Header Ads



மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சைக்கு வந்த, முகத்துவார பெண் கொரோனாவால் மரணம் -- முழுமையான செய்தி

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவின்  மெத்சந்த செவன தொடர் மாடி குடியிருப்பைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க  தெரிவித்தார்.

நேற்று இரவு , முகத்துவாரம் -  மெத்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 5 பிள்ளைகளின் தாயொருவர், மூச்சுத் திணறல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கு அவருக்கு பி.சி.ஆர். எனும் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, அவருக்கு கொரோனா இருப்பது  நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்போதும் குறித்த பெண்ணின் நிலை தீவிரமாக இருந்துள்ள நிலையில், உடனடியாகவே தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இன்று காலை குறித்த பெண் சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்ததாக அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் ஒருவர் கூறினார்.

இந் நிலையில் குறித்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று இரவு,  முல்லேரியா - கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றதுடன், இதன்போது பிரேதம் தகனம் செய்யப்பட்டது.

இந் நிலையில், இன்று உடனடியாக செயற்பட்ட சுகாதாரத் துறையினரும் பாதுகாப்புப் பிரிவினரும், முகத்துவாரம்  மெத்சந்த செவன தொடர் குடியிருப்பின் 13 ஆவது மாடியில்  வசித்த, இறந்த பெண்ணின் கணவர், 5 பிள்ளைககளிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைவிட, குறித்த பெண்ணின் மிக கிட்டிய தொடர்பாளர் வட்டத்தில் இருந்த , அந்த தொடர்மாடிக்கு அருகில் உள்ள ரந்தித உயன எனும் தொடர்மாடியில்  ஒரு வீட்டில் வசித்த மேலும் 9 பேரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக  கொழும்பு மாநகர சபையின் சுகாதார  வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி கூறினார்.

No comments

Powered by Blogger.