டங்கள் தவிருந்து ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் ஊரடங்கு தளர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு கம்பஹா மாவட்டங்கள் இன்னமும் வைரஸ் தொற்றுப்பரவல் குறித்த அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.

இந்த மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கூட மக்களின் அன்றாட செயற்பாடுகள் அனைத்தையும் முன்னெடுக்க தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலக வேலைகள் என அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட எப்போதாவது, எங்கோ ஒரு பகுதியில் கொவிட் -19 தொற்றுநோயாளர் கண்டுபிடிக்கப்படுவார். அவ்வாறு அடையாளம் காணக்கூடிய அறிகுறிகள் தென்பட்டுக்கொண்டே உள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.