Header Ads



வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் - ஜனாதிபதி

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முடியுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றை தயாரிக்கும் பொறுப்பு பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

செயலணி விடயத் துறைகளுக்கு ஏற்ப பகுதியாக பிரிந்து இலக்குமயப்பட்ட புதிய பொருளாதார திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மே 11 முதல் மீண்டும் வழமைநிலைக்கு கொண்டுவரப்படும் இயல்பு வாழ்க்கையுடன் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி செயலணியுடன் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். 

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக உள்ள ஆடை மற்றும் சுற்றுலா கைத்தொழிலை புதிய வடிவில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொவிட் 19 வைரஸை ஒழித்து எழுந்துள்ள நாடுகளை இலக்காகக் கொண்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வர முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 ஒழிப்புக்கு இலங்கை மேற்கொண்ட முறையான நடவடிக்கைகளை ஏனைய நாடுகளுக்கு எடுத்துக்கூறி சுதேச மற்றும் மேலைத்தேய சிகிச்சைக்காக சுற்றுலா பயணிகளை கவர்ந்தீர்க்க முடியும்.

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார சான்றிதழுடன் வீசாக்களை வழங்கி அதிகம் செலவிடக்கூடிய இயலுமையுள்ள சுற்றுலா பயணிகளை அழைத்துவர திட்டமிட வேண்டும்.

சில நாடுகளில் சுற்றுலா பயணிகள் குளிர் காலத்தில் நீண்ட காலத்திற்கு வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். அத்தகைய சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு நீண்ட கால சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து சுற்றுலா கைத்தொழிலை விரைவாக கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுதேச சுற்றுலா வியாபாரத்தை ஊக்குவிப்பதற்கு அதிக கவனம் செலுத்தி ஹோட்டல் கைத்தொழிலை பாதுகாக்க கூடிய வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

துறைமுக நகரம் மற்றும் ஹம்பந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுவருவதற்குள்ள வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு கடனுக்கு பதிலாக முதலீட்டு வாய்ப்புகளுக்கு திட்டமிடும் பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பல புதிய ஆக்கங்கள் நாட்டில் உருவாகியுள்ளன. அவற்றை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தி புதிய உற்பத்திகளை ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் நோக்கங்களை அடைந்துகொள்ளும் வகையில் புதிய தொலை நோக்கின் அடிப்படையில் செயற்படுவதற்கு ஜனாதிபதி செயலணிக்கு பலம் உள்ளதாக அதன் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

புதிய வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கும் தற்போது நடத்திச்செல்லப்படும் பாரிய, நடுத்தர, சிறிய அளவிலான வர்த்தகர்களுக்கு அரசாங்கத்தின் முழுமையான உதவியை பெற்றுக்கொடுக்க தனது செயலணி தலையிடும் என்றும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

மே 11 முதல் தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களை மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும் கைத்தொழில் நடவடிக்கைகளை தமது தேவையின் படி நடத்திச் செல்ல முடியும்.

அரச அல்லது தனியார் துறை தொழிலில் ஈடுபட்டுள்ள எவருக்கும் தொழில் வாய்ப்புகள் தவறிப்போக இடமளிக்காது நாட்டை முன்கொண்டு செல்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

உயர் கல்விக்காக மாணவர்கள் பெருமளவில் உலகின் பல நாடுகளுக்கு சென்றுள்ளமை நாட்டுக்கு வருகைதருவதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதன் மூலம் நாட்டிலிருந்து வெளிச்செல்லும் அந்நியச் செலாவணி அதிகமாகும். உயர் கல்வி நிறுவனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை விரிவாக்கி அப்பணத்தை நாட்டில் வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை சம்பாதிக்க முடியும் என்றும் ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.

ஓவ்வொரு வருடமும் மருந்துப்பொருள் இறக்குமதிக்காக பெருமளவு அந்நியச் செலாவணி செலவிடப்படுகிறது. இவற்றில் பெரும்பாலான மருந்துகளை நாட்டில் உற்பத்தி செய்ய முடியும். அதற்குத் தேவையான பின்புலத்தை விரைவில் தயாரிக்கும் பொறுப்பும் ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறைக்கு தேவையான பல விதை வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள், முன்னணி வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

No comments

Powered by Blogger.