Header Ads



‘நீங்கள்தான் இதற்கு தகுதியானவர்கள்’ - அத்தியாவசிய பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்திய கனடா பிரதமர்

கொரோனா நேரத்தில் மக்களுக்காக இரவு பகலாக உழைத்த அத்தியாவசிய ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கனட பிரதமர்.

உலகை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இந்த கொடூரமான கொரோனா, நமது வாழ்வில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிடாதவர்கள் தற்போது வீட்டிலேயே உள்ளனர். ஆன்லைன் மீட்டிங், ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ஃபிரம் ஹோம், உணவுப்பொருள்களின் தேவை, அதிகரித்த மனிதநேயம் என பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதேபோல், இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் போன்ற பலரின் தன்னலமற்ற பணிகள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்தியா உள்பட பல நாடுகளில் சில சிறப்புச் செயல்களைச் செய்தன. இந்நிலையில் அத்தியாவசிய பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை உயர்த்தி அறிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

கனட அரசு அந்நாட்டில் உள்ள மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டுவந்துள்ளது. 3 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தில் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியம் மாதத்துக்கு 1,800 டாலர் இருக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1,35,000 ரூபாய். இந்த திட்டம் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் ட்ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“நீங்கள் உங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல உதவியுள்ளீர்கள். இந்த வேலைக்கு நீங்கள் குறைந்தபட்ச ஊதியத்தையே பெறுகிறீர்கள் எனவே நீங்கள்தான் சம்பள உயர்வு தகுதியானவர்கள். இந்த தொற்று நோய்களின் மூலம் நாம் காணும் ஒரு விஷயம் என்னவென்றால், நமது சமூகத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் பிற வழிகளில் பாதிக்கப்படக்கூடியவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் நம் சமூகத்தின் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமானவர்கள்” என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவின் அத்தியாவசிய பணியாளர்கள் சங்கத்தில் சுமார் 60,000 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் பிரதமரின் இந்த அறிவிப்பை வெகுவாக வரவேற்றுள்ளனர். மேலும் இது வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் செயல் வடிவிலும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிப் பேசியுள்ள கனடா அத்தியாவசிய பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷர்லீன் ஸ்டீவர்ட், “முன்னணியில் நின்று வேலை செய்யும் அத்தியாவசிய பணியாளர்கள் அனைவரும் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வேலை செய்யும் அனைத்து துறைகளிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நேரத்தில் பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இது வெறும் வார்த்தையாக மட்டும் இருக்காமல் பணியாளர்கள் தங்கள் பாக்கெட்டில் பணத்தைப் பார்க்கும் நிலை வரவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

4 comments:

  1. நீங்கள்தான் மக்களின் சரியான தலைவர் மக்களின் நலன் கருதி செயல்படும் உன்னதமான தலைவர்

    ReplyDelete
  2. நீங்கள்தான் மக்களின் சரியான தலைவர் மக்களின் நலன் கருதி செயல்படும் உன்னதமான தலைவர்

    ReplyDelete
  3. எங்கள் நாட்டிலும் நேர் எதிரான தலைவர்கள் நிறையவே உள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.