Header Ads



நான் ஓர் இலங்கையன், இஸ்லாத்திற்காக ஒன்றிணைய யார் தயார்..?

- கலாநிதி SMM. மஸாஹிர் -

இலங்கை ஒரு சிறிய அழகான நாடு. இன்று உலகத்தையே நாம் ஒரு கிராமமாகக் கருதுகின்றோம். எனவே, எமது நாட்டை ஒரு கிராமமாகப் பார்ப்பதில் தவறேதுமில்லை. 

பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற நான்கு இனத்தவர்கள், தமது சமயங்களைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றோம். மிக அண்மைக்காலம் வரையிலும் தத்தமது பெருநாள்களையும் பண்டிகைகளையும் எவ்வித இடையூறுகளும் இன்றி கொண்டாடக் கூடிய சூழல் எமக்குக் காணப்பட்டது. 

சென்ற வருடம் (2019) ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஈஸ்டர் பண்டிகையே ஒரு பேரிடியாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வந்த பௌத்தர்களின் வெசாக் பண்டிகை முற்றாக சோபையிழந்திருந்தது.

இவ்வருடம் (2020) கோவிட் 19 பரவக் கூடும் என்ற அச்சத்தினாலும் ஊரடங்குச் சட்ட அமுலினாலும் எமது சகோதர இனங்களான பௌத்த, இந்து சகோதரர்களுக்கு தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை தமது வீடுகளுக்குள் இருந்து கொண்டு, எந்த ஆரவாரமுமின்றி கொண்டாட வேண்டி ஏற்பட்டது. முழு வருடத்திலும் சம்பாதிப்பவற்றை இத்தினங்களில் செலவழித்து விடுவார்கள் என்று கூறுமளவுக்கு இருக்கும் அவர்களது செலவினங்கள் இம்முறை மிக எளிமையானதாக அமைந்திருந்ததோடு தத்தமது இல்லங்களுக்குள்ளேயே சடங்கு, சம்பிரதாயங்களோடு முடிவுற்றது. புத்தாடைகள் இல்லை. பதிய தளபாடங்கள் இல்லை. புதிய சமையல் உபகரணங்கள் இல்லை. வீடுகளுக்கு வர்ணம் தீட்டப்படவில்லை. விளையாட்டுப் போட்டிகள், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. வழமைக்கு மாறாக மொத்தமாக சோபையிழந்த ஒரு புத்தாண்டாகவே அது அமைந்திருந்தது. 

அதனைத்தொடர்ந்து வந்த ஈஸ்டர் பண்டிகையும் சென்ற வருட சோகத்தைச் சுமந்து கொண்டு, கொரோனா பரவலின் பயத்தாலும் ஊரடங்காலும் வீடுகளுக்குள் முடங்கிப் போனது. ஆலயங்களில் நடைபெற வேண்டிய ஆராதனைகள் தொலைத்தொடர்பு சாதனங்களினூடாக வீடுகளுக்குள் நிறைவேற்றப்பட்டன. 

மே மாதம் 7,8 ஆம் திகதிகளில் கொண்டாடப்படவிருந்த வெசாக் கொண்டாட்டங்களும் இம்முறை களைகட்டவில்லை. நகரங்களிலும் கிராமப் புறங்களிலும் அலங்கார வெளிச்சக் கூடுகளால் விமரிசையாகக் கொண்டாடப்படும் இத்திருவிழாவும் வீடுகளுக்குள் அடங்கிப் போனது.

இன்னும் சில தினங்களில் எமது ஈதுல் பித்ர் என்ற நோன்புப் பெருநாள் வர இருக்கின்றது. எமது அடுத்த இன சகோதரர்கள் தமது பண்டிகைகளைக் கோலாகலமான முறையில் கொண்டாடுவதற்குத் தடையாக இருந்த அதே காரணங்கள் இன்றும் இருக்கின்றன. சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கையும் அபாய அறிவிப்பும் அப்படியே இருக்கின்றன. 

இந்நிலையில் எமது பெருநாள் இம்முறை எப்படி அமைவது சிறந்தது?

கோவிட் 19 பரவுகையின் சாத்தியமும் அபாயமும் ஒரு புறமிருக்க, எம்மோடு ஒரே நாட்டில் வாழ்கின்ற எமது சகோதர இனத்தவர்கள் அனைவரும்  தங்களது கொண்டாட்டங்களை முற்றாக கைவிட்டு, மிக எளிமையான முறையில் வீடுகளுக்குள் கொண்டாடியிருக்கும் போது எந்த மனநிலையோடு இப்பெருநாளை நாம் கோலாகலமாக கொண்டாட முடியும்? 

பிறர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாம் இன்புறுவது தர்மமாகுமா? 

நாடும் நாட்டு மக்களும் அச்சத்தாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் பாதிப்புற்றிருக்கும் இவ்வேளையில் பெருநாள் கொண்டாட்டம் உசிதமானதா? 

பெருநாள் தொழுகையோடு, இருப்பதில் சிறந்த ஆடை அணிந்து, எளிமையான உணவோடு இப்பெருநாளைக் கொண்டாடினால் என்ன?

இஸ்லாம் இயல்பிலேயே எளிமையான மார்க்கம்.  அந்த எளிமையை பிற சமூகங்களுக்கு எத்தி வைக்கின்ற ஒரு பொன்னான சந்தர்ப்பம் இது. இதனை எல்லோரும் ஒருமுகப்பட்டு, கச்சிதமாகப் பயன்படுத்தினால் இந்த நாட்டு மக்களுக்கு ஓர் உன்னதமான செய்தியைச் சொன்னதாக மாறும். அச்செய்தி:

*“இஸ்லாம் ஓர் உயர்ந்த மார்க்கம். அது மனிதாபிமானம் கொண்டது. பிற சமயத்தவர்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியது. அது நாட்டு நலனில் அக்கறை கொண்டது. அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் இப்போது அதனை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.”*

இஸ்லாத்திற்காக ஒன்றிணைய யார் தயார்?


5 comments:

  1. இதுநாள் வரை எம்மில் பெரும்பான்மை
    யானோரது பெருநாள் கொண்டாட்டங்கள்
    "பிறருக்காக" அதாவது பிறர் நம்மை
    வியக்கவேண்டும் எண்ற அடிப்படையிலே
    கொண்டாடினோம்.
    இனியாவது "அல்லாஹ்வுக்காக"
    கொண்டாடுவோம்

    ReplyDelete
  2. நற்செய்தி. பெருநாள் தொழுகையும் வீட்டில் தான் என்பது தோன்றாய் எழுவாய் போலும்.

    ReplyDelete
  3. Good thought. But we should spread this message to every Muslim

    ReplyDelete

Powered by Blogger.