Header Ads



கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் படையினரை, ஈடுபடுத்தாமல் இருந்திருந்தால் நிலைமை மிக மோசமாகியிருக்கும்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்தாமல் இருந்திருந்தால் நிலைமை மிக மோசமாகியிருக்குமென கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய செயற்பாட்டு செயலணியின் உறுப்பினரும், ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான அட்மிரல் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட செயலணிகளை அமைத்து வைரஸ் ஒழிப்பு, நிவாரண செயற்பாடுகள்,வறுமை ஒழிப்பு,பொருளாதார முன்னேற்றம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருந்திருந்தால் மிக மோசமான நிலையை நாடு எதிர்நோக்கி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சார்க் நாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதனையடுத்து ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள மாணவர்களையும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் இந்த காலகட்டங்களில் எமது வெளிநாட்டு தூதரகங்கள் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றன.

தூதரக அதிகாரிகள் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களின் தகவல்களைப் பெற்று வழங்குவதுடன் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் மாணவர்களிடம் விமான பயணக் கட்டணமாக அதிகளவு பணம் அறவிடப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய அவர், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எமக்குத் தேசிய விமான சேவை இல்லாதிருந்தால் எந்தளவு நிலைமை மோசமாகி இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தேசிய விமான சேவை இல்லாதிருந்தால் முதற்கட்டமாக சீனாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வூஹான் பிரதேசத்திலிருந்து மாணவர்களை அழைத்து வந்திருக்க முடியாது போயிருக்கும். அதனைத்தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள மாணவர்களை அழைத்து வர முடியாத நிலையே ஏற்பட்டிருக்கும்.

தற்போது சாதாரண கட்டணத்துக்கு மேலதிகமாக பணம் அறவிடப் படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் குற்றம் சாட்டுபவர்கள் சாதாரண கட்டணம் என கூறுவது கொரோனா வைரஸிற்கு முற்பட்ட காலத்தில் உள்ள கட்டணத்தையே.

அதற்கிணங்க மேற்படி அச்சுறுத்தலை யடுத்து விமான சேவைகள் வெகுவாக குறைவடைந்தன. இதனால் வைரஸ் அச்சுறுத்தலுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த கட்டணத்தை தற்போது ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

உதாரணமாக நேபாளத்திற்கு மாணவர்களை அழைத்து வர சென்றபோது நேரடியாக அங்கிருந்து அழைத்து வருவதில்லை. இங்கிருந்து விமானம் சென்று மீண்டும் அங்கிருந்து திரும்ப வேண்டும் அப்போது இரண்டு விமான பயணங்கள் நடைபெறுகின்றன. அதற்கான எரிபொருள் உள்ளிட்ட இதர செலவுகள் உள்ளன.

எமது மாணவர்கள் காத்மண்டுவிலிருந்து ஒரு தடவை இலங்கைக்கு வருகின்றனர் எனினும் அதற்காக இரண்டு விமானப் பயணங்கள் இடம்பெறுகின்றன. இதனால்தான் விமான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக ஒரு விமானத்தில் 290 பேர் பயணிக்க முடியுமென்றால் எமது மாணவர்கள் 73 பேரையே இவ் விமானம் சுமந்து வருகிறது. இதனால் அந்த 73 பேரிடமிருந்து பகிரப்பட்டு இக் கட்டணம் பெறப்படுகிறது.

இது தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் வந்தன குறிப்பாக பஞ்சாப் மாநிலத்திலிருந்து எமது மாணவர்கள் வரும்போது இந்த நிலைமை காணப்பட்டது.

எனினும் மேற்படி மாணவர்கள் ஆரம்பத்தில் நாம் இலங்கை அரசாங்கத்துக்கு எந்த சுமையையும் வழங்க மாட்டோம் எமக்கான கட்டணத்தை நாம் செலுத்துவோம் என்று கூறினார்கள் அதன் பின்னரே அவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இத்தருணத்தில் இலங்கை விமான சேவை இல்லாதிருந்தால் எம்மால் இந்த செயற்பாட்டை இந்தளவு இலகுவாக மேற்கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை.

அதேபோன்று இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக அவுஸ்திரேலியாவில் மருத்துவ பயிற்சிக்காக சென்றவர்களும் அவர்களது குடும்பங்களும் உள்ளனர்.

இலங்கை விமானங்கள் 3 விரைவில் ஏற்றுமதி பொருட்களுடன் லண்டனுக்குச் செல்ல உள்ளன. அதே போன்று அவுஸ்திரேலியாவுக்கும் செல்ல உள்ளன.

இதனை வாய்ப்பாகக் கொண்டு லண்டனிலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எம்மவர்கள் பல நாடுகளிலும் உள்ளதால் ஒரே தடவையில் அவர்களை அழைத்துவர முடியாது. அதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.