Header Ads



ஹராமான எந்த தொடர்புகளிலும் நான் சம்மந்தப்படவில்லை, அதனாலே தொழிலில் பரக்கத்தை அனுபவிக்கிறேன்


தேவையுடைய மக்களது வீடுகளுக்குச் சென்று உதவிகளை செய்துவரும் சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸின் முகாமைத்துவ பணிப்பாளரும்  சமூக சிந்தனையாளருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் அவர்கள், கொவிட்19 கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வருமானம் எதுவுமின்றி நிர்க்கதியாகியுள்ள சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிவாசல்களில் கடமையாற்றும் சுமார் 65 முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு அவர்கள் எதிர்பாராத அளவுக்கு அன்பளிப்புக்களை 2020.05.22 ஆம் திகதியன்று வழங்கிவைத்தார்.

சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைய சமூக இடைவெளியை பின்பற்றி மிக குறுகிய நேர இடைவெளியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் அவர்களுடன் அவரது புதல்வர்களும் அன்பளிப்புக்களைப் பெற்ற  முஅத்தின் மற்றும் இமாம்களும் கலந்து கொண்டனர்.

நாட்டில் கொவிட்19 கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கிய காலம் தொட்டு தேவையுடைய அநேகரின் வீடுகளுக்குச் சென்று பல்வேறு உதவிகளை செய்துகொண்டிருந்த வேளையில் அவரது மட்டக்களப்பில் உள்ள வர்த்தக நிலையம் தீப்பிடித்திருந்த நிலையிலும் இழப்புகளைக் கண்டு துவண்டு போகாமல் மக்களது தேவைகளை நிறைவேற்ற தன்னை அர்ப்பணித்திருந்தார்.

தேவையுடையோரும் எதிர்வரும் பெருநாளில் புத்தாடைகளுடன் தங்களது வீடுகளில் பெருநாளைக் கழிக்கவேண்டும் என்பதற்காக அநேகருக்கு புத்தாடைகளை வழங்கிக்கொண்டிருந்த அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் அவர்கள் தான் வசிக்கும் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு புத்தாடைகளுடன் கூடிய அன்பளிப்புக்களை வழங்கி வைத்தது மிகவும் மெச்சக்கூடிய ஒரு விடயமாகும்.

இங்கு உரையாற்றிய அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக், தான் இந்த அளவுக்கு முன்னேற்றமடைய வல்ல அல்லாஹ்வின் அருளும் தனது தந்தையாரின் வழிகாட்டுதலுமே பிரதான காரணம் என்றும் மிகக்கடினமாக உழைத்தே இவ்வாறானதொரு நிலைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். வட்டி போன்ற ஹராமான எவ்வித தொடர்புகளிலும் தான் சம்மந்தப்படவில்லை என்றும் அதன்காரணமாகவே தொழிலில் பரக்கத்தை அனுபவிப்பதாகவும் தெரிவித்தார்.

தனது தந்தையின் வழியில் தன்னால் முடிந்த தானதர்மங்களில் தான் ஈடுபடுவதாகவும் இதைவிட அதிகமான தானதர்மங்களில் தனது பிள்ளைகளும் ஈடுபடுட வேண்டும் என்பதே எனது அவா என்றும் தனது புதல்வர்களை அழைத்து, தான் தனது தந்தையின் வழியில் செய்வதைவிட அதிகமான தர்மங்களை நீங்களும் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நிகழ்வின் இறுதியில் துஆ பிராத்தனைகளும் இடம்பெற்றன.

அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் அவர்களது இவ்வாறான தர்ம காரியங்களுக்கு வல்ல இறைவன் உதவ பிராத்திக்கும் அதேவேளை ஏனைய பிரதேசத்திலிருக்கும் தனவந்தர்களும் அவர்கள் சார்ந்த பிரதேசங்களில் வருமானங்கள் இன்றி நிர்க்கதியாகியுள்ள முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன்-


1 comment:

  1. இப்படியான செய்திகளை வெளியிடாதிருப்பது மிகவும் நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

    ReplyDelete

Powered by Blogger.